Friday, July 25, 2014

தினமணி விமர்சனம் -கரு ஆறுமுகத்தமிழன்


தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக் கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப் போய்விட்ட இன்றைய காலம் வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது "கொற்றவை'. 

சிலப்பதிகாரத்தின் மையம், தீதிலா வடமீனின் திறமுடைய கண்ணகி. "கொற்றவை'யின் மையம், பெற்றம் புரந்தும் புதைத்தும் தெய்வமாக நிலைபெற்றிருக்கிற கொற்றவை. 

"கொற்றவை' கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது. 

கதையை வேறுபட்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு பார்வைகளின் ஊடாக நகர்த்திச் செல்கிறது. உரைநடை வடிவத்தில் இருக்கிறதென்று பெயரே ஒழிய, பாவியமாகவே எழுதப்பட்டிருப்பதுபோன்ற உளமயக்கை உருவாக்குகிறது. திசைச் சொற்களின் துணையின்றி முற்றாகத் தமிழில் இயல்கிறது இக்காப்பியம். 

தன்னேரில்லாத் தமிழின் வளமைக்கும் அழகுக்கும் மீண்டும் ஒரு சான்று இது. 

பெண்களைப் பேசுகிறது "கொற்றவை'. பெண்ணின் பாடுகளை, கேட்கச் செவிதருவாரில்லாமல் தங்கள் உள்ளத்தைத் தங்களுக்குள்ளேயே ஒளித்துக் கொள்கிற அவர்களுடைய உள்ளொடுக்கத்தை, கடலன்ன காமம் உழந்தும் மடலேறாத் தொல்பெருந்தகைமையை, துன்பங்கள் அனைத்தையும் தாய்மையினால் வென்று மேற்செல்கிற தெய்வ நிலையைப் பேசுகிறது கொற்றவை. 

அன்னையர் பிறக்க, அன்னையர் மறைய, தாய்மை மட்டும் அழியாமல் வாழ்கிறது என்பதுதான் கொற்றவையின் காப்பிய மையம். 

தெய்வங்களின் தோற்றத்துக்குப் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்கிற காரணங்கள் கற்பிக்கிறார் ஜெயமோகன். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்' முன்தோன்றிய மூதன்னை ஒருத்தி அவளுடைய சமூகத்தால் கொற்றவைத் தெய்வமாக்கப்படுகிறாள். அவளுடைய வழித்தோன்றல்களான முக்கண்ணன், திருமால், முக்கண்ணனின் மக்களான ஆனைமுகன், ஆறுமுகன் என்று நினைக்கத்தக்க பெருவாழ்வு வாழ்ந்த முன்னோர்கள் தெய்வங்களாகிறார்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்களைத் தெய்வமாக்கும் இந்த மரபுதான் கண்ணகியையும் தெய்வமாக்குகிறது. 

தமிழ்மரபின் தெய்வங்கள், மனிதர்கள் கால்பாவி நடக்கிற தரையிலிருந்து, அத்தரையில் கூடியும் முரண்பட்டும் அவர்கள் வாழ்கிற சமூகங்களிலிருந்தே கிளம்பியிருக்கிறார்களேயன்றி விண்ணிலிருந்து இறங்கி வந்துவிடவில்லை என்று தெய்வக்குழப்பம் கொண்ட மாற்று மரபுகளுக்குத் தாய்மையை அடையாளம் காட்டிச் சொல்கிறது "கொற்றவை'. 

மணிமேகலையும், காப்பியப் புனைஞர்களான சாத்தனாரும் இளங்கோவடிகளும் "கொற்றவை'யில் கதைமாந்தர்களாக உலவுகிறார்கள். தமிழ் வழிபாட்டு மரபின் அடிப்படையில், தென்தமிழ்ப் பாவைக்குக் காப்பியம் செய்த இளங்கோ சபரணமலையில் பெருநிலை பெற்று ஐயப்பன் எனத் தெய்வமாகிறார். 

ஜெயமோகனின் புனைவாற்றல் காற்றின் விரைவு. அறியாக் கடலாழத்தில் அது மீனின் சிறகலைப்பு. தர்க்கத்தின் அடர்காடுகளில் அது தாவும் மானின் குளம்பு. உள எழுச்சியில் அது விண்ணளக்கும் பருந்து. 

கொற்றவை - ஜெயமோகன், பக்.600 ரூ.280, தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, சென்னை -600 014

No comments:

Post a Comment