Monday, April 18, 2016

பிரதீப் சுரேஷ்



அன்புடன் ஆசிரியருக்கு
 இம்முறை  வாசிக்கத் தொடங்கியபோதே கொற்றவை  என்னை  அடித்துச் சென்றுவிடக் கூடாது  என்ற  உறுதி  கொண்டிருந்தேன். இருந்தும் "அறியமுடியாமையின் நிறம் நீலம்  என அவர்கள்  அறிந்திருந்தார்கள்" என்பதைத் தவிர  எக்குறிப்பும் எடுக்க கொற்றவை  என்னை அனுமதிக்கவில்லை.   முதல் முறை  படித்தபோது பழம்பாடல் சொன்னது  கடக்க  முடியாத  ஒரு பாரத்தை மனதில்  இறக்கியது. இம்முறை உத்வேகமும் எழுச்சியும் தருவதாக  "நீர்" கடந்தது. அன்னையும் ஆடல்வல்லானும் மாலும் ஆறுமுகனும் ஆணைமுகனும் அறிமுகமாகி பழந்தமிழரின் வாழ்வும்  நம்பிக்கையும்  பெருஞ்சித்திரமாக கண்முன்  எழுகையில்  விம்மும் நெஞ்சை கட்டுப்படுத்த முடியவில்லை.
பழம்பாடல்  முடிந்து  பாணர் பாடத் தொடங்கும்  போது  அதுவரை  வகுத்தளிக்கப்பட்ட சித்திரம் ஆழத்தில்  உறைய  அதன்மேல்  பிறக்கின்றனர் கண்ணகையும் வேல்நெடுங்கண்ணியும். சிலம்பணி விழாவை படபடத்து நோக்கும்   வலசைப் பறவை காலம்  கடந்து  எழப்போகும் எரியையும் காணும்  தருணத்தில்  உடல் சிலிர்த்தது. கோவலன் எண்ணுதல் விடுத்து  யாழில்  அவன் விடுதலையை காணும் அத்தியாயமே அதன்பின்னும் அவனை வகுத்துக் கொள்ளப் போதுமானது. மாதவிக்கும் கோவலனுக்கும் இடையேயான இறுதி ஊடல் யார் வெல்வது  என்ற என்றுமுள்ள கவித்துவத்தை மீண்டும்  அழகுடனும் துயருடனும் சொல்லிச் செல்கிறது. ஆற்றியிருக்கும் கண்ணகிக்கு தேவந்தியில் பிறந்து  வரும் ஆதிமந்தி தொடங்கி  அனைத்துப் பெண்களும்  அழியாப் பெருந்துயரை கோடிட்டு மறைகின்றனர். மன்னிக்காமலும் மறுக்காமலும் கோவலனை அவள்  ஏற்கும்  கணத்தில்  எனக்கேனோ ஒரு உவகை  எழுந்தது. காற்றினை தழுவ மட்டும்  அனுமதிக்கும்  பாறை.
குலக்கதைகளின் வழியாக நீலியின் சொற்கள்  நினைவிலேற்றுகின்றன அவள் குருதி கொள் கொற்றவை என. அனைத்தையும் அவளுக்கு  விலக்கினாலும் எம்மன்றிலும் நுழையாமல்  கனத்த  வேர் புடைப்புகளில்  எல்லையில்  அமர்கிறாள் நீலி. நீரற மகள் கூடிய  வெண்ணி விஞ்சையன் தீண்டிய மருதி வேலன் சிறையெடுத்த வல்லி குழலோன் காத்திருக்கும் நப்பின்னை  மட்கித் திரியும் முது எயினி முதிரக் காத்திருக்கும்  இள எயினி என இவர்கள்  கண்ணகியின்  மனதில்  உருவாக்குபவற்றை மாதவியின் அதிர்ச்சியில் காண  முடிகிறது. நீலிக்கும் கண்ணகிக்கும் நடக்கும்  கூரிய  உரையாடல்கள் தீண்டும்  வேல்முனைகளே. உரையாடல்களை விட  அவர்கள்  விழி தொட்டு மீளும் இடங்களே மேலும்  சிலிர்க்கச் செய்கின்றன. ஒளியால்  ஆழத்தை  நிரப்பலாம் மகனே  எனும்  கௌதமிக்கு புத்தனின்  பதிலென்ன? துறவு  பூண்ட  மணாளனை திரும்பி  நோக்காத அந்த  முது மறையவள் கூற விழைவதென்ன? அன்பு மட்டுமே  இருக்க இயலும்  என மெல்லிய  குரலில்  என்று  அந்த முது கிழவி ஏன் சொல்கிறாள்? உங்கள்  கற்பு அவர்கள்  பரத்தைமை என்பது ஒரு கணம்  உண்மையாகத் தோன்றுவதேன்? எண்ணற்ற  கேள்விகளையும் எழுச்சிகளையும் எழுப்பிவிட்டு எரிநோக்கி நகர்கிறது  நிலம்.
index5
காப்பியம்  கூறிய காதைகளாக விரிகிறது எரி. அறம் அழிந்து  மறம்  ஓங்குவதை அவள்  ஏற்கனவே  அறிந்துவிட்டாளா? அவளை மோதி உடைத்து  உள் நுழைய முடியாதென்று அறிந்து  அழுது  அவளுள்  அடைக்கலம்  கொள்கிறான்  கோவலன். கணம் கணமென பகையும்  வஞ்சமும் கரவும் வளர்வதை அறியாதவனாய் பொலங்கொள் தெரு நுழைந்து  மானுடத்தின்  வீழ்ச்சியை அறிந்து  ஏதும்  ஆற்ற முடியாதவனாய்  இறக்கிறான். கோவலனின் இறப்பு  கொற்றவை  எழ ஒரு நிமித்தம்  மட்டுமா? அன்னையின்  கருவறை  நுழையும்  குழந்தை  என "அம்மா" என அலறி இறக்கிறான் பாண்டியன். அக்கணம்  அவனை அறிந்து உயிர்விடும் பாண்டியன்  மாதேவி கண்ணகியினும் உயர்ந்தவளாய் தோன்றுகிறாள். உயிர் விட்டதனால் அல்ல  தகுதியானவனுக்கே உயிர்விடுவதால்.
வான் நோக்குகையில் ஒரு வகை நிறைவான  வெறுமை. உரை வகுப்பவையும் அதையே செய்கின்றன. நீரில் சிலிர்க்க  வைக்கும்  பெருங்கனவாகத் தொடங்கி எரி எழுகையில்  அருகிருக்கும் உண்மையென எண்ண வைத்த  அனைத்தும்  அமைதி  கொண்டு  கதைகளாக வானில்  அடங்குகின்றன. நான்கு  பெருமதங்களும் ஒடுங்கிய மக்களும்  உண்மை  விழைவோரும் ஒருங்கே  ஏத்தும் திருமாபத்தினியாக பேருருக்  கொள்கிறாள் அறிவமர்ச்செல்வி. கண்முன் கண்ட  பேரரறத்தாள் கடவுளாவதை மனம் ஆர்ப்பரித்தும் துள்ளிக் குதித்தும் ஏற்கிறது. மணிமேகலை  இளங்கோவடிகளை சந்திப்பது  உள எழுச்சி கொள்ளச் செய்கிறது. அனைத்து  தர்மங்களும் ஒருங்கே  ஏற்கும்  பேரரறத்தாளாகவும் செங்கழல் கொற்றவையாகவும் பேரன்னையாகவும் அவள் முடிவிலா  முகங்கள்  எழுந்தபடியே உள்ளன. வான்கோய்ஸும் அன்னையையே காண்கிறான். காந்தியும்  அவளையே கண்டிருக்கிறார்.
இருபது  வருடங்கள்  முன் விழுந்து உங்களுள் முளைத்திருக்கிறது இவ்விதை. ஒவ்வொரு  வரியிலும் தெரியும்  உழைப்பு  கண்களுக்குத் தெரிந்தாலும்  அதனை வியக்கும்  அளவுக்கு  என் வாசிப்பு  வளரவில்லை. அடுத்த  முறை வாசிக்கும்  போது இக்குறையும்  நீங்கியிருக்கும்.தனித்தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு தீவிர உரையாடலும் உங்கள்  மனம்  உருவகித்திருந்த  அன்னையும் ஒருங்கே  வெளிப்படும் காப்பியமாக கொற்றவையை நான்  புரிந்து  கொள்கிறேன்.உங்கள்  சமர்ப்பணம்  பெருமைக்குரியது
அன்புடன்
சுரேஷ்