Friday, July 25, 2014

விக்கி பதிவு

ட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொற்றவை ஜெயமோகன் எழுதிய ஏழாவது நாவல். இதை ஆசிரியர் புதுக்காப்பியம் என்று சொல்கிறார். வசன நடையில் கவித்துவத்துடன் அமைந்துள்ளது. ஏறத்தாழ 600 பக்கம் கொண்டது. 2005 ல் இந்நாவல் வெளிவந்தது. தமிழினி பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.

அமைப்பு[தொகு]

சிலப்பதிகாரத்தில் உள்ள கண்ணகியின் கதையின் விரிவான மறு படைப்பாக அமைந்துள்ள இந்நாவல் தூயதமிழில் சிலப்பதிகாரத்தில் உள்ள சமஸ்கிருதச் சொற்கள் கூடக் களையப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு புதியவகை தொன்மத்தை உருவாக்குவதாகக் கூறும் இந்த நாவல், நீர், நிலம், காற்று, எரி, வானம் என்று ஐந்து பருப்பொருட்களை தலைப்புகளாகக் கொண்டு ஐந்து பகுதிகளாக பிரிக்கபப்ட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நீர்[தொகு]

நீர் பகுதி 'பழம்பாடல் சொன்னது' என்று சொல்லப்படுகிறது. 12 பாடல்கள் கொண்டது இது. நீர் பகுதி தொன்மைக்காலம் முதல் எப்படி தமிழ் மக்களும் உருவாகி வந்தார்கள் என்று சொல்லிக் காட்டுகிறது. கடல்கொண்ட தென்னாடான குமரிக்கண்டத்தில் இப்பகுதி நிகழ்கிறது. தமிழ் மொழியும் சிவன் ,விஷ்ணு, முருகன், பிள்ளையார் போன்ற தெய்வங்களும் உருவாகி வருகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னால் போராச்சி என்ற தாய்தெய்வம் உருவாகிறது.அதுவே மூதாதை தெய்வம்.
தமிழ்நிலம் கடல்கொள்ள நிலம் சுருங்கிச் சுருங்கி வருகிறது. பேராச்சியின் வடிவில் குமரி அன்னையை மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். தென்மதுரையும் கபாடபுரமும் உருவாகி வருகின்றன. குமரி அன்னையின் உடலில் உள்ள ஒவ்வொரு நகையையும் ஒவ்வொரு குலம் தங்கள் அடையாளமாக வழிபடுகிறது. பேராச்சியின் வலதுகால் சிலம்பு மன்னர் குலத்துக்கும் இடதுகால் சிலம்பு வணிகர் குலத்துக்கும் உரிமை உடையதாக இருக்கிறது. கடைசியில் கபாடபுரமும் கடல் கொள்ளப்படுகையில் குமரியன்னையின் சிலை கடலில் மூழ்குகிறது.மக்கள் மேலே வந்து தங்கும் இடத்தில் மதுரை உருவாகிறது. கிழக்கே புகார் உருவாகி வருகிறது. குலங்கள் தமிழ் நிலம் முழுக்க பரவித் தழைக்கின்றன.

காற்று[தொகு]

அதன்பின் "காற்று" பகுதி. இது 'பாணர் பாடியது' என்று சொல்லப்படுகிறது. 24 பாடல்கள் கொண்டது இப்பகுதி. இப் பகுதியில் "நீர்" பகுதியில் சொல்லப்பட்ட கதைகளை ஒரு பாணன் கண்ணகியின் தந்தையான பெருவணிகன் மாசாத்துவனிடம் பாடிக்காட்டுக்கிறான். அதன்பின் கண்ணகி பிறந்ததும் அவளுக்கு சிலம்பணி விழா நடைபெற்றதும் சொல்லப்படுகின்றன. பாண்டியன் மனவி கோப்பெருந்தேவியின் பிறப்பும் சொல்லப்படுகிறது. பின் கோவலன் கண்ணகியை விட்டுப்பிரிந்து மாதவியுடன் சென்று வாழ்ந்த கதையும் கண்ணகி ஆற்றியிருந்த கதையும் சொல்லபப்டுகின்றன.

நிலம்[தொகு]

மூன்றாம் பகுதி "நிலம்". இது 'குலக்கதை சொன்னது' சென்று சொல்லப்படுகிறது. 48 பாடல்கள் கொண்ட நீளமான பகுதி இது. கண்ணகி கோவலனுடன் மதுரைக்குச் செல்லும் பயணம்தான் இது. இப்பகுதி ஐவகை நிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நெய்தல் மருதம் குறிஞ்சி முல்லை பாலை என்ற வரிசையில் எல்லாவகையான நிலங்கள் வழியாகவும் கண்ணகி செல்கிறாள். தமிழ்நாட்டின் வாழ்க்கை ஏராளமான காட்சிகள் வழியாகவும் துணைக்கதைகள் வழியாகவும் சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி என்ற கதாபாத்திரம் இந்த நாவலில் உண்மையில் நீலி என்ற தெய்வம் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நீலகேசியில் உள்ள நீலி. அவள் கண்ணகிக்கு கதைகளில் உள்ள சொல்லப்படாத விஷயங்களைச் சொல்கிறாள்.

எரி[தொகு]

நான்காம் பகுதி "எரி". இது 'காப்பியம் கூறியது'. 24 பாடல்கள் கொண்டது இது. இதில் கண்ணகி மதுரை புகுந்து கோவலன் கொல்லப்பட கோபம் கொண்டு பாண்டியனிடம் நீதி கேட்ட கதை சொல்லப்படுகிறது. அக்கால மதுரையின் ஒரு சமூகச்சித்திரம் மூலம் மதுரை எரிந்தது ஒரு மக்கள் எழுச்சியே என்று நாவல் காட்டுகிறது

வான்[தொகு]

ஐந்தாம் பகுதி "வான்". இது 'உரை வகுத்தது' என்று சொல்லப்படுகிறது. 35 பாடல்கள் கொண்டது. கண்ணகி தெய்வமானதும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்ததும் சொல்லப்படுகிறது. கண்ணகி கோயிலின் கதை நூற்றாண்டுகள் வழியாக கொண்டு வரப்பட்டு இன்றைய கேரளத்துக் கொடுங்கல்லூர் வரை வருகிறது.சமகாலத்தில் கன்யாகுமரியில் கதைசொல்லியின் சொற்களில் கதை முடிகிறது.
நூற்றுக்கணக்கான மாயக்கதைகளும் குலக்கதைகளும் துணைநிகழ்ச்சிகளும் இதில் உள்ளன. மன எழுச்சியூட்டும் ஏராளமான புனைவுத் தருணங்கள் கொண்டது கொற்றவை. தமிழர்களின் ஒட்டுமொத்த பண்பாட்டு வரலாற்றையே தாய்தெய்வ மரபைச்சார்ந்து எழுதிப்பார்த்திருக்கும் ஒரு படைப்பு என்று இதைச் சொல்லலாம்.விக்கி

No comments:

Post a Comment