Thursday, December 1, 2016

கொற்றவையின் நீலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் நலமா? தங்களுடைய சிங்கப்பூர் பல்கலைக்கழக அனுபவம் நன்றாக அமைய எனது வாழ்த்துக்கள். நான் தங்களை வளைகுடா பகுதியில் பாரதி தமிழ்சங்கம் உரையாற்றிய பொழுது சந்தித்து அறம் புத்தகத்தில் கையெழுத்து பெற்றது ஓரு சிறந்த அனுபவம்.

அப்பொழுது சற்று தயக்கம் தங்களுடன் பேச ஆனால் தாங்கள் தயங்காமல் நட்புடன் பேச முயன்றது என் மனதில் ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தியது.
கொற்றவை என் மனதில் ஏற்படுத்திய எண்ணங்கள் என்னால் இங்கு சொல்லமுடியவில்லை அனால் இங்கு crater lake Oregon சென்ற பொழுது அத நீலம் மனதில் ஏற்படுத்திய குதாகலம் என்றும் மனதின் ஓரத்தில் எண்ணங்களை உரசிகொண்டிருக்கும், இதற்கு முன் நான்கு முறை சென்றுள்ளேன். அனால் இந்த தடவை அந்த ஏரியை கொற்றவையின் வழியாக அந்த எரியின் பிம்பம் மனதில் மேலும் ஒரு அடிமனதில் சென்று சேர்ந்திருக்கும்.


கொற்றவை படித்தால் என் இரண்டாவது மகன் யோகித்துக்கு அவன் பள்ளிக்கூட முன்றாம் வகுப்பு வாய் மொழி தேர்வுக்கு கொடுங்காளூர் பகவதி திருவிழா பற்றி பள்ளியில் சொல்ல கற்றுத்தந்தது பேர் மகிழ்ச்சியை தந்தது.
நான் அமெரிக்காவில் 6 மாதங்கள் தனியே வேலை செய்கிறேன் என் குடும்பம் சென்னையல் வசிக்கிறது, இன்னும் இரண்டு மாதங்களில் திரும்பிவிடுவேன்.. இரண்டு வரிகள் தான் ஆங்கிலத்தில் சொல்லி கொடுத்தேன் அனால் அதை அவன் என்னை கேட்ட பல கேள்விகளும் அதற்கு நான் சொன்ன பதில்களும் இலக்கிய வாசிப்பு இன்றி முடியாது.

கொற்றவை படிக்க படிக்க பல சந்தேகங்கள், ஐயப்பன் தான் இளங்கோவடிகளா? இது தாங்கள் கண்டிப்பாக கற்பனையில் எழுதியிருக்க முடியாது. இது ஒரு ஸ்தலபுரணமா? அல்லது எதாவது ஆராயிச்சி குறிப்புகள் உள்ளதா. சபரி மலை பயணம் ஒரு
சாக்கிய முறையா, ஆகிய பலே கேள்விகள் மனதில் தோன்றின. இத்தகைய சுழலில் இக்கேள்விகள் தேவையில்லை என்றால் பதில் சொல்ல தேவையில்லை.

தங்களுடைய படிப்புகளை வாசிப்பதே ஒரு இனிய நிகழ்வு. அதற்கு நாங்கள் என்றும் கடமை பட்டுள்ளோம்.

என்றும் அன்புடன்,
ஆனந்த்

வெள்ளை யானையும் கொற்றவையும் சுசித்ரா
ஜூலையில் இந்தியா வந்த போதுகொற்றவைநாவலை வாசிக்க ஆரம்பித்தேன். “நீர்பகுதி முடிப்பதற்குள் கிளம்ப நேர்ந்தது. விமானத்தில் வாசிக்கலாம் என்று என் மேசை மீது வைத்து விட்டு மற்றதை எல்லாம் மூட்டைக்கட்ட, அந்த புத்தகத்தை மட்டும் பையில் வைக்க விட்டுவிட்டேன். விமானம் ஏறியதும் தான் தெரிந்தது. அம்மாவை புத்தகத்தை தபாலில் அனுப்பச்சொல்லி, அது வருவதற்குள் வாசிப்போமே என்று இந்த முறை வாங்கிச்சென்றவெள்ளையானையை எடுத்தேன். “வெள்ளையானையைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் அதை வரலாற்று எழுத்தாக, புராண எழுத்தாக, “கொற்றவையுடன் இங்கு ஒப்பிட முடியும் என்று நினைக்கிறேன்.


ஒரு வகையில்வெள்ளையானையும் புராணக்கதை. காத்தவராயன்அயோத்திதாசர்புராண கதாபாத்திரமாகவே, சற்று larger than life ஆக வருகிறார். ஏய்டன், கிரேக்க மரபில் சாபக்கேடுடன் அலையும் ஒரு ஆண்டி-ஹீரோ. மரியா, கொற்றவை ஸ்வரூபம். கதை நிகழும் காலம் அண்மையில் என்றாலும், அது உண்மை மனிதர்களைக்கொண்டு, உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது என்றாலும், அக்கதையில் ஒரு புராணத்தன்மையை என்னால் பிரித்தெடுக்க முடியவில்லை. ஒரு இடத்தில் ஏய்டன் அவன் சந்திக்கும் தொழிலாளிகளின் கண்களை மீன் போல மூடாவிழிகளாக காண்கிறான். அந்த உவமைகொற்றவையிலும் வருகிறது. அதை நான் வரலாற்றின் கண்களென புரிந்து கொண்டேன். காலமெல்லாம் கண் விழித்து வெறிக்கும் அந்த விழிகளின் தீவிரமும் ரௌத்திரமும் சத்தியத்தின், எந்நிலையிலும் இணங்கா உறுதியின் பார்வை. வரலாறை வென்றவர்களே எழுதலாம். ஆனால் எழுதப்படாத உண்மையெல்லாம் கண்விழித்துப் பார்ப்பதை எவராலும் தடுக்கமுடியாது. தொழிலாளிகளின் கண்களை பார்க்கும் அந்த கணத்தில் ஏய்டன்கொற்றவையில் வருவது போல கடல் கொண்டு சென்ற உலகங்களில் நீந்தி வரும் மீன்களையே காண்கிறான். கண்ணையையும் மீன்விழியையும் ரேணுகையையும் மற்றும் நிலம் தோறும் பூத்த ஆயிரம் ஆயிரம் விழித்த கண்களையும் காண்கிறான். அவனால் வரலாற்றில் இருந்து தப்பிக்கவே முடியாது. நம்மாலும் கூட.


அயோத்திதாசரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவெள்ளையானைதூண்டியது. உங்கள் தளம் மிகவும் உதவியாக இருந்தது. அவரை 19-ஆம் நூற்றாண்டின் தலித் தலைவர் ஒருவர் என்றே அறிந்திருந்தேன். காந்தியைப் போல, அம்பேத்காரைப் போல, விவேகானந்தரைப் போல, ஒரு அறிஞராக, அறிவியக்கத்தின் தொடக்கப்புள்ளியாக, மாபுருஷனாக இன்று உணர்கிறேன். அவரை வாசித்துக்கொண்டிருக்கிறேன். “இந்திர தேச சரித்திரம்பற்றிஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறுஎன்ற உங்கள் கட்டுரையின் மூலம் அறிந்துக்கொண்டேன். அக்கட்டுரையில் நீங்கள் விவரித்த இரவிபுத்தூர் தலைகீழ் தெய்வத்தின் கதை அளித்த வரலாற்றுச்சித்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. என்கொற்றவைவாசிப்பை இந்தக் கட்டுரை, இக்கதை, மெருகேற்றியது. சொற்களை திரித்துத் திரித்து அவை மூலம் கட்டமைத்த வரலாறாகவும் கொற்றவை விரிகிறது. “வான்பகுதியின் வரலாற்றாக்கமும் புராணமாக்கலும் இந்தப்பார்வையின் நீட்சியே.

சுசித்ரா ராமச்சந்திரன்

கொற்றவையின் தொன்மங்கள்

அன்புள்ள ஜெ.,

கொற்றவை வாசித்துக்கொண்டிருக்கையில், எனக்கு வரலாற்று உணர்வு என்று ஒன்று  முதன்முதலில் உருவான தருணத்தை நினைத்து நினைத்து வியந்தேன். எனக்கு ஐந்து, ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் சென்னையில் வசித்து வந்தோம். விடுமுறை நாட்களில் பத்து நாள் மதுரைக்கு ரயிலேறி வருவது வழக்கம். என் தந்தைவழியில் சொந்த ஊர் மதுரை. அப்படி ஒரு முறை வைகை ரயிலில் வரும் போது அம்மா கண்ணகி கதை சொன்னாள். கணவனை தீர விசாரிக்காமல் அநியாயமாக கொன்ற நெடுஞ்செழியன் அவையில் சிலம்பெறிந்து நீதிகோரி தலைவிரித்து நிற்கும் கண்ணகி, தன் முலையறுத்துவீசி மதுரையை எரிக்கிறாள். என் ஐந்து வயது கண் முன்னால் உருவமற்ற மாடங்கள் எரிந்து சரிந்தன.


“அப்புறம் மதுரைக்கு என்ன ஆச்சு?” என்று அம்மாவிடம் நான் கேட்டேன்.”அப்புறம் என்ன? திருப்பி கட்டிருப்பா,” என்றாள் அம்மா. “எரிஞ்சு போன ஊரு மேலேவா?” என்றேன் நான். அம்மா ‘உம்’ என்றாள். “அப்போ மதுரைக்கு அடியில இன்னொரு மதுரை இருக்கா? அதுக்கு அடியில? அதுக்கும் அடியில? வந்துண்டே இருக்குமா?”


அம்மாவுக்கு அன்று நான் உணர்ந்த அளவில்லா வியப்பு புரியவில்லை. ஒரு நகரத்தை எரிக்க முடியும், அந்த எரித்த நகர் மீது மற்றொரு நகரை கட்ட முடியும் என்ற அந்த கருத்து எனக்கு வரலாற்றின் கதவுகளை வீசித்திருந்தது. காலமெல்லாம் ஊறிப்பெறுகி நம்மை அடையும் வரலாற்றின் குளிர்காற்றை அன்றே முதலில் உணர்ந்தேன். அதன் பிறகு நான் மதுரை மண்ணை, நாங்கள் வாழ்ந்த வீடு இருந்த பகுதியை, கோயிலை, அதை சுற்றிய ஆடி, சித்திரை, மாசி வீதிகளை காணும்போதெல்லாம் என் எண்ணங்கள் மண்ணிற்கு அடியிலேயே அடக்கி வைத்த விம்மலாக நிற்பதை உணர்ந்துள்ளேன். நிலத்தை ஒரு மிகப்பெரும் வாள் கொண்டு ஆழத்தின் அடிவரை சொருகி, குறுக்காக வெட்டி, பிளந்து எடுத்துப்பார்த்தால் எத்தனையெத்தனை  நிலங்கள் அடுக்கடுக்காக புதைந்து கிடைக்கும்! நாம் வாழும் இந்நிலம், இத்தருணம், எத்தனை மனிதர்களின் கனவுகள் மீது கட்டப்பட்டுள்ள சிம்மாசனம். கையை குறுக்காக கிழித்து சதையை நெம்பினால்  தோல், தசை, நரம்பு, குருதி, எலும்பு என்று அடுக்குகள் தெரிவது போல காலத்தையும் நிலத்தையும் கிழித்துக் காணவே என் உள்ளம் துடித்தது. பள்ளியில் வரலாற்றை நான் மிகவும் விரும்பிப் படித்தேன், ஆனால் அது போதவில்லை. வரலாறு என்ற சொல் என்னுள் உருவாக்கும் முதல் சித்திரம், என் காலடியில் புதைந்துள்ள கோவலனின் எலும்புகளும் எரியுண்ட அம்மதுரை நகரின் மாடங்களும் தான்.


பல வருடங்கள் பிந்தி, என் பதின் பருவத்தில் உயிரியல் மூலம் வரலாற்றை பற்றிய அடுத்த திறப்பு ஏற்பட்டது – நம் மரபணுக்களும் ஒரு வகையில் வரலாற்றுச்சுவடுகள் தான் என்று. மனித வரலாற்றின் தொடக்கத்துடன், ஏன், பூமியில் உயிர் உருவான முதல் தருணத்துடன் அச்சரடு என்னை இணைத்தது என்று புரிந்த போது குதூகலமாகவும் வியப்பாகவும் இருந்தது. மனிதனையும் சேர்த்து எல்லா உயிருள்ளவைகளும் வரலாறு தாங்கி வருபவை, வரலாற்றின் அசைவுகளால் உருவாக்கப்படுபவை, அந்த வரலாறு, எழுத்து பிறக்கும் முன்பே நம் மரபணுக்களில் எழுதப்பட்டவை என்று விளங்கியது. நம் முகங்களும் மூக்கின் நீளமும் காதின் அகலமும் முடியின் சுருளும் தோலின் நிறமும் வரலாற்றின் பதிவேற்றிய குரல். நாம் வாழ்ந்து வந்த சூழலையும் நிலத்தையும் நாம் உண்ட உணவையும் புணர்ந்த மனிதர்களையும் குறிப்பவை அவை. ஒவ்வொரு மனிதனும் அதுவரை நிகழ்ந்த ஒட்டுமொத்த வரலாற்றின் வடிகட்டல். இதை நான் நினைக்கும் கணம் தோறும் சொல்லிழுக்கும் வியப்பில் ஆழ்த்திவிடுகிறேன்.


“கொற்றவை”யில் நான் கண்ட வரலாற்றுச்சித்திரம் இவ்விரண்டையும் அடக்கி, கடந்து விரியும் மூன்றாம் வகை. ஆழ்மனப்பதிவுகளையும் படிமங்களையும் சார்ந்தது. மனிதனின் ஆழ்மனம் ஒரு வரலாற்றுக்களஞ்சியமாக அறிமுகம் செய்கிறது. ஆழ்மனப்படிமங்கள் மூலமாக வரலாற்றை காணும்போது அது காலத்தையும் தூரத்தையும் ஒரு பொருட்டென்றே கருதாமல், இன்று, இப்போது, நமக்கு மட்டுமான, நாம் என்றும் அறிந்து என்றோ மறந்த  ஒரு வரலாறாக நம்மை வந்தடைகிறது. எல்லா காட்சிகளும் எங்கோ, எப்போது கண்டவை. நன்கு தெரிந்தவை. அணுக்கமானவை. அவை நான் வாழும் நிலப்பரப்பையும், நான் பருகும் நீரையும், நான் காணும் மரங்களையும் மலர்களையும் மாந்தரையும் சார்ந்தவை. என்னால் நிலத்தை திருப்பிப்போட்டு புதைந்த உலகங்களுக்குச் செல்ல முடியாது. என்னால் என் மரபணுவினுள் புகுந்து இடிபாடுகளை எச்சங்களை கொண்டு நான் உருவாகிவந்த கதையை மறுகட்டமைப்பு செய்து காண முடியாது. ஆனால் என் நிலத்தோடும், என் உடலோடும் உயிரோடும் மரபோடும் பிணைந்துள்ள என் ஆழ்மனம், அதில் நிழல்போல புகைபோல எழுந்து கலையும் சித்திரங்கள், அவை சொல்லும் கதை ஒன்றுண்டு, அந்தக் கதையை கேள், அந்நாடகம் விரிவதை காண் என்று “கொற்றவை” மறுபடியும் மறுபடியும் கூவுகிறது.

இப்படி ஒரு மாற்று வரலாற்றுச்சித்திரம் (புராணச்சித்திரம் என்று சொல்லலாமா?) சாத்தியம் என்று நிறுவி,தமிழ்மனத்தின் வரலாற்றை இம்முறைகொண்டு பெரும் காப்பியமாக உருவகித்து, வாசகர் மனத்தை அவர்கள் ஆழ்மனம், அவர்கள் சுயவரலாறு நோக்கி செலுத்தியதே “கொற்றவை”யின் பெரும்சாதனையாக எனக்குப்படுகிறது. வேறு விதத்தில் சொன்னால், கோவலனின் எலும்பு புதைந்த கண்ணகி எரித்த மதுரை, நிலத்திலும் மரபிலும் மட்டும் புதைந்திருக்கவில்லை. என் ஆழ்மனத்திலும் அந்நகரின் வேர்கள் உள்ளன. “மதுரைக்கு என்ன ஆச்சு?” என்ற என் கேள்வி நிலமதுரையை பற்றி அல்ல, சீட்டுக்களால் அடுக்கப்பட்டதுபோல கட்டப்பட்ட ஒரு கற்பனையூரை பற்றி. சீட்டுக்கள் காலத்தின் போக்கில் கலைந்து கலைந்து விழுகின்றன, மீண்டும் கட்டப்படுகின்றன, அனால் இன்றே அச்சீட்டுகளில் என்ன வரையப்பட்டுள்ளது என்று காண அதை விரல்நடுங்க திருப்பிப்பார்க்க முடிந்தது.


அடிக்கடி எனக்கு வரும் ஒரு கனவு: நீள்ஜடை இடுப்பு வரை தொங்கும் யாரோ ஒரு பெண் ஏதோ அபூர்வமான நிறங்களைக் கொண்டு கோலமிடுகிறாள். அது ஒரு முகத்தின் சித்திரம். ஆனால் யார் முகம் என்று எட்டிப் பார்க்கும் முன் கோலம் கலைந்துவிடும், நான் முழித்துக்கொள்வேன். இது பலமுறை வந்துள்ளது, ஒரு முறை கூட அந்த முகத்தை கண்டதில்லை. ஆதலால், மணிமேகலை ஆபிரிக்க மலைக்குகையில் தன் முகம் கொண்ட பாவை சித்திரத்தை காணும் தருணம் வாசிக்கும் போது நான் ஒரு கணம் மூச்செடுக்க மறந்தேன்.


காப்பியத்தில் மணிமேகலை தெய்வத்தைக் மாதவி மகள் மணிமேகலை காண்பதை கவித்துவமாக, கற்பனைபூர்வமாக மறுஆக்கம் செய்த அவ்விடம் அழகு. ஆனால் அதையும் தாண்டி, “கொற்றவை”யின் வரலாற்றுச்சித்திரம் முழுவதற்கும் அந்த ஒரு காட்சி பதம். எங்கோ நீர் தாண்டி நிலம் தாண்டி மொழி தாண்டி இனம் தாண்டி தன் முகத்தையே தெய்வத்தின் முகமாக மணிமேகலை காணும் போது சிலிர்த்தேன். அதற்கடுத்த சில கணங்கள் என் நினைவில் இல்லை.


இப்போது சிந்திக்கையில், அவள் மணிமேகலை தெய்வம் மட்டும் அல்ல, தமிழ்த்தெய்வம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மானுடத்தின் ஆதி அவளே. அவள் தாங்குவது நம் முகம். அவளை தரிசிப்பது வரலாற்றின் கண்ணாடியில் பார்ப்பது. ஒன்றில் ஒன்று மோதி மோதி விரியும் நேரெதிற் கண்ணாடி பிம்பங்களே வரலாறு. ஆனால் இது பின்னால் நான் யோசித்து உருவாக்கி புரிந்துகொண்டது. வாசிக்கும்போது அந்த முகம் உப்பும் நுரையுமாக  என்னை அடித்துச்சென்ற ஒரு பேரலை, அவ்வளவுதான்.


“கொற்றவை” வாசிப்பு தோறும் சி.ஜி.யுங் நினைவுக்கு வந்தார். அவர் வகுத்த “ஆர்கிடைப்” கருதுகோளிற்கு ஏற்ப “கொற்றவை”யில் ஆழி, அன்னை, பாதம், நாகம், தீ, மலை போன்ற படிமங்களின் வழியே வரலாறு விரிவடைகிறது. நான் அடிப்படையில் நரம்பணுவியல் ஆராய்ச்சி செய்பவள். மனித மூளையில் இப்படிப்பட்ட படிமங்களின் உருவாக்கம் பற்றி ஆரம்பகட்ட நிலையிலேயே  ஆராய்ச்சி நடந்துள்ளது. இதுவரை நமக்குத் தெரிந்த சில அடிப்படைகள் –  (மனிதன் உட்பட) குரங்கினங்களின் மூளைகளில் தன் இனத்து முகங்கள் விசேஷமாக சித்தரிக்கப்படுகின்றன. குரங்கு மூளைகளில் பாம்புகளின் உருவங்களுக்கும் அப்படி விசேஷ சித்தரிப்பு உள்ளது. மற்ற காட்சிகளை விட பாம்பு உருவங்கள் குரங்கு மூளையால் விரிவாக கண்டடையப் படுகின்றன என்றும், அவ்வுருவங்களுக்கென குரங்கு மூளையில் தனி, விரைவுப்பாதை ஒன்று இயங்குவதாக சமீபத்தில் கண்டடையப்பட்டது. குரங்குகள் வாழும் காடுகளில் அவைகளுக்கு பாம்புகளால் பேராபத்து என்பதால் பரிணாம வளர்ச்சியில் குரங்கு மூளை பாம்பை விசேஷமாக சித்தரிக்க கற்றுக்கொண்டுள்ளது என்றும், பாம்புகளுடன் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தின் அழுத்தத்தால் தான் மனித மூளை பெரிதாக, அதிநுட்பமாக உருவாகியது என்றும் கூட ஒரு தத்துவம் முன்னிறுத்தப்பட்டுள்ளது (Snake detection theory). ஆக, மனிதன், மனிதன் ஆவதற்கு முன்பே அவன் மூளையில் சுமந்தலைந்த படிமங்களும் குறியீடுகளும் அவன் வந்த பாதையை சித்தரிக்கலாம். அவன் கதைகளும் குறியீடுகளும் அந்த உயிரியல் நிதர்சனத்தின் நீட்சியாக, அதன் திரிப்பாக இருக்கலாம். பாம்பை வளைத்தும், பாம்பை கழுத்தில் சுற்றியும், பாம்பு மேல் எரியும் மனித மனம் அதை கடந்திருக்கலாம். எப்படி என்றாலும், இம்முறைகளை கறாரான வரலாற்றாய்விற்கான ஒரு கருவியாக இன்று நினைத்துப்பார்க்க முடியவில்லை. மூளையின் அமைப்பை புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் நரம்பணுவியல் அடிப்படையில் மனித வரலாறு ஒன்று உருவாகி வரலாம்.

சுசித்ரா ராமச்சந்திரன்

கன்னிமையும் கொற்றவையும் சுசித்ராஅன்புள்ள ஜெ.,

கி.ரா. அவர்களின்கன்னிமைகதையை முதல்முறை படித்தபோது அது என்னை அவ்வளவாக கவரவில்லை. கதையின் முதல் பகுதியில் கன்னிகாக்கும் நாச்சியாரின் அருளொளி அவள் அண்ணனின் கண்கள் மூலம் நம்மை வந்தடைகிறது. அது அழகின், அறத்தின் உச்சமாக அவனுக்கும் நமக்கும் வெளிப்படுகிறது. நாச்சியார் அவள் அண்ணன் கண்ணுக்கு ஒரு குறுந்தெய்வமாக தெரிகிறாள். ஆனால் அடுத்த பகுதியில் நாச்சியாரின் கணவன் ரங்கய்யா, அருள்வடிவ குமரியாக வீடு புகுந்த தன் மனைவி, சில வருடங்களில் பிள்ளைபேறுகள் கண்டு, இல்லறத்தில் மூழ்கி வேறொருவளாக மாறிவிட்டாளே என்று வருத்தப்படுகிறான். அவன் ஆராதித்த கன்னி எங்கே என்று அவன் ஏங்குகிறான். அவள் ஏன் மறைந்து போனாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அண்ணன், கணவன் என்று அந்த கதை முழுக்க முழுக்க ஆண்பார்வையில் கட்டமைக்கப்பட்டதாக அப்போது எனக்கு தோன்றியது. எனக்கு மாமா முறையில் ஒரு உறவுக்காரர் இப்படி சொல்லிக் கேட்டுள்ளேன்: பெண்களுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். அப்போது தான் அந்த வயதிற்க்கே உரிய எழிலும் இனிமையும் பூரிப்புமாக அவள் மணமேடையில் திகழ்வாள், அதை பார்ப்பதே ஒரு அனுபவம், என்று. அதெல்லாம் சரி, நீங்கள் பார்த்து மகிழத்தான் மற்றவர்கள் மணம் செய்துகொள்ளவேண்டுமா என்று கேட்க தோன்றியது.
அதே போல், இந்த கதையில், ஆணுக்கு பெண்ணின் கன்னிமை அளிக்கும் உவகையும் இன்பமும் சுட்டிக்காட்டப்படுகிறதே தவிர, நாச்சியாரின் உளவியலையோ, அவளது கன்னிப்பருவ உணர்வுநிலைகளையோ, அவள் கன்னிமை அழிந்து, தலைசொறிந்து கணக்குப்பார்க்கும் பெண்ணாகும் பேருருமாற்றத்தையோ, அப்படிப்பட்ட உருமாற்றைத்தை நம் மனிதர்கள் மீது திணித்து, அதை தவிர வேறெதுவும் அவர்களிடம் எதிர்பார்க்காத (ரங்கய்யாவும் பங்கு வகிக்கும்) நமது குரூரமான சமூக கட்டமைப்பையோ சுட்டவில்லை என தோன்றியது.

கிட்டத்தட்ட ஒரு அழகான காட்சிப்பொருளாக எழுதப்பட்ட நாச்சியாரின் கதாபாத்திரத்திடம் நித்தியகன்னிமையை எதிர்பார்க்கும் ரங்கைய்யாவை பார்க்க எரிச்சலாக இருந்தது. கதையில் அவளது கன்னிமையும் அதன் அருளும் கூட fetish செய்யப்பட்டதாக தோன்றியது.

அனால் அடுத்த முறை வாசிக்கையில், ஏனோ ரங்கய்யா மீது பரிதாபமே மீறியது. பாவம், அவனுக்கு என்ன தெரியும்? வெள்ளந்தி விவசாயி அவன். ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டதென்று மட்டும் அவனுக்கு தெரிகிறது, ஆனால் அதற்கு மேல் அவனுக்கு புரியவில்லை. ஒரு படி மேலே சென்று யோசித்தால், அந்த மாற்றத்தை நாச்சியாராலும் விளக்க முடியுமா என்று நமக்கு தெரியாது. அதை விளக்க அவளுக்கு வார்த்தைகள் இல்லை, இருந்தாலும் அவை அவளுக்கு கற்றுத் தரப்படவில்லை. இது கதையில் நுணுக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஸ்ரீதேவி விலகி மூதேவி வசிக்கும் வீடாக மாறும் அந்தச் சூழலை உருவகித்த காரணிகளை வாசகரின் அனுபவம் சார்ந்த ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் ஆசிரியர். நான்கே கோடுகளில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வரும் மினிமலிஸ்ட் சித்திரம் போல இந்த கதையில் விடுபட்டவையே கதையை பூர்த்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. நம் வாழ்விலும் கூட இதே இடங்கள் தான் விடுபட்டு நூல்நூலாக பிரிந்து தொங்குவதாக தோன்றுகிறது.
நாச்சியார் இழந்தாளே, அது என்ன?

நாச்சியாரின் அண்ணனும், ரங்கய்யாவும் புரியாமல் விழித்து மகிழ்ந்து போற்றிய கன்னிமை ஒரு வெளித்தோற்றம் மட்டுமே. நான் வாழும் பகுதியில் இலையுதிர் காலத்தில் நிறம் மாறி பவளமும் பொன்னுமாக ஒளிரும் சருகுகளை போல, அது ஒரு பிரபஞ்ச ரகசியத்தின் வெளிகுறி மட்டுமே. பனிக்காலத்தில் ஏதோ பெரும் நோன்பு நோற்க தயாராகும் மரங்கள் தங்கள் அணிகளை கழற்றி தன்னில் அடங்கி அந்த ஆனந்தத்தில் திளைப்பவையாக எனக்கு தோன்றும். அதே போலத்தான் கன்னி வயது பெண்ணும். அவள் ஆனந்தத்தின் ஊற்றை அவளே அறிவாள். அந்த ஊற்றின் கரையில் அவள் தன்னில் திளைத்து தன்னளவில் முழுமை அடைகிறாள். அதன் சிறு சிதறலே கன்னிமையின் வெளித்தோற்றம். அது யார் பார்வைக்கும் நடத்தப்படும் நாடகம் அல்ல. பார்வையாளர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் அரங்கேறி இரவெல்லாம் ஆடும் நாடகம் அது. இலை உதிர்வது போல இயல்பான கால நியதி.

என் சிறுவயதில் என் அம்மா எனக்கு சொன்ன கதை ஒன்று. அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஒரு கன்னிகாஸ்திரீ சொன்ன கதை. கதை பெயர்நடனமாடும் பன்னிரண்டு இளவரசிகள்”. ஒரு நாட்டின் அரசன், அவனுக்கு பன்னிரண்டு பெண் குழந்தைகள். எல்லோரும் பேரெழில் கன்னிகள். கன்னிகள் வலம்வந்த நாட்டில் ஆறுகள் பொங்கின, காடுகள் பூத்தன, பயிர்கள் கொழுத்தன. மக்கள் செல்வமும் செழிப்புமாக வாழ்ந்தனர். அரசனையும் குமாரிகளையும் போற்றினர். ஆனால் அரசனுக்கு ஒரு வினோதமான பிரச்சனை. ஒவ்வொரு நாள் காலையிலும் தன் மகள்கள் அனைவரும் அணிந்த செருப்புகள் தேய்ந்து நைந்து போயிருக்கும். கால்களை ஊன்றி ஊன்றி நடப்பார்கள். அவர் உடனே செருப்புத்தைப்பவரை அழைத்து புது செருப்புகள் செய்து கொடுப்பார். ஆனால் அடுத்த நாள் காலையிலும் அதே கதை. அந்தப்பெண்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாதென்று சாதித்தார்கள். இந்த நிலை பல மாதங்களாக தொடர்ந்தது. அந்த நாட்டின் செருப்புத்தொழிலாளிகள் செழித்தனர்; அரசன் கவலையில் மெலிந்தான்.
இரவு வரை சீர்நிலையில் இருந்த அவர்களின் செருப்புக்கள் எப்படி காலையில் தேய்ந்து கிழிந்து நூல்நூலாக தொங்குகின்றன என்ற மர்மத்தை கண்டறிய பல மாந்திரீகர்களை வரவழைத்தான். ஒன்றும் தட்டுப்படவில்லை. இரவெல்லாம் விழித்து இளவரசிகளின் செருப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஒற்றர்கள் எப்படியோ தூங்கி, காலையில் அரசனின் சினத்துக்கு ஆளாகி கழுவேற்றப்பட்டனர். செருப்புகள் கிழிந்தபடியே இருந்தன. அப்போது ஒரு நாள் பழைய அரச பரம்பரையை சேர்ந்த பரதேசி ஏழை இளைஞன் ஒருவன், இந்த முடிச்சை நான் அவிழ்க்கிறேன் என்று தைரியமாக முன்வந்தான். அன்று இரவு உணவு அருந்த மறுத்த அவனை அந்த கன்னிகளில் மிகவும் இளையவள் அணுகி, எங்கள் நாட்டின் விருந்ததையும் உபசாரத்தையும் நிராகரித்துவிட்டீர்கள், இந்த பாலையாவது பருகங்கள் என்று மந்திரப்புன்னகையுடன் ஒரு கோப்பையை நீட்டினாள். அதற்கென்ன, என்று முறுவி இளவரசன் அதை பருகினான். ஆனால் அவன் எச்சரிக்கை மிக்கவன்: அதை விழுங்காமல், அவள் சென்றவுடன் துப்பிவிட்டான்.
அன்றிரவு தூங்குவது போல் நடித்தான். “அவன் தூங்கிவிட்டான்,” என்று இளையவள் அவன் அறையில் எட்டிப்பார்த்து தன் சகோதரிகளிடம் சொன்னதை அவன் கேட்டான். அவள் சென்றவுடன், அவன் குடும்பத் சொத்தாக அவனிடம் இருந்த, மற்றவர்களின் கண்களிலிருந்து தன்னை மறைக்கும்படி நெய்யப்பட்ட மாய அங்கியை அணிந்து இளவரசிகளை பின்தொடர்ந்தான். அவர்கள் அரண்மனையின் பழுதடைந்த அறையொன்றினுள் சென்று, தரையில் ஒரு கல்லை மேலிழுத்து, கீழே செல்லும் படிகளில் இறங்கினர். அந்த பாதையில் அவனும் பின்தொடர்ந்தான். வெகுதூரம் சென்று முழுநிலவின் வெள்ளியாலேயே வடிக்கப்பட்டிருந்தது போல் இருந்த ஓர் ஏரியின் கரைக்கு வந்தனர்.

அங்கு நின்ற படகுகளில் ஏறிக்கொண்டு துடுப்புகளால் வெள்ளிநீர்விலக்கி மறுகரையில் ஒரு மாயக்காட்டை வந்தடைந்தனர். அங்கு அவர்களைப் போலவே வந்திருந்த நூறு கன்னியரோடு இரவெல்லாம் நிலவொளியில் கூத்தாடினர். அந்த இளைஞன் அவன் அங்கியின் மறைவிலிருந்து அந்த கட்சியை கண்டு நின்றான். பொழுது விடிந்ததும் அரசனிடம் சென்று அவன் கண்டதை கூற, அரசன் அவன் அரசில் பாதியும் கொடுத்து, தன பெண்களை அந்த இளைஞனுக்கே திருமணமும் செய்து வைத்தான். பழைய அரசனும் புதிய அரசனும் சேர்ந்து அந்த ரகசிய பாதையை இடித்து மூடி, ஏரியை வடித்து, காடை அழித்து, இரவு கூத்துக்களை ஒழித்தனர். அதன் பிறகு இளவரசிகளின் செருப்புகள் கொஞ்சமும் தேயாமல் என்றும் புதியது போலவே இருந்தன.
இந்தக் கதையின் பெரும் வன்முறை சிறுவயதில் புரியவில்லை. என் மனதில் இன்றும் குழந்தையாக கண்ட அந்த வெள்ளிநிலவும், மரங்களின் கையசைவும், அந்த அக்காக்களின் களியும் கூத்தும், அவர்களின் தனிமையும் அப்படியே நிற்கின்றன. நான் கேட்ட கதைகளிலே வரும் இடங்களில் மிகவும் அழகான இடம் அது என்று அப்போது எனக்குத் தோன்றும். என்றாவது ஒரு நாள் நானும் அங்கு ஆட வேண்டும் என்று தோன்றும். அந்த கனவாட்டமே அந்த கன்னிகளின் அழகின் ஊற்று என்றும் தோன்றும்.

ஆனால் வளர வளர எனக்கும் புரிந்தது, அந்த ஆட்டமெல்லாம் சிலகாலத்துக்கு தான். ஒரு அழகான இளமகன் குதிரை ஏறி வந்து அவர்களை தூக்கிச்செல்வான். அவர்களும் மகிழ்ச்சியாக, அவனுக்காகவே காத்திருந்ததை போல அவனுடன் செல்வார்கள். அவன் அவர்களின் கனவுலகத்தை குரூரமாக அழிப்பான் அவனுக்கு அந்த உலகத்தில் இடமில்லை என்று அவன் அறிகிறான். அவர்களும் அதை பெரிதும் கண்டுகொள்ளாதவர்களை போல இருப்பார்கள். சமூகமும் கதைகளும் அதுவே இயல்பு, அதுவே உத்தமம் என்று நமக்கு போதிக்கின்றது. எவ்வளவு பெரிய வன்முறை, எவ்வளவு இயல்பாக கடந்து சென்று விடுகிறோம்!

நடைமுறையில் பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆட்டங்களை மறந்து, தங்கள் ஊற்றுகள் வற்றி பாசி படிய விட்டு விடுகிறார்கள். அவளுக்கு வீடும் கணவனும் பேறும் இருந்தாலும் அவள் வற்றி வாடிவிடுகிறாள். அவள் வாழ்க்கை முழுவதும் இழந்த ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். நியாயமாக பார்த்தால் அவள் வாழ்க்கை முழுவதும் அந்த ஊற்றைப் பேண வேண்டும். அது தான் அவளுக்கே அவள் அளிக்கக்கூடிய அதிகபட்ச அன்பும் மரியாதையும். அந்த மனநிலையில் வாழும் பெண் ஆணோடு வாழ்ந்தாலும் ஆணை சார்ந்து வாழ மாட்டாள். எந்தவயதிலும் நடுநிசியில் நிலவொளியில் நடனமாடுவாள். தன்னில் நிறைவாள். அவள் நித்தியகன்னி. நாச்சியார் இழந்ததும் அதைத்தான்.


கன்னிமையின் வெளித்தோற்றத்தை சிலாகித்து கோயிலெழுப்பி எழுதும் பெரும்பான்மையான கதாசிரியர்கள் அந்தஊற்றைநெருங்குவதே இல்லை. அதை நெருங்கும்போது அவள் பெண், கன்னி, மனிதி என்ற அடையாளங்களை எல்லாம் தாண்டிவிடுகிறாள் என்று கூட தோன்றுகிறது. ஒரு பெண் தன் ஊற்றை, அதாவது, தன் தேடலை, தன் படைப்பூக்கத்தை, தன் சுயத்தை, தன் முக்தியை, கண்டடையும் பயணத்தின் சித்திரம் நவீன இலக்கியத்தில் வேறெங்கும் அதிகம் பேசப்பட்டதாக எனது வாசிப்பனுபவத்தில் தெரியவில்லை. “கொற்றவைஅதைப் பேசுகிறது. பேசப்படாமல் பாசி படிந்து கிடக்கும் உணர்ச்சிகளுக்கு சொல்லமைத்து குரல் கொடுக்கிறது. என் பார்வையில்கொற்றவையின் முதல் முக்கியத்துவம் இதுவே.
பில்லிஸ் வீட்லீ (Phyllis Wheatley) என்ற கறுப்பின கவிஞரை சமீபத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். 1700களில் ஆப்ரிக்காவிலிருந்து கப்பலில் அடிமையாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட பெண். அவளது முதலாளிகள் அவளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து அவள் இலக்கிய ஆர்வத்தை தூண்டுகிறார்கள். அவள் பல கவிதைகள் எழுதி பிரசுரிக்கிறாள்; புகழும் பெறுகிறாள். ஆனால் வாழ்நாளில் பெரும்பங்கு அடிமையாகவே வாழ்கிறாள். வறுமையில் பிள்ளைகள் இறக்க, தானும் இறக்கிறாள். அவளுக்கு சொந்தமாக பெயர் கூட கிடையாதுதான் அமெரிக்காவிற்கு வந்த கப்பலின் பெயரையே அவளுக்கு சூட்டுகிறார்கள்.

இப்படி எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், கறுப்பினப் பெண்ணாக, அடிமையாக, அரை மனிதியாக வாழ்ந்த பில்லிஸ் வீட்லீயின் கவிதைகளெல்லாம் பறக்கின்றன. ஒளியால் நிரம்புகின்றன. சுதந்திரமாக பூவலம் வருகின்றன. மனிதனை நேசிக்கின்றன. அவ்வளவு வியப்புஅந்த ஒளியும் இலகுவும் இவளுக்கு எப்படி? ஆனால் அவள் எழுதுகிறாள். விர்ஜினியா வூல்ப் சொன்னது போல படைக்க தனியறை வேண்டும் தான், ஆனால் தனியறை உள்ளவர்களெல்லாம் படைப்பூக்கம் கொள்கிறார்களா? வருமானம், உரிமை, நேரம் எல்லாத்தையும் மீறி படைப்பூக்கத்திற்கு ஒரு சுயம் முக்கியம், அதை பேணி பாதுகாத்து ஆராதிப்பது அவசியம். மேலும் சிந்தித்தால் படைப்பு கூட தேவையில்லை, அது ஒரு விளைவு தான். அந்த ஊக்கமே, அந்த ஊற்றே போதும்.

நிலவில் ஆடும் இளவரசிகளின் கதையைகொற்றவையில் நீலி சொல்லியிருக்கக்கூடும். நீலியின் கதைகள் எல்லாமே அந்த தனித்தன்மையை, சுய கண்டடைதலையே முன்னிறுத்துகின்றன. அது பல்வேறு வண்ணங்களில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு வண்ணத்திலும் ஆயிரம் வாய்வழிக்கதைகள் நாம் முன்னால் எங்கோ கேட்ட உணர்வு வாசிக்கையில் மேலோங்குகிறது.

நீலியை நாம் முதன் முதலில் கண்ணகியின் பிம்பத்திலேயே காண்கிறோம். அவளது மங்கள முகமும் பேய் முகமும் கண்ணகியின் மறுமுகங்களே என்று நாம் துணுக்குற புரிந்துகொள்கிறோம். அதுவரை கண்ணகி ஒரு நாடகத்தில் வேடம்கட்டியவளைப்போல, நாடகாசிரியர் சொல்லிக்கொடுத்த வசனத்தை பேசுகிறாள். கோவலன் நீங்கி அவள் ஆற்றியிருக்கும்போதும், அவன் திரும்பி வந்து மன்னிப்புக் கோரும்போதும், காலங்கள் தோறும் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் பிரபஞ்ச நாடகம் ஒன்றில் தன் பங்கை ஆற்றுபவளாக அவள் உணர்கிறாள். நீலியை கண்டடைகையில் அவள் ஊற்றை முதல் முறை காணுகிறாள். அந்த வெற்றுச் சுழற்சியை விட்டு முதல் முறை வெளிவருகிறாள். பயம் கடந்து அவள் தன்னை தானாக தன்னளவில் ஏற்றுக்கொள்கிறாள். நாடு காண்கிறாள், தன்னையும் காண்கிறாள். அவள் கேட்டுக் கடக்கும் கதைகளின் வழியே அவள் அவளை கண்டடைகிறாள்.
தேவந்தி அவளுக்குச் சொன்ன கதைகள், தன் ஆண்மகனை பிரிந்து, ஆற்றி, துயர்ப்படும் பெண்களின் கதைகள். ஆதிமந்தியும் நக்கண்ணையும் மாற்பித்தியும் இளவெயினியும் துயரமும் அலைக்கழிப்புமே வடிவானவர்கள். அதன் பொருட்டே இறைவியாக்கப் படுகின்றனர். அவர்களின் சந்நிதிகளில் கண்ணகி ஆத்மார்த்தமாக தொழுகிறாள், ஆனால் நீலியின் கதைகள் மூலம் அவர்களை கடக்கிறாள்.


நீலியின் கதையில் வரும் பெண்கள் பெரும்பாலும் தனித்தவர்கள், அவர்களின் தன்னிறைவே அவர்களை பிரித்துக்காட்டுகின்றது. சிலர் அநீதி இழைக்கப்பட்டவர்கள்வெண்ணியூம் மருதியும் குமரியன்னையும் வள்ளியையும் போல, ஆனால் அவர்களின் கதைகள் சென்று முடியும் இடம் அவர்கள் வகுத்துக்கொண்டது. ஆதிமந்தி, மாற்பித்தி போன்ற பெண்களின் துக்கம் ஒரு வகை என்றால் மாஞ்சாடி விதைகளைக்கொண்டு சரம்சரமாக பவளமாலைகள் அணிந்த முத்தாரம்மன்களின் பெருந்துக்கம் வேறு வகை.
நப்பின்னையின் வேய்குழலிசையால் வேய்ந்த துக்கம் வேறு வகை. அனைத்து துக்கங்களை களைந்து நிமிர்வோடு நின்று, துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லையே என்று ஒரே சொல்லில் அனைத்தையும் கடந்துசெல்லும் மகதி இவர்களுக்கெல்லாம் உச்சம்.


கண்ணகிக்கு அவளுக்கு வகுக்கப்பட்ட நெறிகளை கேள்விகேட்க தூண்டுகிறாள் நீலி. நீரரமகளிர் நிலவு பூத்த இரவுகளில் கடலில் ஆடி முயங்குவதையும், அவர்கள் ரகசிய முத்துக்களை அவ்வூர் பெண்களுக்கு கண்டெடுத்துக்கொடுத்ததையும், நாகர்களின் தலைகீழ் வாழ்க்கைமுறைகளும் கண்ணகியை எது கற்பு, எது பரத்தைமை என்று கேள்வி கேட்க வைக்கிறது. இக்கேள்விகளை அவள் நடந்து சென்ற ஒட்டுமொத்த கதைப்பரப்பில் பொருத்தியே கண்ணகி தன் உண்மையை கண்டடைகிறாள்.


புகார் விட்டு இறங்கின கண்ணகியல்ல மதுரை வந்து சேர்ந்தவள். இதை கோவலனும் உணர்கிறான், நம்பமறுக்கிறான். அவளுக்கு அறவுணர்ச்சி என்று ஒன்று முன்னமே இருந்திருந்தாலும், அவள் பயணத்தில் அது தீட்டப்பட்டு, அச்சம், மடம் எல்லாம் விலகி, அறம் வீழுமிடத்தில் சிறிதும் சிந்திக்காமல் குரல்கொடுக்கிறாள். அதுவரை மனை அடங்கிய சதியாக வாழ்ந்த அவள் நீதிகோரியது கோவலனுக்காக மட்டும் அல்ல, அந்நாட்டு மக்களுக்காகவும். ஊருக்கு தீயிட்டு முலையறுத்து மேற்குமலை நோக்கி நடக்கிறாள். அதன் பிறகு அனைத்திற்கும் உச்சமாக விரதமிருந்து, நோன்பு நோற்று, தன்னையே வெல்கிறாள். அங்கு முழுமை அடைகிறாள்.


தனிப்பட்ட உறவுகள் சார்ந்து துக்கமடைந்த பெண்களையும், சமூகம் சார்ந்து துக்கம் கொண்ட பெண்களையும் கண்ணகி, மகதியை போல, கடந்துவிடுகிறாள். அவள் தன்னுள் ஆழ்ந்து, துக்கம், காழ்ப்பு, வெறுப்பு, பழிவாங்குதல் என்ற எதிர்மறை சிந்தனைகள் அனைத்திலிருந்தும் விடுதலை ஆகிறாள். அந்நிலையிலேயே வாழ்ந்து நிறைவு காண்கிறாள். இதுவேகொற்றவைவைக்கும் பெண்மையின் சித்தரிப்பின் சாராம்சமாக எனக்குப் புரிந்தது.
இந்தச்சித்திரத்திற்கு கன்னியின் இனிமையும் தனிமையும் முழுமையும் உவமை. கலைமான் மீதமர்ந்து வரும் ஆதி கன்னியிடம் இருக்கும் கம்பீரம் கடல் சூழ தென்கோடியில் மென்னகையுடன் நிற்கும் குமரிக்கும் உள்ளது; கதை நம்மை அந்த புள்ளி நோக்கியே இழுக்கிறது. நம் மரபில் அகல்யா, தாரா, மண்டோதரி, குந்தி, திரௌபதி ஆகியோர் கன்னிகளென்றே அழைக்கபடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பொது அந்த கம்பீரம், அந்த தனிமை, அந்தக் கனிவு. நடைமுறை கற்பு காக்காதவர்கள் என்றாலும், அவர்களை நாம் கன்னிகள் என்கிறோம் எவ்வளவு அழகான உவமை! கண்ணகி இவர்களின் மரபில் வந்தவள், இந்த கன்னிமையை கண்டடைகிறாள். “கொற்றவை”, கன்னிமையின், அதை கண்டடைதலின் சித்திரம்.


இதற்கு நேர்மாறானவள் மாதவிபரத்தை நெறியில் பிறந்திருந்தாலும் அவள் சாவித்திரியும் தமயந்தியையும் போல சதி. கோவலனை சார்ந்து வாழ்ந்தவள். அவன் இறந்தாலும், அவன் தகப்பனென்றும் தான் தாய் என்றும் வாழ்ந்தவள். ஆனால் அவர்களுக்குப் பிறந்த மணிமேகலை, சுவரோவியத்தில் தன் முகம் கண்டு வியந்த மணிமேகலை, அதை கன்னியின் முகமென்று கண்டுகொள்கிறாள். அவளுள் கன்னிமை விழித்திருப்பதாகவே தோன்றுகிறது.


கொற்றவைவாசிப்பில் என்னை வெகுவாக கவர்ந்த பகுதிகள் இரண்டுமே பயணங்கள்; முதலில், கண்ணகியின் பயணம், இரண்டாவது, இளங்கோ அடிகளின் தலைகீழ் பயணம். வரலாற்றை அவர் கண் முன்னால் கதைகள் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்; அக்கதைகள் மூலமாக அவர் தேடல் அவர்க்கு முழுமையாகிறது. அதன் உச்சம் கன்னியாகுமரியில், கடல் நடுவில் நிற்கும் கன்னிப்பாறையில். பலநூறாண்டுகள் பிறகு வந்த ஓர் இளைஞனை போல, ஒரு எழுச்சியில் கடலில் குதித்தது நீந்தி பாறையை அடைகிறார், மூன்று நாட்கள் ஊழ்கத்தில் மூழ்கி விழிக்கையில் ஆயிரம் சூரியன்களை காண்கிறார். அந்த இடத்தை வாசிக்கையில்இப்போது எழுதுகையில்என்னை உணர்வுப்பூர்வமாக பாதிக்கிறது. மனிதனுக்குள் மட்டும் எவ்வளவு உன்னதம்அதை நமக்கு அருளிய கருணை எவ்வளவு மகத்தானது!
எல்லா விலங்கினங்களிலும், மற்ற விலங்குகளை அடக்கும் வல்லமை கொண்டு வெல்லும் விலங்கே தாட்டான் (ஆல்பா) ஆகிறது. அதை பயத்தால், குரூரத்தால், வன்மத்தால் சாதிக்கிறது. மனித இனத்தில் மட்டும், தன்னைதானே அடக்கி, தன் பயத்தை, வன்மத்தை களைந்து, தன்னையே வெல்லும் வல்லமை கொண்டவனே மனித சாத்தியங்களில் உச்சத்தை அடைகிறான். மனித இனத்தில், மற்றவனை வென்றவன் அரசனாகிறான். தன்னை வென்றவன்(ள்) தெய்வமாகிறான்(ள்).