ப்புலகத்தை விரித்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே தனது நீண்ட காலத் திட்டமான கொற்றவையையும் புனைகதையாகவே எழுதத் திட்டமிட்டு எழுதி முடித்தார் . அன்னையின் திருமுன்னில் எனத் தொடங்கி நன்றி சொல்லத் தொடங்கும் பகுதியில் ‘அனைவரையும் குறிப்பிடுதல் புனைகதையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. ‘ எனக் குறிப்பிடும் குறிப்பு தருவது கூட இப்பிரதி ஒரு புனைகதை என்ற குறிப்பைத் தான். ஆனால் அதைப் பதிப்பித்துள்ள பதிப்பாசிரியர் தமிழினி வசந்தகுமார், கொற்றவை- புதுக்காப்பியம் எனக் குறிப்பிடுகிறார்.
புனைகதை : புதுக்காப்பியம்.
தனக்கு வாசிக்கக் கிடைக்கும் ஒரு பனுவல் என்ன வகையான பனுவல் எனத் தெரிந்து கொண்டு வாசிக்க விரும்புவது வாசகனின் பொதுவான மனநிலை. அப்படி வாசிக்கிற வாசிப்பு ஒரு விதத்தில் தன்னுணர்வு கொண்ட வாசிப்பும் கூட. அந்த வாசிப்பு, வாசிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கேள்விகளை எழுப்பிக் காரணங்களைத் தேடும் வாசிப்பு. ஒருவிதத்தில் அந்த வாசிப்புதான் வாசகனை விமரிசகனாக மாற்றும் வாசிப்பாகவும் இருக்கிறது. அச்சிடப் பெற்றுள்ள கொற்றவையில் இடம் பெற்றுள்ள இந்த இரு குறிப்புகளும் சேர்ந்து கொற்றவையை வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகனுக்கு தொடக்கச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. என்ன வகைப் பிரதியாக வாசிப்பது என்பதுதான் அந்தச் சிக்கல்.? காப்பியம் என்ற வகைப் பாட்டிற்குள் வைத்துக் கொண்டா..? புனைகதை என்ற அளவுகோலின் படியா..? இந்தக் குழப்பத்தைப் போக்கும் குறிப்பு நூலில் எங்கும் இல்லை. அந்நிலையில் வாசித்து முடித்தபின்பு இந்தக் கேள்விககு விடை கிடைக்கும் என்று வாசிக்கத் தொடங்கலாம். அப்படி வாசிக்கத் தொடங்கும்போது ஒரு புதுவகைப் பிரதியை வாசிக்கிறோம் என்ற தன்னுணர்வும் தேவை.
கொற்றவை, நீண்ட காலமாகத் திட்டமிட்டு முடிக்கப்பட்டுள்ள எழுத்துப் பணி என்பதை அதை வாசிக்கும் யாரும் ஒப்புக் கொள்வர். ஜெயமோகனும் தனது திட்டமிடல் சார்ந்த தகவல்களைத் தரவும் செய்துள்ளார். 1987 ஆம் ஆண்டிலேயே முகிழ்த்துவிட்ட கொற்றவையின் கருவை, நண்பர்களிடம் விவாதிப்பது, ஏதாவது ஒரு வடிவில் எழுதிப் பார்ப்பது, முழுமையான தகவல்களுக்காகவும் சொல்ல வேண்டிய கதைகளுக்காகவும், வெளிப்படுத்த வேண்டிய மொழி நடைக்காகவும் அவ்வத்துறை சார்ந்த அறிஞர்களின் நூல்களை வாசிப்பது, சிந்தனையாளர் களைச் சந்தித்து உரையாடுவது, வல்லுநர்களின் உதவியை நாடுவது போன்றன அத்திட்டமிடலின் தொடர் பணிகளாக இருந்துள்ளன. இப்பணிகளின் தன்மைகளை நோக்கினால் பலவும் புனைகதையாளனின் தேடல் என்பதை விட ஓர் ஆய்வாளனின் களப்பணி போலவே இருந்துள்ளன.
கொற்றவையின் புறக்கட்டுமானம் :
அச்சிடப்பட்டுள்ள கொற்றவையின் புறக்கட்டுமானம் வாசகனுக்குச் சில தகவல்களைத் தருகின்றன. நூல் மொத்தம் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தன்னை இயல் பகுப்புக் கொண்டதாக அமைத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயலும் கூற்று அடிப்படையில் ஒரு தலைப்பையும் கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பகுதிக்கும்¢ குறிப்பான பெயரும் தரப்பட்டுள்ளது. அப்பெயருக்கு அடுத்து இளங்கோவடிகளின் சிலப்¢ பதிகார வரிகள் அச்சிடப்பட்டுள்ளன. 50 பக்க அளவில் [11-62] எழுதப்பட்டுள்ள முதல் பகுதியின் பெயர் நீர்; இடம்பெற்றுள்ள இயல்கள் 12; இயல்களின் தலைப்பாகத் தரப்பட்டுள்ள வரிகள்-பழம்பாடல் சொன்னது. அச்சிடப்பட்டுள்ள சிலப்பதிகார வரிகள்.
பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
என்பது. தொடர்ந்து இடம் பெற்றுள்ள நான்கு பகுதிகளின் விவரங்கள் வருமாறு: பகுதி இரண்டு [79 பக்கங்கள்: 63-142] : காற்று - 24 இயல்கள் ; -பாணர் பாடியது ;
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்னும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்னும்
பகுதி மூன்று [ 187 பக்.: 143-330 ] :-நிலம் -48 இயல்கள் ; இப்பகுதியில் இடம்பெற்றுள்ள இயல்கள் குலக்கதை சொன்ன இயல்களாகவும் நீலி சொன்னதாகவும் பெயரிடப்பட்டுள்ளன.அத்துடன் ஐந்திணைக் கோட்பாட்டுப் பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம்;
3-குலக்கதை சொன்னது - 3 /
1. நெய்தல்[4] - குலக்கதை சொன்னது 1-2, 4 நீலி சொன்னது -3;
2. மருதம் [11] - குலக்கதை சொன்னது 1-4,6, 8-11 நீலி சொன்னது 5 , 7
3. குறிஞ்சி [13] குலக்கதை சொன்னது 1-2,4-5,7-8,12-13 நீலி சொன்னது -3 , 6, 9-11
4. பாலை [8]குலக்கதை சொன்னது 1-4,6-8 நீலி சொன்னது 5
5 முல்லை [9]குலக்கதை சொன்னது 1-4, 6-9 நீலி சொன்னது 5
இவளோ கொங்கர் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப் பாவை செய்தவக்கொழுந்து
பகுதி நான்கு [ 84பக்.: 331-415]: ஏரி -24 இயல்கள் ; காப்பியம் கூறியது
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்
பகுதி ஐந்து [181 பக். 417-598 ]: வான் -35 இயல்கள்; உரை வகுத்தது
மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றிகந்த
கோமகளும் தாம் படைத்த கொற்றத்தாள்.
புறக்கட்டுமானத்தில் ஜெயமோகன் தந்துள்ள இத்தகவல்களும் விவரங்களும் அவரது புனைகதைகளை வாசித்துப் பழக்கப்பட்ட வாசகனுக்கு, புனைகதைகளிலிருந்து மாறுபட்ட பனுவல் ஒன்றிற்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகின்றன. அந்தக் கட்டாயத்தை உணர்ந்து வாசிப்பைத் தொடரும் நிலையில் நூலின் முதல் பகுதியில் யாருடைய கதை அல்லது எப்படிப் பட்ட புனைவு சொல்லப்பட இருக்கிறது என்ற திசை உணர்த்தப்படாமல், பழம்பாடல் சொன்ன விவரங்கள் விவரிக்கப்படுகின்றன. இவ்விவரிப்பு ஒரு புனைகதையின் விவரிப்பாக இல்லாமல் வரலாற்றிற்கு முந்திய தொன்மக் காலத்தைப் பற்றிய புனைவாக இருக்கிறது. தொன்மக் காலம் மட்டும் அல்லாமல் தொன்ம வெளியையும் விவரிக்கிறது.
இந்த விவரிப்பு தரும் வெளியும் காலமும் கடல் கொண்ட தென்னாட்டைப் பற்றிய விவரங்களாக உள்ளன. குமரிக் கண்டம் அல்லது லெமூரியாக் கண்டம், கபாடபுரம், தென்மதுரை, இந்நகரங்களைத் தலைநகர் களாகக் கொண்டு ஆட்சி செய்த பண்டைக்காலத் தமிழ் (பாண்டிய) மன்னர்கள் பற்றிய அந்த விவரங்களைப் பொது நிலையில் புனைகதைகளின் வாசகர்களாக இருப்பவர்கள் அனைவரும் அறிந்தன அல்ல. அறிந்த நிலையிலும் புனைகதை வாசிப்பு உண்டாக்கும் களிப்புடன் தொடர்வதும் இயலாத ஒன்று. தமிழ் நிலப்பரப்பின் தொன்மை குறித்து ஆர்வம் இருந்து , அவற்றைப் பேசும் நூல்களை வாசித்திருக்கும் நிலையில் தான் அந்த விவரங்கள் புனைவாக ஆக்கப்பட்டுள்ளன என்பதை உணர முடியும; வாசிப்புக் களிப்புடன் பயணம் செய்ய முடியும். ஆனால் இரண்டாவது தொடங்கி நான்காவது வரையுள்ள காற்று, நிலம், ஏரி ஆகிய பகுதிகளை வாசிப்பதில் வாசகர்களுக்கு இந்தச் சிரமம் இருக்காது.
ஏனெனில் இந்தப் பகுதியில் சொல்லப்படும் சிலப்பதிகாரக் கதை, தமிழ் வாசகர்கள் அறிந்த ஒன்று. காவிரிப்பூம்பட்டினத்து மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் மாநாய்கன் மகள் கண்ணகிக்கும் நடக்கும் திருமணத்தில் தொடஙகி கண்ணகி தெய்வமாக ஆனதுடன் முடியும் சிலப்பதிகாரம் தமிழர்களின் பொதுப்புத்திக்குள் இருக்கும் பிரபலமான கதைதான். கண்ணகியை மணந்த கோவலன், கலைகளிலும் அழகிலும் தேர்ந்த மாதவியெனும் இற்பரத்தையுடன் வாழ்ந்து மணிமேகலையெனும் ஒரு பெண் குழந்தையைப் பெற்ற கதையும், மனைவியைப் பிரிந்த காலத்தில் குலத் தொழிலான வியாபாரத்தை மறந்ததால் கைவசமிருந்த பெருஞ்செல்வத்தை இழந்து சொந்த ஊரான பூம்புகாரில் தொடர்ந்து வாழ முடியாது என முடிவு செய்து , மதுரைக்குச் சென்று மனைவியின் கால் சிலம்பை விற்று புதுவாழ்க்கை தொடங்கலாம் என்று முடிவு செய்து பயணத்தைத் தொடங்கியகதையும், மதுரையின் அரசன் பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவியின் களவு போன சிலம்பைத் திருடியவன் கோவலனே எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலைத் தண்டனை பெற்ற கதையும், தனது கணவன் கோவலன் குற்றவாளி அல்ல என வாதிட்டு வென்ற கண்ணகி அரசதிகாரத்தையும் அவ்வதிகாரத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த மதுரை மக்களையும் தன் பத்தினித் திறத்தால் ஒரு சேர அழித்த கதையும், பின்னர் மதுரையிலிருந்து தனியளாய் மேற்கு நோக்கிப் பயணம் செய்து மலை மக்கள் முன்னிலையில் விண்ணுலகு சேர்ந்து கணவனுடன் கலந்த செய்தியைக் கேள்விப்பட்டு , சேரநாட்டின் அரசன் குட்டுவன் தனது தலைநகரான வஞ்சியில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா எடுத்த கதையும், அவ்விழாவிற்குப் பல்தேசத்து ராஜாக்களும் அறிஞர்களும் வந்த கதையும் தான் சிலப்பதிகாரத்தின் அடிப்படை நிகழ்வுகள்.இவ்வடிப்படை நிகழ்வுகளே கொற்றவையிலும் அடிப்படை நிகழ்வுகளாக ஆக்கப்பட்டுள்ளன.
நேரடி வாசிப்பில்லாமலேயே ஓரளவு தமிழ் மக்களின் மூளைக்குள் சிலப்பதிகாரத்தின் அடிப்படைக் கதைப்போக்கும் பாத்திரங்கள் சார்ந்த சில விவாதங்களும் ஏற்கெனவே வெவ்வேறு விதமாகப் பதிவாகியுள்ளன. இப்பதிவு களுக்கும் விவாதங்களுக்கும் திராவிட இயக்கங்களின் அரசியல் மேடைகளும் கலைஞர் மு.கருணாநிதியின் பூம்புகார் போன்ற வெற்றிப் படத் திரைக்கதைகளும் மட்டுமல்லாமல், தமிழின் வெகுமக்கள் உளவியலை காத்திர மாகப் பாதித்துள்ள பட்டிமன்ற மேடைகளும் ஓரளவுக்கு உதவியுள்ளன.
அத்துடன் வரலாற்று நோக்கம் அல்லது இலக்கிய நயம் சார்ந்து தீவிரமான வாசிப்பை விரும்பியவர்களுக்கு எஸ்.வையாபுரிப்பிள்ளை, சாமிசிதம்பரன், தெ.பொ.மீனாட்சி சுந்தரன், அ.சா.ஞானசம்பந்தன், வ.சுப. மாணிக்கம்,சஞ்சீவி,ம.பொ.சிவஞானம், மு.ராகவைய் யங்கார், ம.ரா.போ.குருசாமி, சுத்தானந்தபாரதியார், எஸ்.ஆர்.கே. என அழைக்கப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன், க.கைலாசபதி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றோர் எழுதிய ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் சிலப்பதிகாரக் கதையைப் பல்வேறு கோணத்தில் ஏற்கெனவே விவாதித்துக் காட்டியுள்ளன. அத்துடன் நாட்டார் பாடல்களாக, கதைகளாக, கதைப்பாடல்களாக, நிகழ்த்துக் கலைகளின் ஆட்டப்பிரதிகளாக, தொகுக்கப் பட்டுள்ள கர்ணகை மட்டும் கோவிலன் கதைகளும் சிலப்பதிகாரத்தின் மாற்று வடிவங்கள் சிலவற்றைத் தந்துள்ளன. பலவகைப் பட்ட இப்பிரதிகள் எழுதியவர்களின் அல்லது நிகழ்த்தியவர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு நோக்கங்களுடன் எழுதப்பட்டவை அல்லது நிகழ்த்தப்பட்டவை என்பது திரும்பவும் ஆய்வு செய்து முடிவு காணவேண்டியன அல்ல. அவற்றின் முன்னுரைகளும் எழுதியவர்களின் சார்புநிலைகளும் அவற்றை மறைத்தலின்றிச் சொல்லியே சென்றுள்ளன.
இப்பிரதிகளையெல்லாம் வாசித்து உள்வாங்கிக் கொண்டவராகவும் , அவற்றைத் தாண்டிக் கடந்த வராகவும் கொற்றவை மூலம் வெளிப்பட வேண்டும் என்ற விருப்பம் ஜெயமோகனுக்கும் இருந்துள்ளது. அத்தகையதொரு விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கமும் சார்புநிலை வெளிப்பாடும் கொண்டதுதான் கொற்றவை. இந்த உண்மை அவ்வளவு சுலபமாகச் சொல்லி நிரூபிக்கத் தக்கதும் இல்லை. காரணம், கொற்றவை படைப்பிலக்கியத்திற்கான உத்திகளையும் மொழியையும் பயன்படுத்திக் கொண்டு வெளிப்பட்டுள்ளது என்பது தான்.
சிலப்பதிகாரத்தின் விருத்தியுரைபோலக் கொற்றவையின் கதையைப் புனையும் ஜெயமோகன் இளங்கோவடிகள் கூறும் வரிசையில் பெருமளவு மாற்றமின்றி நிகழ்வுகளை அடுக்கியுள்ளார். என்ற போதிலும் சொல்முறையிலும் எழுப்பும் உணர்வுகளிலும் அவருக்கென ஒரு நோக்கம் இருக்கிறது என்பதும் ஓரளவு புலப்படத்தான் செய்கிறது. முதல் பகுதியில் ஏற்படும் திசைக் குழப்பம் நிறுத்தப்பட்டு, சொல்லப்போகும் கதை, இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் கதை தான் என்ற தெளிவு உண்டாக்கப்படுகிறது. இத்தெளிவுக்குப் பின் வாசகர்களின் பயணம் ¢ கதைசொல்லியுடன் இணைந்தே செல்கிறது. இரண்டாவது பகுதியில் சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டமும், மூன்றாவது பகுதியில் மதுரைக் காண்டமும், நான்காவது பகுதியில் வஞ்சிக் காண்டமும் விரிக்கப்படுகிறது. இந்த விவரிப்பு அப்படியே இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியம் சொல்லும் கதை நிகழ்வுகளையும் முரண்களையும், அவற்றின்¢ வழியே எழுப்பப் பட்ட உணர்வுகளையும், வாசகனுக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல என்பது கவனமான வாசிப்பில் மட்டுமே வெளிப்படும் ஒன்று.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டு படைப்பிலக்கியங்கள், விமரிசனக் கட்டுரைகள்,ஆய்வு நூல்கள் என நூறு புத்தகங்களுக்குக் குறையாமல் தமிழில் வந்துள்ளன. அந்தப் பிரதிகள் யாவற்றையும் ஒருவர் வாசித்திருக்கலாம் அல்லது யாதொன்றையும் வாசிக்காமலும் இருக்கலாம். சிலப்பதிகார அறிமுகம் மட்டும் பெற்றிருந்தால் போதும். அவருக்கு ஜெயமோகனின் கொற்றவையை வாசிக்கும் போது புதுவகை வாசிப்புத் திளைப்பும், புதிய அனுபவமும், மற்றும் சிந்தனைத் தளத்திற்குள் நுழைகிறோம் என்ற எண்ணமும் நிச்சயம் தோன்றும். இந்த உத்தரவாதத்தை உண்டாக்க ஜெயமோகன் பயன்படுத்தியுள்ள முதன்மையான உத்தியாக, கதைக்கூற்று பாணி (Narrative style) யைத் தான் சொல்ல வேண்டும். கொற்றவையின் கடைசிப் பதினைந்து பக்கங்களைத் தவிர்த்து மீதிப் பக்கங்களில் மூன்றாமிட(படர்க்கை)க் கூற்றுமுறையைப் பயன்படுத்தியுள்ளார்.
இக்கூற்றுமுறை எப்பொழுதும் கதை கூறுபவனைக் கடவுளின் இடத்தில் நிறுத்திக் கொண்டு, அவனது கண்ணசைவில் எல்லாம் நடப்பதாகவும், அதே நேரத்தில் அவன் எங்கிருந்து கண்ணசைக்கிறான் என்பதை அறியச் செய்யாமலும் ரகசியம் காக்கும் கூற்று முறை. “ பழம்பாடல் சொன்னது, பாணர் பாடியது, குலக்கதை சொன்னது , நீலி சொன்னது, காப்பியம் கூறியது, உரை வகுத்தது” என ஜெயமோகன் இட்டுள்ள தலைப்புகள் படர்க்கை இடத்தை முழுமையாக உறுதி செய்துள்ளன. சொல் முறை உத்தியாக இத்தலைப்புகள் அமையும் அதே நேரத்தில் சொல்லப்படும் கதை, சிலப்பதிகாரக் கதையின் நிகழ்வுகள் தான் என்று வாசிக்கிறவனை நம்பும்படியும் செய்துள்ளன.
ஜெயமோகனால் கறாராகப் பயன்படுத்தப் பட்டுள்ள படர்க்கைக் கூற்றுமுறை, சொல்லப்படும் கதையிலிருந்து அவரை விலக்கி வைப்பதில் கவனமாக இருக்கிறது. பிரதியிலிருந்து எழுத்தாளனை விலக்கி வைக்கும் அதே நேரத்தில் வாசிப்பவர்களையும் விலகி நின்று வாசிக்கும்படி வேண்டுகிறது. இந்த விலகல் நிலைகளே வாசிக்கப்படும் பிரதி நிகழ்காலத்தை விவாதிக்கும் புனைவல்ல; கடந்த காலத்தை விவரிக்கும் காப்பியம் என்ற எண்ணத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கறார்த்தனமும் கவனமும் சேர்ந்து மொழியைப் பயன்படுத்து வதில் அவருக்குள்ள ஆற்றலை வெளிப் படுத்துகின்றன. அந்த வகையில் ஜெயமோகனது எழுத்து, வாசகனை ஒருவித மாயக்கட்டுக்குள் நிறுத்த முயல்கிறது என்று கூடச் சொல்லலாம். இப்படியான எண்ணம் தோன்றும்படி செய்ததில் அவரின் எழுத்துத் தேர்ச்சியின் லாவகம் திட்டமிடலும் உள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.
அடிப்படையான இந்த உத்தியோடு காப்பியத் தன்மையை உண்டாக்க வேறு சில உத்திகளையும் ஜெயமோகன் பயன் படுத்தியுள்ளார். சிலப்பதிகாரக்கதைக்குத் தொடர்புடையனவாகவும் தொடர்பற்றனவாகவும் பல கிளைக்கதை களுக்குள் பயணம் செய்வது ஒரு முக்கியமான உத்தி. குறிப்பாக பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கிப் பயணம் செய்யும் போது கோவலன் - கண்ணகியுடன் வழிநடைத் துணையாகச் சேர்ந்து கொள்ளும் கவுந்தியடிகளின் வழியாகவும், வழிநடைப் பயணத்தின் போது சந்திக்கும் மனிதர்களின்/ மனிதக் குழுமங்களின் கதைகளாகவும், வரலாறாகவும் பல கிளைக்கதைகளுக்குள் வாசகர்களைப் பயணம் செய்ய வைக்கிறார்.
இக்கிளைக்கதைகளில் பெரும்பாலானவை ஆண்பாத்திரங்கள் சார்ந்த கிளைக்கதைகளாக அல்லாமல், பெண்களை மையப்படுத்திச் சொல்லப்படும் கிளைக்கதைகளாக உள்ளன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியை நுதல்விழி அன்னையெனச் சொல்வது தொடங்கி, புன்னைக் காட்டு நீலி, காகந்தி, சம்பாபதி,மகதி, மாயை, ஆதிமந்தி, வெண்ணி, நன்முல்லை, கண்ணகையம்மன், நீரரமகளிர், வள்ளி, சாக்கியப் பெண்கள், மள்ளர் குலப் பெண்கள், சாம்பவர் பெண்கள் , வேளிர்குலப் பெண்கள், குறவர்குலப் பெண்கள், மலைவேட்டுவ மகளிர், எனப் பலவிதப் பெண்களைப் பற்றிய சித்திரங்களும் கதைகளும் சொல்லப்படுகின்றன. அத்துடன் சிலப்பதிகாரக் கதையில் வரும் பெண்பாத்திரங்களான மாதவி, மணிமேகலை, தேவந்தி, கவுந்தி, மாதரி, பாண்டியன் பெருந்தேவி என ஒவ்வொருவரும் கூடுதல் அழுத்தத்துடன் படைக்கப்பட்டுள்ளனர். இளங்கோவடிகள் தரும் தகவல்களையும் உணர்வுநிலையையும் தாண்டி ஜெயமோகன் கூடுதல் கதைவெளிகளை உண்டாக்கி அதிகப்படியான விவரங்களைத் தருவதன் மூலம் இவ்வழுத்தத்தை உண்டாக்கியுள்ளார். பெண்பாத்திரங்கள் சார்ந்து ஜெயமோகன் உண்டாக்கும் இந்த அழுத்தங்களின் வழியே கொற்றவையென்னும் மையப் பாத்திரத்தின் உணர்வை தொடரச் செய்து, புதிய சொல்லாடல்களுக்குள் தமிழர்களை அழைத்துச் செல்லும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் எனக் கருத இடமிருக்கிறது.
பண்டைத்தமிழ் நிலப்பரப்பின் சமூகவெளிக்குள் சமணம், பௌத்தம், வைதீகம், சாக்தம், சார்வாகம், வைசாகம் என அறுசமய நம்பிக்கை கொண்டவர்களும், தனித்த வாழ்முறை அடையாளங்களுடன், வழிபாட்டு முறைகளையும், பண்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறவர்களும் வாழ்ந்தனர் என்றும், அவர்களிடையே ஓரளவு சகிப்புத் தன்மை நிலவின என்றும் காட்டும் புகார்க்காண்ட கதை நிகழ்வு , மதுரைக்காண்டத்திற்குள் நுழைகிறது போது நீருபூத்த நெருப்பாக இருந்த பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் உள் முரண்களைப் பேசுகிறது. ‘தன் கணவன் கள்வன் அல்லன்’என நிரூபித்த கண்ணகி, மதுரை எரியும்படி சாபம் இட்டாள் என்றாலும் அதனைச் சாத்தியமாக்கியது மதுரையின் அரசதிகாரத்திற்கும், அவ்வதிகாரத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த மறவர் குடிக்கு எதிராக ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த சமூகங்களின் எதிர்ப்புணர்வே என்பதாகக் காட்டுகிறார். ஜெயமோகன் அரங்கேற்றும் இப்புதிய நாடகக் காட்சி இளங்கோவடிகளின் வழக்குரைகாதை என்னும் நாடகக் காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடகக் காட்சி. அதன் ஒரு பகுதியை இங்கே வாசிக்கலாம் :
ஊர் மறவர் எழுந்து “ எங்கள் கருங்குழல் கொற்றவைக்குப் பலியும் உண்டாட்டும் கொடுக்குமுகத்தான் நெல் கவர்ந்தோம்’’ என்றனர்
மள்ளர் தலைவர் “ மறவருக்குரிய எட்டிலொரு பங்கு முன்னரே அளிக்கப்பட்டு விட்டது” என்றார்
பழையன் குட்டுவன் “ மள்ளரே கேளுங்கள். விருந்தூட்டுதலும் உண்டாடுதலும் மறவர் மறுக்க ஒண்ணா அறம். நெல் போதாது போனால் ஊர் நுழைந்து நெல் கவர மறவர்க்கு அவர்கள் குடி நெறிவழி காட்டுகிறது’’ என்றார்
‘’விதைநெல்லும் கோயில் நெல்லும் மறவர்க்கு ஒன்றுதான். வேறுபாடு காண அவர்கள் அறியார்.’’
“மறவர் நெறி எங்ஙனம் மன்னரைக் கட்டுப்படுத்தும் ? ” என்றார் முதுமள்ளர் சினத்துடன்.
“மள்ளர் நெறியால் நீவிர் இங்கு மறவரைக் கட்டுப்படுத்த முயல்கிறீர்’’ என்றார் பழையன் குட்டுவன்.
மறவர் குடிமூத்தோர் மீசை வருடி மென்னகை பூத்தனர். எண்குடிகளிலும் சினம் அரும்பியது.
முதுவேளார் சினத்துடன் எழுந்து “ இங்கு ஒவ்வொரு குடிக்கும் அவர்களுக்குரிய நெறிகள் உள்ளன. அந்நெறிகள் அவர்கள் குடிகளை மட்டுமே கட்டுப்படுத்தும். குடிகளுக்கெல்லாம் பொதுவானது பாண்டியனின் கோல்’’ என்றார்.
“அந்தக் கோலை நிறுத்துவது எங்கள் வேல் ” என்றார் ஒரு முதுமறவர். எவர் நெறி பிறரைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதோ அதுவே அவரைக் கட்டுப்படுத்தும் உரிமையும் கொண்டது.’’
“உங்கள் நெறியை நாங்கள் ஏற்க இயலாது ” என்று கூவினார் உமணர் தலைவர் [ ப.351]
இவ்வாறு விரியும் இந்த உரையாடல் அக்கால முரண்பாட்டைப் பேசுவதாக இருந்தாலும், நிகழ்காலத் தமிழகத்தில் அரசதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் , கைக்குள் வைக்கவும், பங்கு போடவும் சமூகக் குழுக் களுக்கிடையே நடக்கும் போட்டியை நினைவூட்டவும் செய்கின்றன.
மதுரைக் காண்டத்து நிகழ்வுகளைத் தொடர்ந்து அமையும் வஞ்சிக் காண்டக் காட்சிகளோ இன்னும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. சேரநாட்டின் (கேரளத்தின்) மலைவளத்தையும் நிலப்பரப்பையும் விவரிக்கும் ஆசையை அதில் நிறைவேற்றிக் கொள்ளவும் செய்கிறார். கொற்றவையாக, பகவதியாக, அன்னையாக, குமரியாக செங்குட்டுவன் காலம் தொடங்கி கண்ணகியென்னும் பத்தினி அடைந்த மாற்றங்கள் வரலாறாகவும், அவளை எழுதிய இளஞ்சேரல் இளங்கோவடிகள் மற்றும் அவரது நண்பர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் தேடலாகவும் எழுதிக் காட்டப்பட்டுள்ளது. அவர்களின் தேடலின் தொடர்ச்சியில் கொற்றவை என்னும் இப்பிரதியை எழுதிய எழுத்தாளனின் யாத்திரைகளும் இருந்தன என்றும் , அவனது தேடலுக்கு இன்னும் கிடைக்காத வினாக்களும் , கிடைத்த விடைகளில் உண்டான ஆச்சரியங்களும், கிடைத்த தெளிவுகளும், தெளிவு என ஒன்று தேவையுமில்லை என எடுத்த முடிவுகளுமாக எழுதிக் காட்டப்பட்டுள்ளன. [இப்பகுதியில் பலபக்கங்கள் திரும்பச் சொல்லப் படுகின்றனவோ என்று தோன்றும்படி எழுதப்பட்டுள்ளன. சாத்தியமான பகுதிகளை நூலாசிரியரோ பதிப்பாசிரியரோ விரும்பியிருந்தால் குறைத்திருக்க முடியும்].
காப்பியத்திலிருந்து புனைகதைக்கு
“ தென்கடற்கரை நுனியில் கன்னி தன்னந்தனிமையில் காத்திருப்பது அதற்காகவே. ஆம்.கன்னி காத்திருப்பது அதற்காகவே. ஆம் .கன்னி காத்திருப்பது அதற்காகவே. ஆம்.காத்திருப்பதெல்லாம் அதற்காகவே... ” [ப.66]
என உறுதி வாக்கியங்களுடன் சிலப்பதிகாரக் காப்பியக் கதையைக் கூறத்தொடங்கும் எழுத்தாளன், எதற்காக.? எதற்காக..? எதற்காக ..? என்று விடையைத் தேடிச் சென்ற பயணமே இந்தக் கொற்றவை யென்னும் புதினம் என்பதான பதிலொன்று கடைசிப் பக்கங்களில் [584-598] கிடைக்கிறது. அங்கு கிடைக்கும் பதில் தான் கொற்றவையை எழுதியதின் நோக்கம் என்பதும் கூட புரியத் தொடங்குகிறது. இந்தப் பதினைந்து பக்கத்தில் எழுதிக் காட்டும் நிகழ்காலக் காட்சிகள் கொற்றவையைப் புதுக் காப்பியத்திலிருந்து புனைகதை என்னும் வடிவத்திற்குள் இறங்கச் செய்கின்றன. புனைகதையாக்கம் தொடங்கும் நாள் முக்கியமான நாள் என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். பேராசிரியருடன் சேர்ந்து எழுத்தாளன் நிகழ்காலப் பயணத்தில் பேசிக் கொள்ளும் விதமாக ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்.
‘ மீனபரணி அன்னையெழும் தூயநாள்’ என்றார் பேராசிரியர். “ அன்று இதே நாளில் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் என்கின்றன நிமித்திக நூல்கள். எத்தனை மன்னர்களை, எத்தனை அரசுகளை, எத்தனை அழிவுகளைக் கண்ட மாநகர் இது” என்று வியந்தார். [ ப.584]
அவர்கள் கோயில் முன் வந்திறங்கினர். “ இன்று அன்னையின் கோயிலும் திருவஞ்சிக் குளத்திறைவன் பேராலயமும் மட்டுமே பழம்பெருமைக்குத் தடயங்களாக நிற்கின்றன.. ” என்றபடி வண்டியை அனுப்பினார் பேராசிரியர். அவன் வான்வரை ஓங்கிய அரசமரங்களையும் கிளைபரப்பி விழுதுச் சடைகள் ஆட நின்ற ஆலமரங்களையும் நோக்கினான். “ஏன் இத்தனை அரசமரங்கள்.?” என்றான்.. “ பௌத்த ஆலயமாயிருந்து உருமாறிய இடங்களிலெல்லாம் எப்போதும் அரச மரங்கள் இருக்கும் ” என்றார். அவன் அண்ணாந்து மரங்களை நோக்கினான். “ ஒரு கோடி இமைகள் ” மட்டுமே.. அங்கே முகில்கள் அலையும் உயரத்தில் அறிவமர் செல்விக்குச் சேரன் ஆலயம் எடுத்த காலமே வாழ்கிறதென்று படுகிறது’’ என்றான். ‘‘ அண்ணாந்து கனவு கண்டால் வண்டிகள் மோதக் கூடும் .. வா’’ என்றார் பேராசிரியர். ‘ நான் கால் வைத்து நடக்கும் இம்மண்ணில் இக்கணம் வரை நடந்தவர் எவரெவர்? அவர்கள் வாழ்ந்தமைக்கு சான்றாக எஞ்சுவது எது.? என்று எண்ணிக் கொண்டான்.‘ எஞ்சுவது நானும் இவ்வெண்ணங்களும் மட்டும் தானா’ என்று எண்ணியதுமே அவனுக்கு உடல் சிலிர்த்தது. ‘ மண் மறைந்த அத்தனை பேருக்கும் வணக்கம்’ என்று தன் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தான். [ ப.585]
நெகிழ்ந்த மனத்துடன் அவர்களிருவரும் நடந்து செல்லும் கோயில் கொடுங்களூர்க் கோவில் என்பதும் அங்கே இன்னொரு காட்சியையும் கண்டனர் என்பதும் குறித்துக் கொள்ள வேண்டிய பகுதிகளே;
அமர்ந்திருந்த பெண்ணை இரு முதிய பெண்டிர் தூக்கி எழுப்பினர். அவள் தலையை வலி கொண்டவள் போல அசைத்துக் கண்ணீருடன் முனகிக் கொண்டிருந்தாள். அவன் அருகே நின்ற கரிய மனிதரிடம், “எந்த ஊர் நீங்கள்” என்றான். ‘‘மயிலாடுதுறை அருகே துறைமங்கலம் தம்பி. இங்கே வந்தால் சரியாகும் என்று நாடி நிமித்திகர் சொன்னார்.’’ என்றார் அவர். “ என் மகள் தான். இது அவள் மகன்”அவர் குரலில் துயரம் உறைந்த அமைதி இருப்பதை அவன் கண்டான். அவர்கள் பலிபூசைப் பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு கிளம்பினர். “ வருகிறேன் தம்பி” என்று முதியவர் சொல்லி விடை பெற்றார்.
மேற்கு வாயிலை அவர்கள் நெருங்கும் போது வெறிகொண்ட பெண்குரல் ஒன்றின் வீறிடல் எழுந்தது. அந்தப் பெண் கைகளை விரித்தபடி , தலைமயிர் சிதற, தொண்டையின் உதிரக் குழாய்கள் தெறிக்க அலறியபடி ஓடி வருவதை அவன் கண்டான்.அவளைப் பிடித்திருந்த முதுபெண்டிர் சிதறித் தரையில் கிடந்தனர். ஒரு முதியவள் “ மாணிக்கம், நீ வெளியே போ! அங்கே நிற்காதே போ வெளியே போ ! ” என்று கூவினாள். அவள் அருகே நின்ற கரிய இளைஞன் வலப்பக்கமாக ஓடிக் கல்மண்டபத்தைச் சுற்றி மறைந்தான். மூவர் அவளை அள்ளிப் பற்றினர். அவள் காட்டு விலங்கு போலக் குரலெழுப்பியபடி கால்களை எவ்வித் திமிறினாள். அவள் உடைகள் நழுவின. பருத்த முலைகள் துள்ளித் தெறித்தன. குப்புற விழுந்து பெருந்தாலத்தில் குவிந்திருந்த கும்பளச் செந்நிணத்தை கைகளால் அள்ளி உண்டாள். செம்மை கலந்த மயிர்க் கற்றைகள் பிடரிபோல் சிலிர்க்க உறுமலுடன் அவள் திரும்பிய போது ஊனுண்டு சீறும் சிம்மம் போலிருந்தது. [ பக்.589-590]
இப்படிப் பட்ட காட்சிச் சித்திரத்தின் வழியாகவும்,அவன் பேராசிரியரிடம் விடை பெற்று ஏறிக் கொண்டான். ‘‘ பார்ப்போம்’’ என்று அவர் சொன்னார். அவன் புன்னகை செய்தான். நீணோரமாகக் கேட்க எண்ணிய வினாவைத் தயங்கித் தன்னுள்ளே நிறுத்திக் கொண்டான். அவள் கணவனை ஏன் ஓடும்படி சொன்னாள் அம்முதியவள்?போன்ற விடை தெரியா வினாக்களின் ஊடாகவும் தான் கொற்றவையைப் புனைகதையாக்கி நிகழ்காலத்திற்குள் நுழைக்கிறார் ஜெயமோகன். அவ்வாறு நுழையும் போது, ‘எல்லாப் பெண்களிலும் தாயைக் காணும் மனோபாவமும், எல்லாவற்றையும் தீர்க்கும் வல்லமை கொண்டவளாக அன்னையைக் கருதி அவளின் பிம்பங்களாகத் தாய்த் தெய்வங்களை வழிபடும் விருப்பமும், தமிழ் உளவியலுக்குள் காலம் காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது ’ என்ற சொல்லாடலை உருவாக்கிக் கொள்கிறார்.
புனைகதைக்குள் நுழைந்தவுடன் தாய்மை உறவு சார்ந்த தன்னிலை உறவைக் கொற்றவையெனும் காலங்கடந்த- ஆழங்கடந்த- குறியீட்டிற்குள் தேடத் தொடங்குகிறார். அந்தத் தேடலுக்கும் வெளிப்பாட்டிற்கும் ஏற்ற எழுத்து முறை அல்லது சொல்முறை, படர்க்கைக் கூற்று முறை அல்ல என முடிவு செய்து, அதற்குப் பொருத்தமான தன்மைஇடக் கூற்று (First person Narrative ) முறைக்கு மாறிக் கொள்கிறார். திட்டமிட்ட இந்த இந்த மாற்றமும் கவனித்து கொள்ள வேண்டிய மாற்றம் தான்.
அவன் விழித்துக் கொண்ட போது கடல் நீலநிறமாக இருந்தது. கடலுக்குள் இருந்து எழுந்த மெல்லிய ஒளியால் வானும் நீலம் கொண்டிருந்தது. நீலத்தைக் கண்நிறைய உளம் மலர நோக்கி நின்றான். நீலம் ஒரு புன்னகை, கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது என்று எண்ணிக் கொண்டான். அவன் அடைந்த அனைத்தையுமே அவ்வரியாகத் தொகுத்துக் கொள்பவன் போல அதிலிருந்து மீளமீளப் பறந்தெழுபவன் போல அச்சொற்களைத் தன்னுள்ளே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான். ஆம், நீலம் ஒரு புன்னகை. [ 598]
இந்த வரிகள் கொற்றவையின் கடைசி வரிகள். அந்தக் கடைசி வரிகளை எழுதுவதற்கு முன்பு தனது தேடலின் கணங்களாக எழுத்தாளன் எழுதியுள்ள சில பகுதிகளையும் , அதன் வழி உருவாக்கப்படும் காட்சிச் சித்திரங்களையும் காணலாம்:
அவன் ஆவலுடன் அருகே சென்று கூர்ந்து நோக்கினான். தேய்ந்த சிலையில் எதுவுமே தெரியவில்லை. கண்கூசு[ரு]ம் தோறும் காட்சி மங்குதல் போலிருந்தது. தூக்குவிளக்கொளி சற்றே அசைந்த போது ஒரு கணத்தில் அவன் அன்னையின் வலப்பக்க இரண்டாம் கையில் இருந்த சிலம்பைக் கண்டான். எண்ணமேயில்லாமல் காலத்தின் அகழியொன்றைத் தாண்டி மீண்டான். [ 587]
அன்னைக்கு நிறையக் குழந்தைகள். மண்ணிலுள்ள அனைவருமே அவள் மக்கள். அத்தனை பேரும் நலமாக இருக்க வேண்டுமென்றுதான் அன்னை தவம் செய்தாள். ‘‘ கால் வலிக்காதா? ’’ என்றான் மகன். அவன் மகனைத் திரும்பி நோக்கினான். பதில் சொல்வதற்குள் அவன் மகள் ‘‘ வலிக்காது’’ என்றாள். [594]
இரவு உணவுண்டு நடந்து விடுதியறைக்கு மீண்டனர். இவள் ஏன் இப்படி இருக்கிறாள். இவள் பேசாமல் இருந்து நான் பார்த்ததே இல்லை என்றாள் அவன் மனைவி. மகளை நோக்கினான். அக்கண்களும் கன்னக் கதுப்பும் குறுமயிர்நிரையும் கழுத்தில் சிறுசெம்மணிமாலையும் என அவன் கைகளில் பிறந்து விழுந்து தவழ்ந்தெழுந்து வளர்ந்த குழந்தையென ஒரு கணமும் அறியவே முடியாத எவளோ என மறுகணமும் தோன்றினாள்.[595]
---- அவன் மீது மெல்லக் கைவைத்தபடி இந்த இரவு முடிந்தது, இனித் தூங்குங்கள் என்றாள். அவன் இன்னும் முடியவில்லை,இரவு இருக்கிறதே என்றான். அவள் மெல்ல அவனைத் தட்டியபடி , நினைக்கத்தொடங்கினால் முடிக்கவே முடியாது; நினைப்பை அவ்வளவு தொலைவுக்கு துரத்தி அடைவதென்ன என்றாள். நினைவுகள் நிகழ்கின்றன என்றான் அவன். இன்று முழுக்க உங்கள் அன்னையை நினைத்துக் கொண்டிருந்தீர்களா என்ன என்றாள் அவள். இல்லை . அவ்வப்போது அவள் நினைவு வந்து சென்றது, நான் இவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன் என அவன் தன் மகளின் கொலுசணிந்த கால்களைத் தட்டினான். இவளைப் பார்க்க என் அம்மா போலவே இல்லை. இவள் நிறமும் கண்களும் பேச்சும் எதுவுமே அவளல்ல. ஆயினும் இவளை அவளாகவே என் அகம் சில தருணங்களில் எண்ணிக் கொள்கிறது. அவன் அவளை நோக்கித் திரும்பி, இறந்தவர்களை தென்புலத்தோர் என்கிறோம். தென்கடலுக்குள் ஆழத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்வதுண்டு. இத்தென்கடலுக்குள் என் அன்னையும் அவள் அன்னையரின் பெருநிரையும் உறைகின்றனர் என்று எண்ணிக் கொண்டேன் என்றான். தேவையில்லா நினைவுகளை மீட்ட வேண்டியதில்லை, துயிலுங்கள் என்றாள் அவள். இருளில் அவனை மெல்ல முத்தமிட்டபின் பெரு மூச்சுடன் தன்னைத் தளர்த்திக் கொண்டாள். [596]
இந்தப் பகுதிகளை வாசிக்கும் போது ,எழுத்தாளர் ஜெய மோகன் தன் வாழ்க்கை சார்ந்து சில துயர நிகழ் வுகளை வாசகர்களுடன் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது நினைவுக்கு வந்தால் இக்காட்சிகள் உண்டாக்கும் புழுக்கம் கூடுதலாக ஆகி விட வாய்ப்புண்டு. அவர் பகிர்ந்து கொண்டுள்ள துயர நிகழ்வுகளுள் பெருந்துயர நிகழ்வாக நிற்பது அவரது தாயின் தற்கொலை. கொற்றவையின் கடைசிப் பகுதி இப்பெருந் துயரத்தை வாசகனுடன் பகிர்ந்து கொள்வதுடன் , அக்கொற்றவையின் பயணம் எழுத்தாளனின் மகளாக மேலும் தொடர்கிறது என முடிகிறது. இந்தத் துயரத்தின் கண்டுபிடிப்பு தான் கொற்றவையென்னும் காப்பிய நாயகியின் கதையை எழுதச் செய்கிறது என்பதாக நிறைவுபெறுகிறது. அந்தத்துயரத்தின் மௌனமும் ஓலமும் சேர்ந்து மொத்தக் கதையையும் ஒரு தனிமனிதனின் தன்னிலையைத் தேடும் பயணமாக ஆக்கி விடுகின்றன. அந்த மாற்றம் தான் காப்பியத்தைப் புனைகதையாக மாற்றும் மாயத்தையும் செய்கிறது எனக் கருதுகிறேன்.
கொற்றவையின் கருத்தியல்
காப்பியமாகத் தொடங்கிப் புனைகதையாக உருமாறிக் கொண்டுள்ள கொற்றவையை ஜெயமோகன் எழுதியது இந்த ஒற்றை நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மட்டும் தானா..? வேறு நோக்கங்கள் இருந்திட வாய்ப்புண்டா..?என்ற கேள்வியும் எழுவது இயல்பான ஒன்று. எழுத்தாளனுக்கு அப்படியொரு நோக்கம் இருப்பது தான் அந்தப் பிரதிக்குப் பல தள நிலைகளை உண்டாக்க வல்லதும் கூட. ஜெயமோகன் தனது புனைகதைகளின் வழியாகச் சமகாலத்தில் நிலவும் அல்லது ஆதிக்கம் செலுத்துவதாக அவர் நம்பும் கருத்தியல்கள் அல்லது சிந்தனைப் போக்குகள் மீது நேரடியாக அல்லாமல் தனது புனைகதைகளின் வழியாக விமரிசனங்களை எழுப்பும் நோக்கம் கொண்டவர் அவர். எழுப்பும் விமரிசனங்களும் சிந்தனைப் போக்கும் அவரை ஒற்றைக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளராக அடையாளப்படுத்தாமல் வெவ்வேறு முனைகளைத் தேடி அலையும் ஆர்வலராக அடையாளப்படுத்தவே செய்துள்ளன.
வெவ்வேறு நிலைபாடுகளில் பயணம் செய்யும் படைப்பாளியாக அவர் அலைந்தாலும் ஒவ்வொரு நாவலிலும் அடியோட்டமாக அவர் முன் வைக்கும் கருத்தியல்கள் விவாதிக்க வேண்டிய கருத்தியல்களாகவே இருந்துள்ளன என்பதும் உண்மை. அவரது முதல் நாவல் [ரப்பர்] குறிப்பிட்ட வட்டார வாழ்வினை இயக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் பதிவு செய்யும் எழுத்தாளராகக் காட்டியது. அடுத்து வந்த பின் தொடரும் நிழலின் குரல் அவரது விமரிசனம் தொழிற்சங்கம் சார்ந்து இறுகிப் போன-சிந்தனைகளைத் தவற விட்டுவிட்ட பொதுவுடைமை இயக்கங்களின் மீது இருந்தது. சமயம், கடவுள் பற்றிய தேடலைத் தொலைத்துவிட்டு அவற்றின் பேரிலேயே இயக்கங்கள் நடத்தும் நிலையில் தனிமனிதனின் பயணம் எதை நோக்கியதாக இருக்கும் என்ற விடையை விஷ்ணுபுரத்தில் உள்ளோட்டமாக வைத்திருந்தார். பொருளை முதன்மைப் படுத்திய வாழ்க்கையை விரும்பும் மேற்கத்திய அறிவியக்கத்திற்குள் சிக்கிய இந்திய மனித வாழ்வின் சிதைவினைக் காடு நாவலில் விவரித்தார்.
அத்தகையதொரு நோக்கம் கொற்றவை என்னும் இப்பிரதிக்குப் பின்னாலும் இருக்கலாம் என நினைப்பது வாசகனின் கூடுதல் தேடுதல் தான். இல்லையென்றால் ஒரு தனிமனிதன் தன்னிலையைத் தேடும் பயணத்திற்குள் - தமிழ்ச் சமூக வாழ்வைப் பாரதூரமாகப் பாதித்துள்ள-தமிழ் இலக்கியத்தின் கொடுமுடிக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதையையும், அதன் நாயகி கண்ணகிக்கு எழுப்பப்பட்ட பத்தினிக் கோட்டம் இன்று கேரளத்தில் உள்ள கொடுங்களூர்க் கோயில் தான் என்ற வரலாற்றாய்வையும் புனைகதைக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன..? இந்தக் கேள்வி கொற்றவையைக் கவனமாக வாசித்த வாசகனுக்குத் தோன்றுவதும் கூட இயல்பான ஒன்றுதான். இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு, தமிழ்த் தொன்மங்களுக்குள் பயணம் செய்வதன் மூலம் தமிழ் அடையாளத்தை மீட்டெடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் தமிழ் எழுத்தாளர்களின் புதுவகை மோஸ்தர் ( Fashion) என்று பதிலையும் சொல்லி விடலாம். ஆனால் அப்படிச் சொல்வது, ஜெயமோகனின் படைப்பாளுமையைக் குறைத்து எடைபோடுவதாகவும், தமிழ்ச் சமூக உளவியல் போக்கு பற்றிய அவரது விமரிசனங்களையும் சிந்தனையையும் மிகச்சுலபமாக ஒதுக்கி விடலாம் என்று நினைக்கிற நினைப்பாக இருக்குமே ஒழிய, காத்திரமான அவரது பங்களிப்பைப் புரிந்து கொள்ள முயலும் முயற்சியாக இருக்காது.
தமிழ் நிலப்பரப்பின் தொன்மை மற்றும் பழங்காலம் பற்றி இப்புனைகதை, வரலாற்றின் பக்கங்கள் என நம்பத் தக்க வகையில் எழுதிக் காட்டும் சித்திரங்கள் புதியவை. ஏற்கெனவே தமிழ்த் தொன்மை வாதத்தில் பற்றுக் கொண்ட பலருக்கும் உவப்பானதும் கூட. இத்தகைய தொன்மைவாதச் சிந்தனையாளர்களின் கருத்தியலுக்கு எதிரானவராக அல்லது மாற்றுக் கருத்துடையவராக அறியப் படும் ஜெயமோகன் இப்புனைகதை மூலம் வேறு ஒரு வழித்தடத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் , நிகழ்காலப் பயன்பாட்டில் சிலப்பதிகாரத்தின் இடத்தையும், தமிழ்ப் பண்பாட்டு அரசியலில் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி வகிக்கும் பங்கையும் மறு வரையறை செய்யவும் முயன்றுள்ளது .
நிகழ்காலத் தமிழ் மனங்களிலும் பலவிதக் குறியீடுகளாக நிற்பவள் கண்ணகி. ஒரே நேரத்தில் தமிழ்ப் பெண்களின் நேர்மறைக் குறியீடாகவும் எதிர்மறைக் குறியீடாகவும் பரிமாணம் கொள்ளத் தக்க பாத்திரம். அடங்கிக் கிடந்த அன்புசால் மனைவியாகவும் , அந்த அடையாளம் காணாமல் போன போது ஆவேசம் கொண்ட பத்தினியாகவும் தமிழ்க் குடும்ப வாழ்வில் உலாவருபவள்.அரசியல் பரப்பிலோ வேறு பரிமாணத்தின் அடையாளம். வடவர்களின் கொட்டத்தை அடக்கிய தமிழர்களின் மேன்மையைச் சொல்லும் பண்டைய ஆதாரம் சிலப்பதிகாரம். வடமொழி, வடவர் ஆதிக்கம், வடக்கின் பண்பாடு இவற்றிற்கு எதிராக திராவிட அரசியல் முன் வைத்த முன் தோன்றிய மூத்த குடிப் பண்பாட்டின் அடையாளம் கண்ணகி. கடந்த அறுபது ஆண்டுக்காலத் தமிழ்ச் சிந்தனைப் போக்கில் கண்ணகியை வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் சொல்லாடல்களுக்குள் வடக்குக்கு எதிரான தெற்கின் வெற்றியைச் சுமப்பவள் கண்ணகி. கண்ணகியை முன் வைத்துக் கட்டப்பட்டுள்ள இச்சொல்லாடல்கள் மீது எந்தவித விமரிசனமும் வைக்காமல் மாற்றுச் சொல்லாடல்களைக் கட்டியெழுப்பியுள்ளார் ஜெயமோகன்.
விமரிசனமோ விவாதமோ உண்டாக்கவில்லை என்று சொல்வதைவிட அப்படியொரு வாய்ப்பு சிலப்பதிகாரக் காப்பியத்திற்குள் இருக்கிறது என்ற பகுதிக்குள்ளேயே அவர் நுழையவில்லை. இந்த ஒதுக்கல் அவரது புனைகதையின் நோக்கத்திற்கும் எழுப்ப விரும்பும் உணர்வுகளுக்கும் தேவையற்றவை என்றாலும் திட்டமிட்ட ஒதுக்கல் என்று கருதவும் இடமுண்டு. இப்படிக் கருதுபவர்களின் வாதமும் கூட நிகழ்கால அரசியல் சார்ந்தது தான்.
“தொன்மை மற்றும் பழங்காலத்தொட்டே இந்திய கண்டம் அல்லது தேசம் பல மொழிகளைப் பேசும் ஒன்றாகவே இருந்துள்ளது. அரசதிகாரம் சார்ந்து முரண்பாடுகளும் போர்களும் நடந்துள்ளன. ஆனாலும் அவர்களை இணைக்கும் சரடுகளாக சமய நடவடிக்கைகளும் தத்துவ விவாதங்களும் இருந்துள்ளன. இன்று அரசியல் பரப்பில் விவாதப் பொருளாக உள்ள வடக்கு X தெற்கு வேறுபாடுகள் எல்லாம் வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை. அந்த வேறுபாட்டை உருவாக்கி வளர்த்தவர்கள் ஐரோப்பியர்களே என்று கருதும் கருத்தோட்டத்தினர் தான் இத்தகைய ஒதுக்குதலைச் செய்கின்றனர்”.
பல நேரங்களில் அத்தகைய கருத்தோட்டத்துடன் தன்னை இணைத்து அடையாளப் படுத்தி வந்துள்ள ஜெயமோகனின் ஒதுக்குதலும் கூட அத்தகைய நோக்கம் கொண்டதுதான் என வாதிட வாய்ப்புண்டு. அவருக்கு முன்னாள் சிலப்பதிகாரத்தை அவரவர் கருத்தியல் அடிப்படையில் எழுதிப் பார்த்த பலரின் தொடர்ச்சியாகத் தான் ஜெயமோகனும் கொற்றவையை எழுதியுள்ளார். அப்படி எழுதும் போது அவரது கருத்தியல் பார்வை அதைத் தீர்மானிக்காமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதுமில்லை. கருத்தியல் அற்ற எழுத்து காத்திரமான எழுத்தாகவும் இருக்க முடியாதே.
தமிழின் புனைகதை வரலாற்றில் புத்தம் புதிய எழுத்து முறையாகவும், கவனமாக வாசிக்க வேண்டிய புனைகதையாகவும், பல நேரங்களில் காவியம் தரும் சுவையுணர்வுகளை உண்டாக்கும் மொழி நடையுடனும் கட்டுமானத்துடனும் வந்துள்ள கொற்றவை, நிகழ்காலத் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளுள் ஒன்றாக விளங்கத் தக்கது என்று சொல்வது பாராட்டல்ல;ஜெயமோகனின் திட்டமிடலையும் மொழித் தேர்ச்சியையும் படித்த ஆச்சரியத்தின் வெளிப்பாடு.
===================================================================
கொற்றவை [புதுக்காப்பியம்] தமிழினி, 6
No comments:
Post a Comment