முதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்கதொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை - நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் - வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்’ ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]
விஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.
மூன்று வாவிகள்:
சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

கொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.
கோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.
மூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த்எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]
காப்பியத்தின் மையம்:
தென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.

உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.
மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.
சிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்
முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
அலமரல் அசைவிளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!
சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.
சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.
****
உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.
****
கொற்றவையும் விஷ்ணுபுரமும் :
சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
காலம் என்று ஒன்று உண்டம்மா
என்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,
பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?
என்பதும் கொற்றவைக்கான வரிகள்.
சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.
விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.
ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.
கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.
சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்
என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.
****
காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.
******
பின்குறிப்பு :
[1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.

[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.]
[3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.
ஜடாயு:
[வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.

[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?
தாரை:
மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.

[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.
[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.
….
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
…..
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
……..
‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
……
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்;…59
வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்.
http://siliconshelf.wordpress.com/2014/05/24/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/
No comments:
Post a Comment