Friday, July 25, 2014

கணேஷ்பாபு கடிதம்

உயர்திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த சில மாதங்களாக தங்களின் “கொற்றவை” நாவலை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறேன். உடுமலை.காம் இணையதளத்திலும் விசாரித்தேன். அவர்கள் நாவல் எங்கும் கிடைக்க பெறவில்லை என்றும், மீண்டும் அச்சில் ஏற்றுவதற்கு முயற்சி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்கள். தயவு செய்து நாவல் எப்போது கடைகளில் கிடைக்கும் என்ற தகவலை தங்கள் இணையதளத்தில் வெளியிடவும்.
என்னை எப்போதும் கவர்வது தங்கள் படைப்பில் தெறிக்கும் உக்கிரம் மற்றும் மொழி ஆளுமை. ‘லங்கா தகனத்தில்’ ஆரம்பித்து ‘மத்தகம்’ வரை உங்கள் மொழியில் தெறிக்கும் உக்கிரம் வாசிக்கையில் இனம்புரியா அச்சத்தையும் இன்பத்தையும் ஒருசேர அளிக்கிறது. கொற்றவையிலும் இச்சுவை பெரிதும் காணப்படும் என்று நம்புகிறேன். வாசிக்க ஆர்வமாய் உள்ளேன்.
மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்
அன்புள்ள கணேஷ்
கொற்றவை படிமங்களும் உருவகங்களும் கொண்ட நடை கொண்டது. என்னுடைய புனைதிறனின் சிறப்பம்சம் அதுவே என்பதே என் எண்ணம். அதன் உச்சம் கொற்றவை.
தூய தமிழில், சிலப்பதிகாரத்தில் உள்ள வடமொழிச்சொற்களைக்கூட களைந்து, உருவாக்கப்பட்ட கவித்துவ நாவல், ஆகவே புதுக்காப்பியம், அது
கொற்றவை இப்போது விற்பனையில் இல்லை. தீர்ந்துவிட்டது. தமிழினி வெளியீடாக வரும் நவம்பரில் வெளிவரும். அந்த தகவலை இணையதளத்தில் தெரிவிக்கிறேன்
ஜெ
ஜெயமோகன்

கணேஷ் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை” என்று தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ” முன்னூறு பக்கங்கள் வரை உரைநடையில் எழுதிவிட்டு பின்னர் இது கோரும் வடிவம் வேறு என்பதை உணர்ந்து செய்யுள் நடையில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ” ஒரு யுகத்திற்கு ஒருமுறை ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுக்கிறார் ” என்ற சொற்றொடரே விஷ்ணுபுரம் எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது என்றும் ஒரு குறிப்பு உண்டு. அது போல “கொற்றவை” என்ற புதுக்காப்பியத்தைப் படைப்பதற்குத் தங்களுக்கு ஆதார சக்தியாக அமைந்தது எது என்பதைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள இயலுமா? இதை எழுதுகையில் தங்களுக்கு சவாலாக அமைந்த விஷயங்கள் மற்றும் அவற்றை எதிர்கொண்டு வென்ற விதத்தையும் அறிந்து கொள்ள ஆவல். கடிதம், பல்கலைக்கழக வினாத்தாள் போன்று அமைந்தததற்கு மன்னிக்கவும்.
மிக்க அன்புடன்,
கணேஷ்
அன்புள்ள கணேஷ்
என்னுடைய எல்லா நாவல்களிலும் மையச்சரடாக ஒரு படிமம் ஓடுவதை நானே பின்னர் கண்டேன். நீலி என்று அதை சொல்லலாம். என்னுடைய குழந்தைப்பிராயத்தில் குலதெய்வமாக அறிமுகமாகிக் கதைகள் கற்பனைகள் வழியாக வளர்ந்துவந்த பிம்பம் அது. கட்டற்ற இயற்கை ஆற்றல். காடு என்னும் வடிவமாகக் கண்ணுக்குத்தெரிபவள்.
பின்பு நான் முதல்முறையாகக் கன்யாகுமரி அம்மனைக் கண்டேன். அப்போது அவள் எனக்கு வேறு வகை நீலியாகவே தெரிந்தாள். அங்கே கடலுக்குள் அம்மன்பாறையில் உள்ள ஒற்றைப்பாதத்தடம் என்னை சொல்லிழந்து நிற்கச் செய்தது. அந்த வயதில் அந்தப் பெருந்தவத்தை எப்படியோ என் மனம் கண்டுகொண்டது என்று படுகிறது
அதுதான் தொடக்கம். நான் சொல்ல நினைத்தது அந்தப்பாதத்தில் இருந்து நீளும் அத்தனை பெண்படிமங்களையும்தான் என்று எழுதியபின் அறிந்தேன்

சாமிநாதன்,சுரேஷ்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,
நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இது முதல் இனி உங்களின் பாதிப்பு என்னைப் புரட்டிப்போடும் எல்லா நேரங்களிலும் கடிதம் எழுத முயலுவேன். தங்களைப் பற்றி வாசிப்பின் மூலமறிந்து தங்கள் எழுத்தின் உன்னத வல்லமையை உணர்ந்த பின்னரே இதை எழுதுகிறேன்.
யாரையும் எளிதில் பாராட்டிவிடும் எளிய மனிதன் அல்ல நான். நான் என்னும் அகந்தையை சற்று அதிகமாகக் கொண்டவன் நான். ஆனால் எல்லாம் “காடு” வாசிப்பிற்கு முன்னால். ஒரு புத்தகம் எவ்வளவு ஆழமாக, உக்கிரமாக, மூர்க்கமாக, காதலாக, பெரும் துயராக என்னுள் இப்படியொரு அதிசயத்தை செய்துகொண்டிருப்பதை என்னால் அணு அணுவாக உணர முடிகிறது. இலக்கிய வாசிப்பிற்கு என்னை முதல் முறையாகப் பழக்கப்படுத்தியதற்குக் கோடி நன்றிகள்.
கடந்த ஒருவாரமாக என் மனதில் ஏற்பட்ட திகைப்புகளை வார்த்தைகளில் சொல்லிப் புரிவது கடினம். அதற்கு என் விரல்களில் ஜெயமோகனின் பேனா இருக்க வேண்டும். காடு புத்தகத்தின் கடைசிப் பக்கங்களைப் புரட்டுகையில் என்னுள் ஏற்பட்ட மாற்றமானது இனி என் வாழ்வில் ஒருபோதும் கிடைக்காது. என் படுக்கையறைக் கதவுகள் அடைத்து நான் கதறி அழுத அத்தனை கண்ணீர் துளிகளுக்கும் நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள். “காடு” என்னுள் பெரும் துயராக ஒட்டிக் கொண்டுள்ளது. இயல்பில் வலுவான நெஞ்சம் படைத்தவன் என வெளிக்காட்டிகொள்ளும் என்னை “காடு” உடைத்தே விட்டது. இலக்கிய வாசிப்பைத் தொடங்கியுள்ளேன். தொடர்ந்து தாங்கள் எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன். முடிந்தால் ஒருமுறை உங்களை சந்திக்க நேரிலே வருகிறேன்.
திருநெல்வேலியிலிருந்து
சாமிநாதன்
அன்புள்ள சாமிநாதன்
சில தருணங்களில் வாசிக்கப்பட்டு சொல்லப்படும் சொற்கள் எழுத்தாளனுக்கு மிக அண்மையவை ஆகிவிடுகின்றன . அத்தகைய ஒரு கடிதம் இது.
காடு ஒரு கனவு. இளமைக்கனவு. இளமை என்பது உயிரின் உச்சகட்டம் நிகழும் காலகட்டம். ஆகவே அது உயிரின் கனவு. பூத்தகாடு என்பது எப்போதும் என் மனதில் அதற்கான தருணம்
ஆனால் நான் அவநம்பிக்கைகள் கொண்டவன். அந்த ஆழத்தில் இருந்து இலட்சியவாதத்தின் கனவால் மீண்டு வருபவன். இன்னும் ஆழமான ஒரு தேடலின் ஏக்கம் கொண்டவன்.
விஷ்ணுபுரத்தில், பின்தொடரும் நிழலின் குரலில், கொற்றவையில் அந்த நான்களை நீங்கள் அறிமுகம்செய்துகொள்ளக்கூடும்
சந்திப்போம்
ஜெ
ஜெயமோகன் அவர்களுக்கு,
இப்போதுதான் கொற்றவையை முடித்துவிட்டு எழுதுகிறேன்.
தமிழில் நான் பத்தாண்டுக்காலமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் விஷ்ணுபுரம் , காடு உள்ளிட்ட நாவல்களை வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தீவிரமாக உடலிலே அறிந்ததில்லை. என் கைவிரல்கள் எல்லாம் விரைத்து செத்துவிடுவேனோ என்ற பயம் வந்தது. எந்த இடம் என்று நீங்களே ஊகிக்க முடியும். நல்லம்மை சன்னதம் கொண்டு வரும் இடம்
நன்றி ஜெயமோகன்
எம்.சுரேஷ்
அன்புள்ள சுரேஷ்,
நன்றி. அதை உணரமுடிகிறது
ஜெ

பாரதி சிவசுப்ரமனியம் -கடிதம்

அன்புள்ள ஜெ மோ அவர்களுக்கு ,
கொற்றவை யின் முலைக்குறை காதை யோடு நிற்கிறேன்.
கதையில் என்னால் புரிந்து கொள்ள முடியாத பல இடங்கள் இருந்தும் ,இதுவரை வந்த காரணம் கதை மாந்தர்கள்…well defined characters
அடி சமம் இலாத பாத்திரத்தின் நீர் போல எபோதும் தளும்பிக் கொண்டே இருக்கும் மனதோடு கோவலன்.
நான் என்றைக்குமே மனிதர்களில் சந்திக்க விரும்பாத முதிர்ச்சியுடன் ,தெய்வங்களுக்கே உரிய ஒரு விதமான coldness உடன் கண்ணகி.
இன்னும் மாதவி,நீலி , மகதி,வெண்ணி , வள்ளி என அத்தனை பெண் பாத்திரங்களும் மனதுக்கு மிக நெருக்கமாக இருகிறார்கள்.
குறிப்பாகக் கதை சொல்லும் நீலி …குலக் கதை சொன்னது முடிந்த உடன்…கண்ணகியோடு சேர்ந்து நானும் நீலி சொல்லும் கதையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்….
கோவலன் கொலை செய்யப்பட்டபோது எனக்குள் எழுந்தது பெரும் துக்கத்திற்குப் பின் ஒரு வித நிம்மதி …
கதையில் மனித இயல்புகள் மிகுந்த ஒரே பாத்திரம் கோவலன்.அவனது மனக் குழப்பங்களில் இருந்து விடுதலை போல ஒரு மரணம்..
கண்ணகி யோடு சன்னதம் வந்து பின் செல்லும் பெண்களில் ஒருத்தியாய் என்னை உணர்ந்தேன்…மிக சிலிர்ப்பான இடம் அது…
அன்புடன் ,
பாரதி சிவசுப்ரமணியம்.
அன்புள்ள பாரதி
நன்றி.
கொற்றவையில் இருந்து ஆசிரியனாக நான் வெகுதூரம் வெளிவந்துவிட்டேன். அதை என்னுடைய ஆளுமையின் ஆழமான ஒருபகுதியால் அடைந்தது என்று சொல்வேன். ஒருவேளை என் அம்மாவுக்கு மிக நெருக்கமான ஜெயன் எழுதியது அது.
நெடுநாட்களுக்குப்பின் கொற்றவையை நான் வாசித்தபோது எனக்குப்பிடித்தமானதாக இருந்தது அதன் மொழியில் இருந்துகொண்டிருந்த ஒரு மெல்லிய தாளம்தான். தூக்கத்தில் ஏதாவது பாட்டுக் கேட்டால் நாம் கனவுக்குள் நினைக்கும் விஷயங்களுக்கு அந்தப்பாட்டின் தாளம் அமைந்துவிடும், அதைப்போல
ஜெ

சுஜாதா செல்வராஜ் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு
வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா?
கொற்றவையை எடுத்திருக்கிறேன்.அந்தப் புத்தகம் என்னுடனேயே எப்போதும் இருக்கிறது.ஆனால் படிக்கவே முடியவில்லை.என் இளைய மகள் அந்த புத்தகத்தை ‘burning book’ என்று சொன்னாள் .அதன் அட்டைப் படத்தைப் பார்த்து அப்படிச் சொன்னாள்.ஆனால் அது உண்மை.எரியும் அதன் எழுத்தின் வீரியம் என்னால் தாங்க இயலுமா என்ற அச்சம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.உள் இறங்கி வெந்து சாம்பல் ஆவேனோ?இல்லை,புடம் இட்ட பொன்னாய் வெளிவருவேனோ?என் சிற்றறிவுக்குக் ‘கொற்றவை’பெரும் சவாலாக தெரிகிறது.பெரும் ஆர்வத்தையும்,இயலாமையையும்,ஆதங்கத்தையும் அது எனக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.தணலில் விரல் நீட்டி வெளி இழுக்கும் நொடிப்பொழுது வெம்மை  அனுபவம்  போல்
கைக்கு வந்த ஒரு பக்கத்தைத் திறந்து படித்தேன்.நீலியுடனான கண்ணகியின் உரையாடல்.கண்ணகி சொல்கிறாள்’நோவற்ற,சாவற்ற,முடிவற்ற பயணம் ‘பற்றி அவள் கனவு கண்டதாகவும்,பின்  தான் ஒரு பெண் என்று அறிந்ததாக,இற்செறிக்கவும்,இல்சமைக்கவும் அன்னையாக அடங்கி அழியவுமே அவள் ஆக்கப்பட்டதாகவும் சொல்கிறாள்.ஆனால் எனக்குள் நான் அலைகளை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தேன் என்கிறாள்.பின்பு ‘நான் பெண்,எனக்குக் கரைகளே வழிகாட்ட முடியும்.அவற்றை மீறுகையில் மெல்ல நான் பெண்ணல்லாமலாகிறேன் என்கிறாள்.
இந்த வரிகள் போதாதா ஒரு நாளெல்லாம் என் மனதை உருட்ட? பெண்ணியம் பேசினால் உங்களுக்கு சலிப்பு வரும்.ஆனால் கண்ணகியின் இந்த மன ஓட்டம் அத்துணை பெண்களுக்கும் பொருந்தும்.முழு சுதந்திரம் என்பது என்றுமே எங்களுக்கு சாத்தியப்படாது.கரை உடைத்துப் பாய நினைக்கும் வெள்ளம்  அத்தனையும் அழித்துவிட்டு தன்னையும் சேறாக ஆக்கிக்கொள்ளும் என்பது நிதர்சனம்.ஆதலால் நாங்கள் கரைக்குள் ஒடுங்கியே ஓடுகிறோம்.சந்தோசமாக.ஆனால் கனவுகளுக்கு எப்போதும் கரைகள்
இருப்பதில்லை.
கொற்றவை என்னை ஒரு படி முன்னகர்த்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.இனி அச்சமில்லை.உங்களுக்குத் தெரியும் நான் என் பாதையில் முதல் படியில் இருக்கிறேன்.அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே இருக்கிறது.விமர்சனம் செய்யும் தகுதி எனக்கில்லை.என் மனதிற்குத் தோன்றியதை உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.அதில் எந்தத் தயக்கமும் எனக்கில்லை.என் கருத்துக்களில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.மறுக்காமல் என் தவறுகளைத் தெளிவிக்கவும்.ஒரு ஆசானாக அது உங்கள் கடமை.என் வாசிப்பும்,என் பார்வையும் சரியான பாதையில் இருக்கிறதா?உங்கள் எழுத்துக்களின் மையத்தை நான் சரியாகச் சென்றடைகிறேனா?இந்த சந்தேகம் இப்போதெல்லாம் என் கூடவே வருகிறது.கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஆட்கள் அற்ற நிலையில் உங்களையே தொந்தரவு செய்யும்படி ஆகிறது.
உடல்,மன நலனைப் பேணவும்.நன்றி
சுஜாதா செல்வராஜ்
அன்புள்ள சுஜாதா
கொற்றவையை நீங்கள் வாசிக்கலாம். அது ஆண்களைவிடப் பெண்களை எளிதில் உள்ளிழுக்கும் நூல். என் நூல்களிலேயே பெண்களுக்கானது என ஒன்றைச் சொல்லமுடியுமென்றால் அதைத்தான் சொல்வேன். அதில் உள்ளது பெண்ணியமல்ல, அதற்கும் அப்பால் செல்லக்கூடிய ஒரு பிரபஞ்சப் பெண்நோக்கு. அது என்னுடையதல்ல , என் பாட்டிகளின் நீண்ட வரிசையால்  உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டது. இந்த மண்ணைப் பெண் மலையாளமாக ஆக்கி நிலைநாட்டியவர்கள் அவர்கள்.
நீங்கள் வேகமாக வாசித்து முன்னகர்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். இத்தனை சீக்கிரமாக என் ஆக்கங்களுக்குள் அதிகம்பேர் வந்ததில்லை. தாராளமாக எழுதலாம்.
ஜெ

கண்ணகி நடந்த மதுரை -ஜெயமோகன்

கொற்றவை நாவலில்  மதுரையை எரித்தபின்னர் கண்ணகி வைகை வழியாக சென்று சுருளி ஆறுவழியாக மலை ஏறி இன்றைய மங்கலதேவி கோயில் இருக்குமிடத்தில் நின்றாள் என்றும், குறும்பர்கள் அவளைக் கண்டார்கள் என்றும், அவள் அங்கேயே பௌத்த துறவியாக இருந்து சமாதியடைந்தாள் என்றும் எழுதியிருக்கிறேன். அந்த ஊகங்களுக்கு ஏராளமான ஆதாரங்களைச் சொல்ல முடியும்.

அந்த மலைமேல் கண்ணகிக்குக் கோயில் இருப்பதும், அது வைகையின் வழியாக ஏறிச்செல்லக்கூடிய இடம் என்பதும், அக்காலகட்டத்தில் நீர்வற்றிய ஆற்றின் கரையே வழியாக பயன்பட்டது என்பதும் ஊகத்துக்கு முக்கியமான காரணங்கள். குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள். அவள் கோயில்களில் குறும்பர்களுக்கு ஒருநாள் முக்கியமரியாதை அளிக்கப்படுகிறது. அன்று அவர்கள் குறும்பாட்டை கோயிலுக்கு பலியாகக் கொடுக்கிறார்கள்.
 
மங்கல மடந்தை கோயில்
கண்ணகி எரித்த மதுரை என்ன ஆயிற்று?  கொற்றவை அளிக்கும் சித்திரம் அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி. ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாக’ வந்த ஒரு புரட்சி. அறத்தின் வடிவமாக, அறைகூவி எழுந்த முதற்குரலாக , கண்ணகி ஒலித்திருக்கலாம். அதன்பின் மக்கள் அந்த நிலத்தை விட்டு கூட்டம் கூட்டமாக  வெளியேறி வைகையின் மறுகரையில் குடியேறினார்கள் என்றும் அங்கே புதிய மதுரை உருவாகி வந்தது என்றும் எழுதியிருந்தேன். அதுதான் இன்றைய மதுரை.

பழைய மதுரை ஆற்றுக்கு மறுகரையில் குறுங்காட்டுக்குள் இடிபாடுகளாகக் கிடப்பதன் சித்திரம் கொற்றவையில் வரும். அங்கே கண்ணகியை உக்கிரமான கொற்றவை தெய்வமாக நிறுவி வழிபடுவதை பயணியாகிய சீத்தலை சாத்தன் பார்க்கிறான். அந்த இடமே பலவகையான சமூகப்புறனடையாளர்கள் வாழும் பகுதியாக இருக்கிறது. கண்ணகிக்கு அங்கே உதிரபலி கொடுக்கிறார்கள். மதுரை மக்கள் அப்பகுதியிலேயே செல்வதில்லை.

அந்தச்சித்திரம் ஏறத்தாழ உண்மைதான் என்று பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். நவம்பர் 30, 2009 அன்று மதுரைக்குச் சென்றிருந்தபோது நண்பர் முத்துராஜ் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். குற்றவியல் வழக்கறிஞரான முத்துராஜ் மதுரையின் சிறுமொழிபு வரலாறுகளில் ஆர்வம் உடையவர். மறவர் சாதியைப்பற்றிய ஆய்வுகளைச் செய்துவருகிறார். பழைய மதுரை என்பது வைகைக்கு மறுபக்கம் உள்ள மணலூர் என்ற கிராமமே என்றார்.
 
அவர் கூடவர மணலூருக்குச் சென்றோம். மணலூர் வைகையின் கரையில் இருக்கிறது. பலநூறு வெள்ளங்களால் வண்டல் பரவிய மண் மிக வளமானது. ஆகவே இப்போது மொத்த ஊரும் வயலூராகவே இருக்கிறது. ஏதேனும் காலத்தில் மணல்வெளியாக இருந்திருக்கலாம். அங்கே மிகக்குறைவான வீடுகள்தான். மணலூரின் வயல்வெளிதான் பழைய மதுரை

அது பழைய மதுரை என்பதற்கான ஆதாரம் என்ன? அந்த ஊகம் உருவானதற்கு முதற்காரணம் பதினைந்துவருடங்கள் முன்பு வயலில் தோண்டிக்கொண்டிருந்தவர்கள் கண்டெடுத்த புராதனமான பெரிய பித்தளை சருவங்களும் வெண்கலச்சிலைகளும்தான். ஏராளமான பழைய மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அவை தொல்லியலாளர்வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் விரிவான ஆய்வுகள் ஏதும் நிகழ்த்தப்படவில்லை.

அந்த வயல்வெளியின் நான்கு எல்லைகளிலும் நான்கு எல்லைக்காவல் தெய்வங்கள் உள்ளன. அவை சதுக்கப்பூதங்களோ காவல்பூதங்களோ ஆக இருந்திருக்கலாம். இப்போது பலமுறை புதுக்கிக் கட்டி அய்யனார், கறுப்பசாமி கோயில்களாக உள்ளன. அதுதான் பழைய மதுரையின் எல்லையை ஊகிப்பதற்கான தடையம். பழைய மதுரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும் இரண்டு கிலோமீட்டர் அகலமும் உடையதாக இருந்திருக்கலாம்.

நெடுங்காலம் பொட்டலாக கிடந்த அந்தப்பகுதியில் பலரும் மெல்லமெல்ல குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தது முப்பது நாற்பதுகளில்தான். சுதந்திரத்துக்குப் பின்னர் அறுபது எழுபதுகளில்தான் நிலப் பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஆழமாக உழுபவர்கள் பல கற்சிலைகள் மண்பாண்டங்களைக் கண்டடைந்துள்ளார்கள். ஏராளமான மேடுகள், அனேகமாக கட்டிட இடிபாடுகள், இருந்திருக்கின்றன. விவசாயத்துக்காகச் சமப்படுத்தப்பட்டனவாம்.

ஆனால் அந்த இடம் ஆழமான வண்டல்படுகைகளால் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே தொல்லியல் ஆய்வுசெய்வதாக இருந்தால் பத்தடிக்கும் மேலான தோண்டித்தான் செய்ய வேண்டும். அப்படி ஏதும் செய்யப்பட்டதில்லை. பொதுவாகவே தமிழக வரலாற்றில் போதுமான அளவு தொல்லியல் கவனம் விழுந்ததில்லை என்பதே உண்மை.

வயல்வெளி வழியாகச் சென்று வெண்கலப்பாத்திரங்கள் எடுக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். எடுத்தவரே கூட வந்து இடத்தைக் காட்டினார். வயலுக்கு அப்பால் உள்ள ஏரியில் சில கற்சிலைகள் கிடைத்ததாகவும் அவற்றை எடுத்தவருக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதனால் திருப்பிக் கொண்டுபோய் போட்டுவிட்டதாகவும் சொன்னார்.

நாலடி ஆழத்தில் வரப்புக்காக தோண்டப்பட்ட அந்த இடத்தில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் உடைந்து கிடந்தன. சாதாரண பானையோடுகள் அல்ல என்பது தெரிந்தது. அவற்றில் கருமையும் சிவப்பும் கலந்திருந்தது. இலுப்பை எண்ணை கலந்த மண்ணால் பாண்டங்கள் செய்வதென்பது இரண்டாயிரம் வருடத்துக்கு முன்புள்ள வழக்கம். இலுப்பை எண்ணைதான் கருமையாக ஓட்டின் பாதியில் தேங்கி நிறம் கொடுக்கிறது.

கண்ணகி நடந்த மண். கண்ணகியை கண்டவர்களின் கை பட்ட கலம். ஒரு துண்டு மண்பாண்ட ஓட்டை நினைவுக்காக எடுத்துக்கொண்டு திரும்பினோம்

தியாகு கடிதம்

ஐயா வணக்கம்,
அண்மையில் ‘கொற்றவை’ நூலைப் படிக்க ஆரம்பித்தேன்.
நீங்கள் படைத்த படைப்பில் என் விரல்கள் வருடிய முதல் பூ. அருமையான சொல் அமைப்பு, அருமையான பொருள் விளக்கம். மிக அருமை.
ஆனால்,
நூறு பக்கங்கள் படிக்கும் முன் பல கேள்விகள். கேள்விகளுடன் தொடர மனம் ஏனோ முன்வரவில்லை. என் கேள்விகள்,
நூலில் நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையா? தொல்குடி?சிவன்?குமரிக்கோடு?தமிழ் பிறந்த விதம்? பாண்டியர்கள்? மதுரை?தொல்காப்பியர்?…
இப்படி நீங்கள் விளக்கிய ஒவ்வொரு விளக்கத்திற்கும் ஒரே கேள்வி தான், உண்மையா? உண்மையா? உண்மையா?
உங்கள் மறு மொழி தேடிக் காத்திருக்கும் புதிய விசிறி,
தியாகு.
அன்புள்ள தியாகு
உண்மை என்றால் என்ன? தகவலுண்மை ஒன்று உண்டு. தத்துவ உண்மை உண்டு. புனைவு உண்மை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாராம்சத்தைக் காட்டுகின்றன. சிலசமயம் அவை ஒன்றுக்கொன்று முரண்படவும் செய்யலாம்
கொற்றவை பேசுவதெல்லாம் புனைவு உண்மைகளையே- தகவலுண்மைகளை அல்ல. புனைவுக்கு அடிப்படைத்தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
ஜெ

ஷெய்குராஜா கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் ‘கொற்றவை’ நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன்.அருமையாக இருந்தது.சமீபத்திய விகடனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தங்களின் ஆழ்ந்த தத்துவ ஈடுபாட்டை அவருக்குப் பிடித்த விஷயமாகச் சொல்லியிருந்தார்.அதை நான் அறிந்து கொள்ளும் விதமாகத் தங்களின் ‘கொற்றவை’ நாவல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது.அதில் ‘பழம்பாடல் சொன்னது’ மற்றும் ‘பாணர் பாடியது’ ஆகிய பகுதிகள் மட்டும் எனக்கு சற்றுப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது.அந்தப் பகுதிகளைத் திரும்பவும் ஒருமுறை படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.மற்றபடி,நீங்கள் எனக்கு அளித்தது குறைவில்லாத தத்துவ அமுதம்.
நான் பெருங்காப்பியமான ‘சிலப்பதிகாரத்தை’ப் படித்தது கிடையாது.ஆனால்,அதைப் பற்றிப் பாடப்புத்தகங்கள் மூலம் கொஞ்சம் அறிந்து கொண்டதுண்டு.’நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என அதன் சிறப்பைப் பற்றி அறிந்தோர் கூறியதைக் கேட்டிருக்கிறேன்.அதன் முழு அர்த்தமும் ‘கொற்றவை’ நாவல் மூலம் தெரிந்து கொண்டேன்.இந்த நாவலைப் படிக்கும் போது சிற்சில நெருடல்கள் என்னை ஆட்கொண்டன.அவையாவன,
1.இது சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்பது தெளிவு.ஆனால்,நீங்கள் ‘காப்பியம் கூறியது’ என்ற பகுதிக்கு முன்பு வரை எடுத்துரைத்தது அனைத்தும் ‘சிலப்பதிகாரத்தில்’ கூறப்பட்டவைதானா……? இந்த விஷயம் எனக்குப் புரியவில்லை.
2.//அன்னையே அழியாப் பெருவல்லமையென அறிக.விண்ணகங்களின் கோள்களைச் சுழலவிடுபவள்.சேற்றுப்புழுவில் நின்று துடிப்பவள்.கனிகளில் சிவந்து இனிப்பவள்.சூரியன்களில் எரிந்து வெடிப்பவள்.அவளே சத்தி.அவள் புகழ் வாழ்க!// – இந்த வரிகள் இசுலாமியத் தத்துவத்தை எனக்கு நினைவுபடுத்துகின்றன.
3.’கபாடபுரம்’ புதுமைப்பித்தன் எழுதியது என்று இறுதிப்பக்கங்களில் வருகிறது.ஆனால்,அது தீபம் ‘நா.பார்த்தசாரதி’ எழுதியது என்பதைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மற்றபடி,இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்பல.தங்களுக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.
ஷெய்கு ராஜா
அன்புள்ள ஷெய்குராஜா
கொற்றவை,சிலப்பதிகாரத்தை மூலமாக கொண்டு மிகமிக விரித்து எழுதப்பட்டது. பல பகுதிகள் சுதந்திரமாகக் கற்பனைசெய்து எழுதப்பட்டவை. தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றைப்பற்றிய ஒரு நவீனத்தொன்மத்தை உருவாக்கும் முயற்சி இது . காப்பியம் கூறியது உட்படப் பலபகுதிகளில் உள்ளவை,சிலம்பில் உள்ளவை அல்ல.
அன்னையை ஆதிப்பெரும்சக்தியாக உணர்வதென்பது ரிக் வேதம் முதல் உள்ளது. தேவிபாகவதம் அதன் உச்சநிலை. அந்த அருவமான அன்னையைக் கண்ணுக்குத் தெரியும் ஒரு வடிவமாக வழிபாட்டின் பொருட்டு உருவகம் செய்கிறார்கள்.
ஆனால் அருவமான இறைச்சக்தியை எங்கும் எதிலும் காணும் உச்சநிலை,இஸ்லாம் உட்பட எல்லா மத தரிசனங்களிலும் உள்ளதே
கபாடபுரம் என்ற பேரில் புதுமைப்பித்தன் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். நா.பாவின் நாவல் பிற்பாடு வந்தது
தங்கள் வாசிப்புக்கு நன்றி. மேலும் ஒருமுறை வாசித்தபின் இன்னும் தெளிவு வரக்கூடும்
ஜெ

கொற்றவை சிறப்பிதழ் தமிழ்நேயம்

மார்க்ஸிய அறிஞரு,ம் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: 'கொற்றவை' படைப்பும் பார்வையும்]
”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில் தமிழ் சமூகத்தின் தேவைகள் மற்றும் உணர்வுகளை உள்வாங்கி மேலும் திரண்டு இளங்கோவடிகள் மூலம் அற்புதமான காப்பிய வடிவம் பெற்று சிலம்பின் கதையாகியது. நம் காலத்திலும் நம் தேவைகளுக்கு ஒத்த முறையில் பாரதிதாசன் முதலியவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் மறுபடைப்பாக வெளிப்படுவதை பார்த்து வருகிறோம். சிலம்பினுள்ளும் பேசப்படாத மௌனங்களை உடைத்துப் பார்ப்பதோடு சிலம்புக்கு முன்னரே குமரிக்கண்டம் தொடங்கி தமிழ் வாழ்வினுள் தோன்றி பின்னர் தனக்குள் இறுகிய நூற்றுக்கணக்கான தொன்மங்களை உடைத்துப் பார்க்கும் அறிவாற்றலும், கற்பனை வளமும், புனைவுத்திறனும் கொண்டு, தமிழ் மொழியின் பேரழகுகள் அனைத்தும் கொண்டதோர் உச்ச அளவிலான ஒரு படைப்பாக, ஒரு செவ்வியல் நாவலாக, உருவாகியிருக்கிறது கொற்றவை. தமிழ் உணர்வாளர் அனைவரும் கூடிக் கொண்டாடும் தகைமையோடு விளங்குகிறது இந்தப் புதிய காப்பியம்
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழரின் படைப்பு மற்றும் சிந்தனைத்துறையில் சாதனைகள் எனத் தொடர்ந்து நிகழ்த்தி வருபவர் நண்பர் ஜெயமோகன். தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகள் அனைத்தையும் தூசென உதறிக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பவர். இவரது படைப்புத்திறனுக்கும், வரலாற்று உணர்வுக்கும், திறனாய்வுப் பார்வைக்கும், தமிழுணர்வுக்கும் தன்னிகரற்ற சான்றுகளாக திகழ்பவை இவரது ‘விஷ்ணுபுரம்’ ‘பின் தொடரும் நிழலின் குரல்’ ‘காடு’ முதலிய நாவல்களும் திறனாய்வு நூல்களும். கொற்றவை இவரது படைப்புத்திறனுக்கு உச்சம் என நாம் பாராட்ட முடியும். இளங்கோவின் சிலம்பைக் கொண்டாடும் எந்தத் தமிழறிஞரும் இனிக் கொற்றவையை படித்துப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
தமிழரின் முதல் தாய்த்தெய்வமும் போர்த்தெய்வமுமாக விளங்கிய கொற்றவை குமரிக்கண்டத்தில் எழுந்து தமிழர் வாழ்வோடு நூற்றுக்கணக்கான வடிவங்களில் கலந்து கண்ணகியாகி அநீதியை சுட்டெரித்து கேரள மண்ணில் தெய்வச்சிலையாக நிற்கிறாள். தமிழுணர்வின் பேரெழுச்சியென பாவாணர் தொடங்கி பலரை கொண்டாடும் நாம் தமிழ் படைப்பிலக்கியத்தின் உச்சமெனத் திகழும் நண்பர் ஜெயமோகனை இனிக் கொண்டாடத்தான் வேண்டும்.”
என்று ஞானி முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
1 முனைவர் ஜெ.ராமதாஸ்– ‘கொற்றவை,படைப்புத்தடத்தில் ஒரு பயணம்’
2 முனைவர் அருள்திரு ·பில்ப் சுதாகர்– ‘கொற்றவை,பெண்ணிய நோக்கில் தமிழ்ச்சமூகவரலாற்றின் மறுவாசிப்பு’
3 முனைவர் சு.வேணுகோபால்–’அன்னையின் கரங்களில் துலங்கும் தமிழர் மானுடப்பரப்பு:கொற்றவை’
4 மலர்விழிமைந்தன் ‘கொற்றவை,ஒரு நயவுரை’
5 க.அறிவன் ‘சிலப்பதிகாரம்-கொற்ரவை இணைவும் விலகலும்’
ஆகிய ஐந்து கட்டுரைகள் இதில் உள்ளன.
[தமிழ் நேயம். ஆசிரியர் கி.பழனிச்சாமி [ஞானி] எண். 24,வி.ஆர்.வி நகர், ஞானாம்பிகை ஆலை அஞ்சல், கோவை 641029 இந்தியா]

எஸ்ஸார்சி விமர்சனம்


கொற்றவை சிலப்பதிகாரக்கதை. அதனையே ஜெயமோகன் கொற்றவை என்கிற காப்பியமாக்கி த்தந்திருக்கிறார்.அவர் குறிப்பிடுவதுபோல் ஒர் புதுக்காப்பியம். என்றே இதனைச்சொல்லலாம். மொழிநடையில் பாய்ச்சும் புதிய வீச்சு.

வியத்தகு உச்சம் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பெற்ற செல்வங்களுள் கொற்றவை பேசப்படும். ஆழச்சிந்தித்து படைப்பாக்கம் செய்பவர்கள் இந்நூலை வாசிக்காவிட்டால் அவர்களை ஏற்கமுடியாது.
அத்தனை சாகித்திய ரம்மியங்கள் தரிசனமாகும் வாசிப்பனுபவம். கிடைத்தற்கரிய பெரும்பேறு. மெய்.

காப்பியம் பயில்வோர் அகராதி கைவசம் இருப்பின் மட்டுமே தொடர இயலும் என்பதுவாய் அனுபவப்படும் நூல் வாசிப்பு.மந்தணம், துணங்கை,வைரியர், இடிஞ்சில் கரவு, திரங்கள்,, அரியர், தெய்யம், நாலம்பல முருகன், அரதனம், புலரி, இகளி, கூவளம், சுற்றம்பலம், புல்லர ¢,புடவி, செருக்கடி, இப்படியாக எத்தனையோ அரிய வார்த்தைகளை சந்திக்கநேரிடும். பிரமிப்பு. பிரமிப்பு. பிரமிப்பு.

அதிரவைக்கின்ற ஆழம் மிக்க எழுத்துக்கள். சொக்க வைக்கின்ற சொல் அடுக்குகள்.மெல்லிய சுருதி ஒன்று வாசிப்பின் வழி வந்து மீள்வதையும் அனுபவிக்க நேரும்.

‘அறிய முடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்’ இப்படித்தொடங்குகிறார் ஜெயமோகன். புன்னகைக்கும் கருமையே நீலம் என்று முடிவு தருகிறார். படைப்பின் இடை இடையே இலக்கணம் சொல்லிக்கொண்டு போகிறார் ஜெயமோகன்.

காட்டு உயிர்கள் அனைத்துமே முதல் மனிதனின் உடல் விட்டுப் பிரிந்தவையே. அவர்களின்கனிவே பசுவாகியது. வன்மை கனத்துக் காடதிரும் யானை ஆகியது. சினமே சிங்கம். எழுச்சியோ காற்றைத்தாண்டும் மான். தேடலே குரங்கு. விடுதலை பறவை. ஒலியின்மை மீன்கள். துயரம் புழுக்கள். கட்டின்மை விட்டில்கள்.
டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியை படைப்பாளி தனக்கே உரிய எழுத்தாளுமையோடு கொண்டு தருகிறார்.

அறிவு அடங்க உனர்வுகள் நிரப்பிக்கொண்ட வரிகள் இவை.
‘மெய்யே தங்களைச்சுற்றிலும் பலவகையான வடிவங்களில் வாழ்வதாககக்கண்டதும் அந்நாள்வரை அவர்களை
ஆண்டுகொண்டிருந்த அச்சம் அகன்றது.’

தத்துவ தரிசனங்கள் படைப்புமுழுவதும் விரவிக்கிடப்பது வாசகக்கொடுப்பினை. மில்டனின் இழந்த சொர்க்கம் தரும்
சுகானுபவத்தை நினைவு படுத்திக்கொண்டே வாசிப்பு நகர்கின்றது. பயில்தொறும் வசமாகிறது பரவசம்.

கடலை ஆள்பவன் பிரபஞ்சத்தை ஆளுவான் என்கிறபடி அருத்தம் தொனிக்கும் கடலைகண்டவனே வானைக்கண்டவன் என்னும் வரி வேத வாக்கியமாம் ‘ யோ அபாம் ஆயதனம் வேத:: ஆயதனவான் பவதி’ எனும்
தைத்திரிய ஆரண்யகத்தை ஞாபகப்படுத்துகிறது.
கபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் குறித்துதெழுதிச்செல்கிரார் ஜெயமோகன். அகத்தியர் பற்றிய செய்திகள்
பல சொல்கிறார்

அகத்தியனின் உருவாக மேடை மேலமர்ந்த நீர் நிறைந்த செப்புக்குடம் பேராசிரியனாகியது. அதன் முன் பணிந்து
அந்த ஆயிரம் புலவர்களும் அகத்தியனுக்கு மாணாக்கர்கள் ஆயினர். ‘
பாரதிதாசனின் ‘ அகத்தியன் விட்ட புதுக்கரடி’ படித்துப்பழகியது நெருடலாக வாசகனுக்கு அனுபவமாகலாம்.
ஆரிய அரசனைக்கொன்று குவிப்பதும் பொதியமலை குறுமுனியை வாழ்த்துவதும் இளங்கோ அடிகளுக்கு
மட்டுமே சாத்தியப்படும். வரலாறு என்பது தடம் பல கொண்டதுதானே.

.

மக்கள் அலையோசையே கேட்காத ஒரிடம் சென்று கயல்விழி அன்னைக்கு ஆலயம் சமைத்தார்கள். அதுவே இன்று நாம் காணும் மதுரை. கடல் தாய் இனி எல்லை தாண்டிவர மாட்டாள். மாணிக்கமூக்குத்தி அணிந்த அத்தாய் குமரியாக நிலம் காக்கிறாள். கதையை மீண்டும் சொல்லிமுடிக்கிறார் ஜெயமோகன்.

நீர் காற்று நிலம் எரி வான் எனக்கொற்றவை நூல் ஐந்து பெரும் பிரிவுகளாகப்படைக்கப்பட்டுள்ளது. பஞ்சபூதங்களின்
அரசாங்கம் கொற்றவையை விட்டுவைக்கவில்லை. சிலம்பின் வரிகள் நம்மை ஒவ்வொரு பகுதிக்கும் வரவேற்று
அழைத்துச்செல்கின்றன. படைப்பில் கண்ணகி போற்றப்படுகிறாள் நிறைவாகவே.

காப்பியத்தில் வரும் சைவக்குரவர் நூற்றுவர் வைணவர்குலம் என்கிற பதப்பிரயோகங்கள் சற்று ஐயத்தை கொண்டு
தருகின்றன. இப்படி குலம் பிரிப்பது அல்லது அப்படியும் கூர்மைப் படுத்துவது சிலப்பதிகார காலத்தே தொடங்கிவிட்டிருந்ததுவா. இதனை படைப்பாளி தெளிவு செய்ய வாசகன் விழையலாம்.

கோவலன் மாதவியைச் சந்திக்கிறான். இருவரிடை காமம் பற்றிய ச்சொல்லாடல்கள் நம்மைக்கிறங்க வைக்கின்றன.
‘காமம் நண்டுக்கால்களில் நாற்றிசையும் விரையும் பெரும் புரவி’
‘விழைவை மறுப்பு தாழச்செய்து நாம் அதன் மீது அமரும் பொருட்டே அவை.’
‘விடை வராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்’
இப்படி த்தொடர்கின்றன விளக்கங்கள். சொக்கவைக்கின்ற சொல் அடுக்குகள். சிந்திக்க வைத்து வாசகனை கூடவே
தரம் உரசிப்பார்க்கின்றன.

காவிரிப்புதுப்புனல் காலைநேரம் பறவைகள் ஒலி எழுப்புகின்றன. ஜெயமோகன் சொல்படி கரிச்சான் புள்ளொன்று சித்-திரை,சித்-திரை எனக்குரல் எழுப்புகிறது. மருதநிலத்து எழுத்துத்தச்சன் தி.ஜானகிராமன் செம்பருத்தியில் பேசுவது நம் மனதில் நிழலாடிப்போகிறது. படைப்பாலியின் தத் ரூபமான எழுத்து நமக்கு வியப்போடு உள்ளக்கிளர்ச்சி யூட்டுகிறது.
சோழ (கோழ) வளநாட்டில் செம்முத்து எடுத்தல் தடை செய்யப்பட்டது. செம்முத்துக்கள் வைத்திருந்தோர் கண்டறியப்பட்டு முலை அறுக்கப்பட்டனர். பல நூற்றுவர் முலைகள் இழந்தனர். அவர்களே குலதெய்வங்களாகி
முத்தாரம்மன்கள் என அழைக்கப்பட்டனர். ஜெயமோகன்

குறிப்பிட்டுச்சொல்லும் செய்தி இது. பொய்யாகவே
இது இருக்க ப்பிரார்த்தித்து நாம் நிம்மதி பெறலாம்.
ஒரு அரிய விஷயம். பரத கண்டமெங்கும் உரிமை மாக்களை விற்பதும் உரிமை மகளிரைப்பெறுவதும்
வழமைஆகி இருந்ததைக்குறிப்பிடுகிறார். அவை இழி தொழில். ஆகவே மாசாத்துவாணிகன் செய்வதில்லை
என்கிறார் ஜெயமோகன். அடிமை ஆகிற விஷயம் சைவக்குரவர் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றில் பேசப்படுகிற
செய்தியும் கூட. மாபாரதமும் சொக்கட்டான் ஆட்டத்தில் ஆட்களை வைத்து இழத்தல் பேசும். அரிச்சந்திர
புராணம் விற்பனை செய்துவிடும் எதனையும் ஆனால் பொய் பேசுதல் மாத்திறம் அனுமதிக்காது. அங்கொன்றும் இங்கொன்றும் என மனிதனை விற்றிருக்க முடியும். இது சாத்தியமே. ஜெயமோகன் அந்நிகழ்வை சொல்லும் பாங்கு
அமெரிக்க மண்ணில் கால்களில் விலங்கிட்டு நீக்ரோக்களை விற்பனை நிகழ்த்தியதை நினைவுக்கு கொண்டு
தருகிறது.

‘நாகத்தின் நஞ்சில்லாத தமிழ் உதிரம் இல்லை’ என்று சொல்லும் ஜெயமோகன் இன்னும் பொதுமைப்படுத்தி
நாகத்தின் நஞ்சில்லாத மானிட உதிரம் இல்லை என்றும் எழுதிடலாம். முன் தோன்றி மூத்த குடி என்பதால்
தமிழ் உதிரமே மானிட உதிரம் என்றும் விளங்கிக்கொள்ளலாம். அதுவும் சரியே.

ஒவ்வொரு வரும் தங்களில் உறையும் நாகத்தை அஞ்சுகிறார்கள். நாக பூசை அவ்வழி அமைகிறது என்கிறார்.


பொற்கால குப்தர் ஆட்சியிலே கணபதி பேசப்படவில்லை. அந்த ஆனை முகக்கடவுள் தமிழகம் வந்ததும் வாதாபி போருக்குப்பின்னரே என்பர். ஜெயமோகன் ஆனைமுகக்கடவுளைத்தொட்டுப்பேசுகிறார். முருகன்
குறக்குலத்து வள்ளி , தெய்வானைக் கதைகள் சொல்கிறார்.
‘ அடையாதவற்றால் ஆனதே வெளியுலகம். அடைந்தவற்றினால் சிறையுண்டவர்கள் மகளிர்.’
பெண்ணியத்தையும் அழகாக எடுத்து வைக்கிறார் ஜெயமோகன்.
தெற்ககத்துப்பரதர் மதுரை வந்தனர். கடல் கண்டு அஞ்சி ஒடோடி நிலம் சேர்ந்தனர். மீன் இலச்சினை
ஆனது. கயல் மீன் விழி அன்னை - மீன அக்ஷி- ஆனாள். பாண்டியர்கள் அரசாண்டார்கள்.

பெருகி உயர்ந்தது அரச குலம்.
விதைநெல் கவர்வதும் அறவோரைக்கொல்வதும் ஆலயம் கவர்வதும் அரசனைப்பழிப்பதும் கொலைக்குறிய
குற்றங்கள். இது அன்றைய மதுரையின் ஆன்ற மரபு. இவை வாசிக்கும்போது மேலைய நாடுகள் நோக்கி காயடிக்கப்பட்ட
விதைகட்கு த்தவம் கிடக்கும் ஆனைகட்டிப்போரடித்த சோழநாட்டு விவசாயிகள் நினைவுக்கு வந்து மனம் ரணமாகிறது.
ஐயப்பன் பற்றி அனேக விடயங்கள் படைப்பில் சொல்லப்படுகின்றன. திரை வில்லனாய் வலம் வந்த நம்பியார்,
நவாப் ராசமாணிக்கனாரின் நாடகம் எனப்பார்த்து ப்பார்த்து மட்டுமே ஐப்பன் நம்மோடு அழுத்தமாய்
தொடர்பு தொடங்கியதை அறிவோம்.
‘வேங்கையின் மீது ஏறித்தன் கூட்டத்தாரிடம் மீண்ட ஐயப்பன் புகழ் வஞ்சிநாடெங்கும் பரவியது.’
என்று பேசுகிறார் ஜெயமோகன். சிலம்புதொடா பல விஷயங்களில் இதுவும் அடக்கம்.

ஐயன் சபரணம் அடைந்த அம்மலையை சபரண மலை யென்றே பெயரிட்டோம்’ இப்படியாகச்சொல்லிக்கொண்டே
போகிறது புதுக்காவியம் கொற்றவை.

‘ மண்மீது அன்னையின் கண்பட்டதுளைகளெல்லாம் அவள் அல்குல்களாகின்றன அவள் கண் நோக்கிய
நீட்சிகளெல்லாம் அவள் தேடும் குறிகள் ஆகின்றன.மண்ணிலும் விண்ணிலும் கோடி கோடிப்புணர்வுகள்
நிகழ அன்னை தனித்திருக்கிறாள்’ கொடுங்கோளூர் அன்னை ஆலயம் பேசும் போது இப்படி குறிப்பிடும்
ஜெயமோகன் காம- அக்ஷியைத்தரிசிக்க வைக்கிறார்.


டச்சுக்காரர்களின் வருகை துப்பாக்கி பீரங்கி எழுப்பும் வெடிச்சத்தங்கள் மொழிபெயர்ப்பாளனின் இடை மறித்த
ஆக்கிரமிப்பு, ஆப்பிரிக்க கலாசாரத்துக்கும் தமிழக கலாசாரத்துக்கும் உள்ள தொடர்பு. கொடுங்கலூர் சின்னா பின்னமான செய்திகள். எத்தனை எத்தனை கன விஷயங்கள் இங்கே பேசப்படுகின்றன.

மகாத்மாகாந்தி, மகான் ஆதிசங்கரர், திருவள்ளுவர் ,விவேகானந்தர் என எல்லோரோடும் பிணைத்துக்கொண்ட
அல்லது பிணைக்கப்பட்ட குமரிமுனை இறுதியில் விவரணமாகிறது. இது தேவையென படைப்பாளி உணர்ந்திருக்கக்கூடும்.
நீலம் ஒரு புன்னகை. விடை சொல்ல முடிக்கிறார் ஜெயமோகன்.

எழுத்துலகில் இது அசுரசாதனை. ஜெயமோகன் புரிந்துகொன்டவைக:ளின் எழுத்துக்கடைசல்.. படித்துப்படைப்பாளிகள் தம் தளம் விரிவு செய்யலாம். வாசகர்கள் சிரத்தையோடு மட்டுமே படித்து நிறைவுபெறல் சாத்தியமாகும்.
கொற்றவை தமிழுக்குச்செல்வம்
படைப்பாளியின் ஆழம் ஆளுமை ஆகிருதி காணக்கிடைக்கும் புதின காவியம்.-
தமிழினி சாதித்தவைகளுள் கொற்றவை தனித்துவமானது

தினமணி விமர்சனம் -கரு ஆறுமுகத்தமிழன்


தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக் கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப் போய்விட்ட இன்றைய காலம் வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது "கொற்றவை'. 

சிலப்பதிகாரத்தின் மையம், தீதிலா வடமீனின் திறமுடைய கண்ணகி. "கொற்றவை'யின் மையம், பெற்றம் புரந்தும் புதைத்தும் தெய்வமாக நிலைபெற்றிருக்கிற கொற்றவை. 

"கொற்றவை' கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது. 

கதையை வேறுபட்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு பார்வைகளின் ஊடாக நகர்த்திச் செல்கிறது. உரைநடை வடிவத்தில் இருக்கிறதென்று பெயரே ஒழிய, பாவியமாகவே எழுதப்பட்டிருப்பதுபோன்ற உளமயக்கை உருவாக்குகிறது. திசைச் சொற்களின் துணையின்றி முற்றாகத் தமிழில் இயல்கிறது இக்காப்பியம். 

தன்னேரில்லாத் தமிழின் வளமைக்கும் அழகுக்கும் மீண்டும் ஒரு சான்று இது. 

பெண்களைப் பேசுகிறது "கொற்றவை'. பெண்ணின் பாடுகளை, கேட்கச் செவிதருவாரில்லாமல் தங்கள் உள்ளத்தைத் தங்களுக்குள்ளேயே ஒளித்துக் கொள்கிற அவர்களுடைய உள்ளொடுக்கத்தை, கடலன்ன காமம் உழந்தும் மடலேறாத் தொல்பெருந்தகைமையை, துன்பங்கள் அனைத்தையும் தாய்மையினால் வென்று மேற்செல்கிற தெய்வ நிலையைப் பேசுகிறது கொற்றவை. 

அன்னையர் பிறக்க, அன்னையர் மறைய, தாய்மை மட்டும் அழியாமல் வாழ்கிறது என்பதுதான் கொற்றவையின் காப்பிய மையம். 

தெய்வங்களின் தோற்றத்துக்குப் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்கிற காரணங்கள் கற்பிக்கிறார் ஜெயமோகன். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்' முன்தோன்றிய மூதன்னை ஒருத்தி அவளுடைய சமூகத்தால் கொற்றவைத் தெய்வமாக்கப்படுகிறாள். அவளுடைய வழித்தோன்றல்களான முக்கண்ணன், திருமால், முக்கண்ணனின் மக்களான ஆனைமுகன், ஆறுமுகன் என்று நினைக்கத்தக்க பெருவாழ்வு வாழ்ந்த முன்னோர்கள் தெய்வங்களாகிறார்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்களைத் தெய்வமாக்கும் இந்த மரபுதான் கண்ணகியையும் தெய்வமாக்குகிறது. 

தமிழ்மரபின் தெய்வங்கள், மனிதர்கள் கால்பாவி நடக்கிற தரையிலிருந்து, அத்தரையில் கூடியும் முரண்பட்டும் அவர்கள் வாழ்கிற சமூகங்களிலிருந்தே கிளம்பியிருக்கிறார்களேயன்றி விண்ணிலிருந்து இறங்கி வந்துவிடவில்லை என்று தெய்வக்குழப்பம் கொண்ட மாற்று மரபுகளுக்குத் தாய்மையை அடையாளம் காட்டிச் சொல்கிறது "கொற்றவை'. 

மணிமேகலையும், காப்பியப் புனைஞர்களான சாத்தனாரும் இளங்கோவடிகளும் "கொற்றவை'யில் கதைமாந்தர்களாக உலவுகிறார்கள். தமிழ் வழிபாட்டு மரபின் அடிப்படையில், தென்தமிழ்ப் பாவைக்குக் காப்பியம் செய்த இளங்கோ சபரணமலையில் பெருநிலை பெற்று ஐயப்பன் எனத் தெய்வமாகிறார். 

ஜெயமோகனின் புனைவாற்றல் காற்றின் விரைவு. அறியாக் கடலாழத்தில் அது மீனின் சிறகலைப்பு. தர்க்கத்தின் அடர்காடுகளில் அது தாவும் மானின் குளம்பு. உள எழுச்சியில் அது விண்ணளக்கும் பருந்து. 

கொற்றவை - ஜெயமோகன், பக்.600 ரூ.280, தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, சென்னை -600 014

சிவக்குமார் விமர்சனம்

ஜெயமோகனின் பல்வேறுபட்ட புனைவாக்கங்களுள் கொற்றவை எனும் இப்புதினம் புனைவுத் தளத்திலிருந்து சற்றே நீண்டு ‘காப்பியம்’ எனும் வரையறைக்குள் இயங்குவதாக அடையாளப்படுத்தப்பட்டது. சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியையும் இயல்களாகப் பிரித்து ஒவ்வொரு இய லுக்கும் சிலப்பதிகார வரியே தலைப்புகளாகத் தரப்பட்டுள்ளது. நூலின் முற்பகுதி ‘பழம்பாடல் சொன்னது’ எனும் தன்மையில் வர லாற்றுக்கு முந்தைய கால வரலாற்றினை, அதாவது தென்னிலப் பரப்பின் விவரங்களைத் தரும் தன்மையில் அமைந்துள்ளது.
அதற்கடுத்த ‘காற்று’ ‘நிலம்’ ‘ஏரி’ ஆகிய பகுதிகள் சிலப்பதிகாரக் கதையினை எடுத்துக் கூறும் விதமாக அமைந்துள்ளன. இவர் எடுத்துக் கூறும் நிகழ்வினுள் இளங்கோவின் கதையமைப்பு, உத்தி ஆகியவற்றை வரிசைப்படி சொல்லாமல் இன்றைய அறிவுஜீவி பாரம்பரிய விவாதங்களையும் கதையினூடே திணித்து வந்துள்ளமையை வாசகனால் உணர முடிகிறது.
சிலப்பதிகார உரையமைப்பு, கண்ணகியின் வழக்குரை, மதுரை தீப்பற்றி எரிதல் முதலான நிகழ்வுகள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றியே எழுதப்பட்டுள்ளன. ஆனால் புகார் காண்டத்தின் இறுதியில் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சரவணமலையில் ஐயப்பனாகத் தோற்றமளிக்கிறார் எனும் கருத்தினைத் திணித்து இக்காப்பியத்தை முடித்திருக்கிறார். ஜெயமோகனது ‘ரப்பர்’ தொடங்கிக் கொற்றவை வரையிலான புனைவுகளை ஒற்றை நேர்கோட்டுத் தன்மையில் வைத்து விளங்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொன்றும் பல்வேறு முரணியல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட வேறொரு ஒற்றைக் கருத்துரு வாக்கத்தினுள் - கருத்தியல் வன்முறையாகவும் - இயங்குகிறது. வைதீகத்துக்குச் சார்பான பதிவுகளை, கருத்துக்களை முன்வைப்பதே அவரது ஒற்றை அறமாக உள்ளது. இம்முயற்சியே விஷ்ணுபுரம் தொடங்கிக் கொற்றவை வரையில் நீட்சி பெற்றுள்ளது.
கொற்றவை எனும் இப்புதினத்தை நவீன மொழி புணரமைக்கப்பட்ட சிலப்பதிகாரம் என்று கூறமுடியாது. சிலப்பதிகாரக் கருத்தியலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவாக்கமாகவே கருத முடிகிறது. அவைதீகம் சார்ந்த கருத்துக்களை மறந்தும்கூட இந்நாவலில் பயன்படுத்தாமல், அதற்கு எதிரான மொழியாடலையே பயன்படுத்துகிறார். இந்நாவலில் கவுந்தியை நீலிப் பேயாகவும் புத்தரை ஆலமர் செல்வனாகவும் - சிவனாவும் - புனைந்திருக்கிறார். இதன்மூலம் அவைதீகக் காப்பியம் வைதீகப் புனைவாக உருமாற்றம் பெற்றதென்பதை உறுதியாகக் கூற முடிகிறது. சமண சமயம் சார்ந்த சிலப்பதிகாரத்தை வைதீகச் சார்புடைய காப்பியமாகக் கட்டமைக்க, இளங்கோவடிகளைச் சரவண மலைக்குக் கொண்டுசென்று ஐயப்பனாக மாற்றுகிறார். இவ்வாறு திரித்துச் சித்திரிப்பதன் மூலம் சிலப்பதிகாரக் கதையை வைதீகமயப்படுத்துகிறார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12213:-2005&catid=1237:2010&Itemid=499

தமிழ்மகன் கட்டுரை
வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.

கொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.

இதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெரியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.

இதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.

கபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.

நிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற்கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.

நாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.

புயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.

இப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.

மகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புதுக்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.

வரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...

கடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...
அங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....

பரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...

இது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.
கொற்றவை
ஜெயமோகன்,
தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14.
ரூ. 280
http://tamilmagan.blogspot.in/2011/03/blog-post_21.html

அரவிந்தன் நீலகண்டன் - கட்டுரை

பேராசிரியர் அ.கா.பெருமாளின் ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் ‘ நூலின் முகப்பில் ‘நகர் நடுவே நடுக்காடு ‘ எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின் ‘மக்களிடையே புழங்கும் ஐதீகங்களைத் திரட்டி அவற்றுக்கு குறியீட்டு ரீதியான விளக்கம் அளித்து வரலாற்றை அறிதல் ‘ மற்றும் ‘மானுடவியல் ரீதியிலான பார்வை ‘ எனும் முறைகளை சிலாகிக்கிறார்.(பக். 11) 

பின்னர் நாட்டாரியல் தகவல்களை மிக அதிகமாகப் பயன்படுத்திய முன்னோடி ஆசிரியர் என மிகச்சரியாகவே டி.டி.கோசாம்பியை பாராட்டும் அவர் கோசாம்பியின் பிரபலமான ‘ஐதீகமும் உண்மையும் ‘ எனும் நூலிலிருந்து ஒரு உதாரணத்தையும் அளிக்கிறார். ‘நிலையான வாழ்க்கை கொண்ட வேளாண் குடிகள் தாய் தெய்வங்களை வழிபட்டன. நிலையற்ற அலைச்சல் கொண்ட இடையர் குடிகள் எருமை (மகிஷம்) போன்ற தெய்வங்களை வழிபட்டன.நாட்டார் தெய்வ மரபில் ஒரு இடத்தில் மகிஷன் தேவியின் கணவனாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கோசாம்பி கண்டடைகிறார். இரு குலங்களும் நட்புறவு கொண்டதை அது காட்டுகிறது என்கிறார். பிறகு வேளாண்குலம் இடைக்குலத்தை வென்றதை மகிஷாசுரமர்த்தினி மகிஷனைக் கொல்லும் ஐதீகம் காட்டுகிறது என்கிறார். ‘ (பக். 12) 


நாட்டாரியல் தரவுகள் நம் வரலாற்றாசிரியர்களால் வேண்டிய அளவு அல்ல மிகக்குறைந்த அளவில் கூட சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான்.ஆனால் மார்க்சிய வரலாற்றாசிரியரான கோசாம்பி போன்றவர்களால் அது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட முடியும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டினை துரதிர்ஷ்டவசமாக ஜெயமோகன் ஒரு ஆதர்ச எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். பிரச்சனை என்ன ? அடிப்படை பார்வையே பிரச்சனைதான். ஜெயமோகனின் வார்த்தைகளில், ‘மக்கள் வாழ்ந்த முறை தெரிய வேண்டும். அவர்களுடைய பொருளியல் உற்பத்தி விநியோக முறைகள் மிக முக்கியமானவை. அவை குறித்த நேரடி தரவுகள் இல்லாத நிலையில் வரலாற்றை அறிய டி.டி.கோசாம்பி மக்களிடையே புழங்கும் ஐதீகங்களைத் திரட்டி அவற்றுக்கு குறியீட்டு ரீதியான ‘ விளக்கம் அளிக்கிறார். 

ஆக, ஐதீகங்களின் குறியீட்டு ரீதியான விளக்கம் என்பது உடனடியாகவே மிக முக்கியமான பொருளியல் உற்பத்தி விநியோக முறைகளை குறித்த தரவுகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப பயன்படுகின்றன. அதுவும் எத்தகைய பொருளியல் உற்பத்தி விநியோக முறைகள் ? ஆக கோசாம்பியின் பார்வையில் அவை மார்க்சிய சித்தாந்த பார்வை கூறும் வரலாற்று ரீதியிலான பொருளியல் உற்பத்தி விநியோக முறைகளன்றி வேறென்ன ? எனவே என்னாகிறதென்றால் சித்தாந்த ரீதியில் அகவயப்பட்ட ஒரு கருதுகோளுக்கு ஏற்றவாறு தரவுகள் சிதைக்கப்பட்டு முன்வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மகிஷனும் தேவியும் இரு இனக்குழுக்களின் குறியீடுகளாகவும், மகிஷாசுரமர்த்தினி ஐதீகம் இனக்குழுக்களின் கலப்பினைக் காட்டுவதாகவும் அவர் முன்வைக்கும் பார்வைக்கு எந்த அளவு மகிஷாசுரமர்த்தினி குறித்த புராணம் குறுக்கப்பட்டு அதன் அனைத்து பரிமாணங்களிலிருந்தும் சிறியதாக்கப்பட வேண்டியுள்ளது. 

பாரத இடையர் குடிகள் குறித்த தரவுகள் எனில் ரிக் வேதத்திலிருந்தே தொடங்கலாம். அவை எவற்றிலும் மகிஷ தெய்வத்திற்கு சிறிய அளவில் கூட ஆதாரமில்லை. அவ்வாறே தமிழ்நாட்டு இலக்கியங்களிலும். ஒரு வேளை கிருஷ்ணன், தேவியின் சகோதரனாகியதைக் கூட இரு இனக்குழுக்களின் இணைப்பென்பதற்கு சான்றாக கூறலாம் ஆனால் மகிஷாசுரமர்த்தினி குறித்த புராணக்கதை ? பன்மை அதிகமாகக்கொண்ட பாரத தேசத்தில் பல கதைகள் உள்ளன. இதில் ஒரு கதையில் ஒருகுறிப்பிட்ட உறவுமுறை கூறப்படுவதை கொண்டு பல்லாயிரம் வருட பரிணாமம் கொண்ட ஐதீகங்கள் குறித்த வரலாற்று சித்திரத்தை கோசாம்பி தன் சித்தாந்த பார்வையில் உருவாக்க முயல்வது எத்தனை சரியானது ? 

ஒரு ஐதீகம் ஏறக்குறைய ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி போல உருபெற்று இன்று நம் பொது பிரக்ஞையில் இடம் பெறுகிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உயிரியலாளர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் ? ஒரு ஒற்றை தொல்-உறை உயிரின தரவு கொண்டு , அதன் தளத்தையும் அத்தளத்தின் காலத்தையும் மற்றும் அவ்வுயிரினத்துடன் தொடர்புடைய பிற தரவுகள் அனைத்தையும் கணக்கில் எடுக்காமல், ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாற்றை ஒரு உயிரியலாளன் கூற முற்பட்டால் என்னவாகும் ? 

மகிடத்தை வெல்லும் பெண் உருவ வடிவங்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலேயே நமக்கு கிடைக்கின்றன. ‘வெற்றி வெல்போர்க்கொற்றவை ‘ குறித்து திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இந்த வெற்றி வெல் போர் மகிடனை வதைத்ததே என்பர். அக நானூறு அவள் காட்டுமறவர்களால் வழிபடு தெய்வம் என்பதை கூறுகிறது. (ஓங்கு புகழ் கான் அமர் செல்வி – அக:345:3-4) ‘பெருங்காட்டு கொற்றி ‘ என அவளை கலித்தொகை (89:8) கூறும். 

பின்னாளில் உருவாகி இன்று ஏறத்தாழ பாரதம் முழுவதும் மிகப்பிரபலாமாகியுள்ள மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரப் பாடல் வரிகள் வெளிப்படையாகவே பழம் தமிழ் இலக்கியங்களின் கொற்றவையின் சித்திகரிப்பின் சம்ஸ்கிருத மொழி பெயர்ப்பேயாகும். ‘விந்திய மலையின் உச்சியில் வாழ்பவள் ‘, (சைலஸுதே – மலைமகள்), ‘வெற்றி அருள் மகிஷாசுரமர்த்தினி சிவனின் துணைவியே மலைமகள் ‘ ‘துணிவான வேடுவர் பெண்டிரின் தெய்வம் ‘, ‘மலைமீதுள்ள வீடுகளில் வேடுவரோடு கூடி மலைமீது நடப்பவள் ‘, ‘வேடுவ பெண்டிருக்கு மன ஆனந்தம் அளிக்கும்படி விளையாடுபவள் ‘ என்றெல்லாம் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கூறும். ‘கடவுள் வாகைத் துய்வீ ‘ எனும் பதிற்றுப்பத்து வரிக்கு ‘வெற்றி மடந்தையாகிய கடவுள் ‘ என்பார் பழைய உரைக்காரர். ‘வெற்றிக்கொற்றவை ‘ என்று கூறும் திருமுருகாற்றுப்படை(259). 

அதனை நச்சினார்க்கினியார் ‘வெற்றியை உலகிற்கு கொடுக்கும் வனதுர்க்கை ‘ என்பார். எருமை ஒரு தெய்வத்தின் பெயராக பழம் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறதென்றால் அது யமன். கலித்தொகை இவனை எருமை என்றே கூறுகிறது (கலி. 101:25, 103:43) இந்திரனைக் காட்டிலும் யமனே சங்கப்பாடல்களில் அதிக அளவில் கூறப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் யமனோ எவ்விதத்திலும் இடையர் குல சிறப்புக்கடவுளாக கொள்ள தரவுகள் இல்லை. 

என்னகூற வந்தேன் என்றால், கொற்றவையில் தன் வேர்களைக் கொண்ட மகிஷாசுரமர்த்தினியை ஐரோப்பிய கருத்துருவாக்கமான ‘Fertility Goddess ‘ ஆக்குகிறார் கோசாம்பி. எனவே அவள் வேளாண் இனக்குழு தெய்வமாகிறாள். அனைத்து பெண் தெய்வங்களும் அடிப்படையில் தாய் தெய்வங்களாக உருவானவைதான் என நாம் நிறுவப்படாத பழைய மேற்கத்திய கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் கூட பிரச்சனை என்ன ? வேளாண் இனக்குழு தெய்வமாக அவள் இடையர் குலத்துடனான கலத்தலையும் வெற்றியையும் ஈட்டுகிறாளா அல்லது வேடுவ இனக்குழு தெய்வமாக அவள் இடையர் குலத்துடனான கலத்தலையும் வெற்றியையும் ஈட்டுகிறாளா ? ஒரு வேளை வேடுவ இனக்குழுவும் வேளாண் இனக்குழுவும் ஒன்றுதான் என நாம் கருத வேண்டுமா ? பொதுவாக வேடுவ நிலையிலிருந்து வேளாண் நிலைக்கு முந்நகராத வேடுவக்குழு முன்னகர்ந்த சமுதாயத்தின் அன்னை தெய்வத்தை தன்னுடன் எடுத்துக்கொண்டதா ? அல்லது வேளாண் சமுதாயம் தன் படையாக வேட்டுவ சமுதாயத்தினை பயன்படுத்தி இடையர் இனக்குழுவை வெற்றிக்கொண்டதை மகிஷாசுரமர்த்தினியின் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றனவா ? 

இவையெல்லாம் எத்தனை இழுக்கப்பட்ட செயற்கையாக உருவாக்கப்பட்ட வரலாற்று ஊகங்கள் என்பதை சொல்லவேண்டியதில்லை. இதற்கெல்லாம் எவ்வித வரலாற்று சான்றுகளும் இல்லை. பாரதத்தின் பல இனக்குழுக்கள் அவற்றின் தெய்வங்கள் அவற்றின் புராணங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பல்லாயிர வருட பரிணாம வரலாற்றின் விளைவாக உருவானவை இன்றைய ஹிந்து புராணங்கள். அவை அனைத்து தள மக்களிடையேயும் இயங்கியவாறே உள்ளன. அனைத்து தள மக்களையும் பிணைத்து ஒன்றாக அதே நேரத்தில் முகமிழக்காமல் வேரறுந்து ஒற்றைப்பரிமாண மனக்கோளமொன்றில் அடைத்துவிடாமல் தனித்தன்மையுடன் முன்னகரும் உயிர்த்தன்மை கொண்டதாக அப்புராணங்கள் விளங்குகின்றன. 

துரதிர்ஷ்டவசமாக ஜெயமோகனும் சரி கோசாம்பியும் சரி புராணங்களின் பன்மைச் செயல்பாடுகளை மறுதலித்து அவர்கள் மிக முக்கியமானதாக கருதும் பொருளியல் உற்பத்தி விநியோக முறைகளினை பிரதிபலிக்கும் தரவுகளாக பார்க்கின்றனர். இதில் திரு.ஜெயமோகனின் தரப்பு சிறிதே மாறுபடுகிறது. ஒரு தளத்தில் தனி மனித அகவயப்பாதையில் புராண மற்றும் தொன்ம படிமங்களின் வலியை நன்றாக உணர்ந்திருப்பவர் அவர். ஆனால் சமுதாய தளத்தில் மற்றெந்த முற்போக்கு அறிவுஜீவியையும் போல அவர் மார்க்சிய ‘அற ‘ உணர்வால் உந்தப்படுபவராக தன்னை தானே கருதிக்கொள்கிறார். ஆக, தான் புகுந்த வீடான மார்க்சியத்தில் தன் பிறந்த வீட்டு பாரம்பரியத்தை இணைக்க வேண்டிய உளவியல் தேவைக்காக அவர் மார்க்சியத்தையும் பாரதிய ஞான மரபையும் முடிச்சு போடும் நிலைபாடுகளை தேடுகிறார். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும், கோவை ஞானியும், கோசாம்பியும் அவரது பிரச்சனையின் மிக அருகிய தீர்வாக அவருக்கு காட்சியளிக்கின்றனர். (ஆனால் ஹிந்துத்வ ‘பாசிஸ்டான ‘ எனக்கு தெரிவதென்னவோ அவர்களது ஸ்டாலினிஸ்டு சித்தாந்தங்களின் நிலைப்பாடுகள்தாம்.) 

துரதிர்ஷ்டவசமாக, அக்மார்க் இடதுசாரிகளோ இந்த அளவு பாரதியத்தையும் கூட ஏற்கத்தயாராயில்லை. ஏனெனில் ஜெயமோகன் இன்னமும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் முதல் குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்கள் வரை உற்பத்தி உறவுமுறைகளில் ஆதிக்கசக்திகள் ஏற்படுத்திய அபினி அல்லது வரலாற்று முன்னேற்ற பாதைகளில் சீரழியும் தேக்கநிலை காண முயலும் கருவிகள் எனும் நிலைபாட்டிற்கு வரவில்லை என்பதே காரணமாம். ஆனால் அவர்கள் நம்பிக்கை தளர வேண்டியதில்லை- குறிப்பாக ‘இந்நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகமாக மாற்றி பழைமையில் இணைத்து விடும். ‘ என்று மார்க்ஸ் விஷ்ணுபுர வரிகளில் சேவை சாதிக்கும் போது.
-

ராம் பிரசாத் விமர்சனம்

ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்.
ஒரு கதையை எழுதி முடித்த பின் ஆரம்பத்தையும், முடிவையும் அடித்துவிட வேண்டும், அதுபோலவே ஒரு கதையைப் படிக்கும் முன்பாகவும் ஆரம்பத்தையும், முடிவையும் அடித்துவிட்டு படிக்க வேண்டும் எனச் சொன்ன ஆன்டன் செகாவ், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். கதை படிப்பது பற்றிய அவரின் யோசனையை நான் பொதுவாகச் செயல்படுத்திப் பார்ப்பேன்.
ஆரம்பம் மற்றும் முடிவு என்பது கொற்றவையில் உள்ளபடி.
பகுதி – ஒன்று நீர் எனத் துவங்கும் அத்தியாயத்தின் முதல் வரி -
“அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ”
உரை வகுத்தது என முடியும் கடைசி அத்யாயத்தில் கடைசி வரி -
“ஆம், நீலம் ஒரு புன்னகை.”
இந்தச் செய்தியை நீக்கிவிட்டுப் படித்தாலும் கொற்றவை, ஒரு ஜோதிகாவின் (ஆரெம்கேவி) முகூர்த்தப் பட்டுப்புடவை போல பல வண்ணங்களை உள்ளடக்கியது. பஞ்ச பூதங்களையும், ஐவகைப்பெரு நிலங்களையும் கொற்றவையில் ஒரு பட்டுப்புடவையில் நெய்த வண்ணங்கள் போல அமைத்திருப்பது அருமை. மேலும், புத்தர், முருகன், கார்க்கி எனப் பலரும் இதில் திடீரென நடுவில் வருகின்றனர்.
மேலும், எந்தப் புத்தகத்திலும் முதலில் கடைசி அத்யாயத்தைப் படித்துவிடும் பழக்கமுடைய எனக்கு கொற்றவை ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. கடைசி அத்தியாயம் ‘தன்மை’ நடையில் சாதாரணத் தமிழில் மிக அழகாக கன்னியாகுமரி அனுபவத்தை ஜெயமோகன் சொல்வதுபோல இருந்தது. ஆனால் முதல் அதியாயத்தின் தமிழும், அதன் சொற்களின் அணிவகுப்பும் முற்றிலும் வேறு வகையில் பிரமிக்க வைத்தது. என் தமிழ் அறிவில் நான் முதன் முதலில் தமிழ் அகராதியின் துணையுடன் படித்த முதல் புத்தகம் இதுவே.
பொதுவாகப் புத்தகங்களை ஒல்லி, குண்டு என அடையாளம் காணும் என் மனைவியின் பார்வையில் குண்டு புத்தகமான இது நான் வாங்கியபோது ஏக வசவுடன் (விலை அதிகம்) என் வீட்டு நூலகத்துக்கு நுழைந்தது.
நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சற்று சிரமப்பட்டேன் என்பது உண்மை. சராசரியாக ஒரு வரி என்பது இந்த புத்தகத்தில் ஆறு வரிகள், கமா போட்டு அல்லது போடாமல் எனத் தொடர்ச்சியாகவும் மற்றும் புழக்கத்தில் இல்லாத தமிழ் சொற்களுடன்.
சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் கிடையாது என்று ஒரு பைபிள் வசனம் உண்டு. ஆனால், ஜெயமோகன் ” மேற்கே அடர்ந்திருந்த பெருங்கானகம் முலை கனிந்து சுரந்த நீர் காட்டின் தாவர இருளுக்குள் நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்தது. அதை வானம் பார்த்ததே இல்லை. வேர்நுனிகள் மட்டுமே அதன் தன்மையையும் சுவையும் அறிந்திருந்தன.”என எழுதியுள்ளது எனக்கு ஒரு அழகான புரிதல்.
இந்த புதுக்காப்பியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் முலை. அதுவும் பல கோணங்களில், பல பொருளில்.
காமம் சார்ந்த இடங்களையும் சூழ்நிலைகளையும் வெளிப்படையாக எழுதுவதில் ஜெயமோகன் சற்று தடுமாறுவதாக நான் எண்ணுவதுண்டு. இந்த புத்தகத்திலும் என் எண்ணம் மெய்ப்பட்டுள்ளது. ஆனால், தத்துவார்த்தமாக காமத்தை எழுதுவதில் இவர் வல்லவர் என்பதும் என் எண்ணம். அந்த வகையிலும் ஜெயமோகன் ஏமாற்றவில்லை.
(பக்கம் 105 முதல் 111 பக்கம் வரை).
குலக்கதையாக வந்த (பக்கம் 186), மருதி, விஞ்சயன் – எனக்கு இதுபோலவே வேறு ஒரு கதையை நினைவுபடுத்தியது.
கேரளத்தை பரசுராம க்ஷேத்திரம் என்றும் சொல்வர். பரசுராமர் என்பவர் விஷ்ணுவின் அவதாரம். இவரின் அம்மா, அப்பா ரேணுகா மற்றும் ஜமதக்னி முனிவர். இம்முனிவரிடம் காமதேனு இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ரேணுகா தம் கணவரின் பூஜைக்குத் தண்ணீர் மொண்டுவர ஆற்றின் ஓரத்தில் உள்ள மண்ணில் பானை செய்து அதில் தண்ணீர் கொண்டு வருவது தினப்படி வழக்கம். ஒரு நாள் அந்த அம்மையார் வானில் சென்ற தேவன் ஒருவனின் நிழலை ஆற்றில் கண்டு என்ன அழகு என ஒரு கணம் வியந்து பின் தெளிந்து தண்ணீர் மொள்ள மண்ணில் பானை செய்ய முற்படும்போது பானை செய்ய வரவில்லை. ஜமதக்னி முனிவர் ஞானதிருஷ்டியில் நடந்ததை அறிந்து பரசுராமரிடம் தம் மனைவி, பரசுராமரின் அம்மாவின் தலையை வெட்டும்படி உத்த்ரவிட பரசுராமரும், உடனே தன் தாயாரின் தலையை வெட்டிவிட்டாரம். முனிவர் தம் மகனின் உடனடி கீழ்ப்படிதலுக்கு மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, பரசுராமர் தம் தாயார் உயிருடன் மறுபடித் தனக்கு வேண்டும் எனக் கேட்க ரேணுகா மறுபடியும் உயிர் பிழைத்து வந்ததாக ஒரு கதை உண்டு.
இக்கதையில் உள்ள புவியியல் செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தும். ரேணுகாவின் கோயில் படவேடு என்னும் இடத்தில் இருக்கிறது. இது ஒரு கிராமம். வேலூரிலிருந்து ஆரணிக்குப் போகும் வழியில் சுமார் 40 கிலோமீட்டரில் உள்ளது. ரேணுகாவின் மகன் பரசுராமர் பெயர் பெற்றது கேரளத்தில். கொடுங்கோளூர் அம்மன் பற்றியும் கொற்றவையில் ஜெயமோகன் எழுதியுள்ளார். பரசுராமர் இவர் பார்வையில் படாமல் போனது எனக்கு வியப்பு.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால், அவர் எழுதிய ஒரு கட்டுரை, ஆறாவது விரல் என்ற பெயரில் ஜூனியர் போஸ்ட் என்ற இதழில் (இப்போது இது வருவதில்லை, நின்றுவிட்டது) விகடன் பிரசுரம் – தொடராக வந்தபோது எழுதியது எனக்குக் கோவலன், கண்ணகிக் கதை பற்றிய ஒரு வித்தியாசமான புரிதல் தந்தது.
புனைவு (நடிப்பு), மற்றும் நாடகம் என்ற ஒரு அமைப்பு மற்றும் செயலுக்கு எதிராக யோசித்து எழுதப்பட்ட காப்பியம் இது என்று அதில் சொல்லப்பட்டிருக்கும். இந்தக் காப்பியத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடனம் / நாடகத்தினை முன்னிறுத்திச் சொல்லப்பட்டிருக்கும். ஒன்று கோவலன் மாதவி சந்திப்பு ஒரு நடனம் / நாடகம் என்ற மனகிழ்ச்சி நிகழ்ச்சியின் வாயிலாக. அதுபோல இரண்டாவதாக பாண்டியன் தவறுதலாகக் கோவலனைக் கொல்லச் சொன்னதும் ஒரு நடனம் / நாடகம் என்ற மனமகிழ்ச்சி நிகழ்ச்சியின் வாயிலாக. எனவே தான் கண்ணகி மதுரையை எரித்த செய்தியைச் சொல்லும்போது கடைசியாக எரிந்தது நாடகக் கொட்டகை என்று முடிக்கப்பட்டிருக்குமாம்.
இந்தப்பொருளில் (இதே வார்த்தை அமைப்பில் அல்ல) வந்த அக்கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
பல சம்பவங்கள் கொற்றவையில் சுவாரசியமாக உண்டு. உதாரணமாக, (பக்கம் 189)
நீலி அவள் கரங்களைப் பற்றி, “நீ காணும் முதல் மருத மழை இது” என்றாள். “மருதத்தில் வானமும் ஒரு சேற்று வயலாகிறது என்று சொல்வதுண்டு. உனக்கு மழையைப் பார்க்கும் ஒரு விழியை அளிக்கிறேன். எந்த விழி தேவை என்று சொல்.”
“எத்தனை நாள் எப்படிக் கொட்டினாலும் மழையை ஒரு கணம் கூட வெறுக்காத ஓர் உயிரின் கண்” என்றாள் கண்ணகி.
“நீ கேட்பது தவளையின் பார்வை” என்று நீலி சிரித்தாள். கோரை படர்ந்த பாதி விளிம்பில் இருந்த பெரிய தவளை ஒன்றின் துறித்தக் கண்களைக் காட்டி “இனி உன் விழியில் அதன் நோக்கு” என்றாள்.
இந்தக் காப்பியத்தில் பல நிகழ்ச்சிகள் நடப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னமே தெரியும் என்ற ஒரு பாவனையில் உள்ளது. பிறவிப்பறு வாவியின் கரையில் ஓவியப்பாவைக்கும், கோவலனுக்குமான உரையாடல் (பக்கம் – 262) மிகவும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்.
மனித இன நூலருக்கும், மனித இன ஆராய்ச்சிக்கும் (anthropological) பல நுணுக்கமான விவரங்கள் இதில் அடிக்குறிப்பு, பின்னிணைப்பு இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.
சில ‘அது போல இது’ என வரும் உவமைகள் இக்காப்பியத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
காற்றில் சருகு எழுதிச் செல்லும் பாதையை யார் அறிவார் ? வானமே அறியும்.
அதுபோல ஜெயமோகனின் எழுத்து முதிர்ச்சி எதை நோக்கி என்பதை யார் அறிவார் ? வாசகராகிய நாமே அறிவோம்.
நன்றி