அன்புள்ள ஜெ.,
கொற்றவை வாசித்துக்கொண்டிருக்கையில், எனக்கு வரலாற்று உணர்வு என்று 
ஒன்று  முதன்முதலில் உருவான தருணத்தை நினைத்து நினைத்து வியந்தேன். எனக்கு 
ஐந்து, ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் சென்னையில் வசித்து வந்தோம். 
விடுமுறை நாட்களில் பத்து நாள் மதுரைக்கு ரயிலேறி வருவது வழக்கம். என் 
தந்தைவழியில் சொந்த ஊர் மதுரை. அப்படி ஒரு முறை வைகை ரயிலில் வரும் போது 
அம்மா கண்ணகி கதை சொன்னாள். கணவனை தீர விசாரிக்காமல் அநியாயமாக கொன்ற 
நெடுஞ்செழியன் அவையில் சிலம்பெறிந்து நீதிகோரி தலைவிரித்து நிற்கும் 
கண்ணகி, தன் முலையறுத்துவீசி மதுரையை எரிக்கிறாள். என் ஐந்து வயது கண் 
முன்னால் உருவமற்ற மாடங்கள் எரிந்து சரிந்தன.
“அப்புறம் மதுரைக்கு என்ன ஆச்சு?” என்று அம்மாவிடம் நான் 
கேட்டேன்.”அப்புறம் என்ன? திருப்பி கட்டிருப்பா,” என்றாள் அம்மா. “எரிஞ்சு 
போன ஊரு மேலேவா?” என்றேன் நான். அம்மா ‘உம்’ என்றாள். “அப்போ மதுரைக்கு 
அடியில இன்னொரு மதுரை இருக்கா? அதுக்கு அடியில? அதுக்கும் அடியில? 
வந்துண்டே இருக்குமா?”
அம்மாவுக்கு அன்று நான் உணர்ந்த அளவில்லா வியப்பு புரியவில்லை. ஒரு 
நகரத்தை எரிக்க முடியும், அந்த எரித்த நகர் மீது மற்றொரு நகரை கட்ட 
முடியும் என்ற அந்த கருத்து எனக்கு வரலாற்றின் கதவுகளை வீசித்திருந்தது. 
காலமெல்லாம் ஊறிப்பெறுகி நம்மை அடையும் வரலாற்றின் குளிர்காற்றை அன்றே 
முதலில் உணர்ந்தேன். அதன் பிறகு நான் மதுரை மண்ணை, நாங்கள் வாழ்ந்த வீடு 
இருந்த பகுதியை, கோயிலை, அதை சுற்றிய ஆடி, சித்திரை, மாசி வீதிகளை 
காணும்போதெல்லாம் என் எண்ணங்கள் மண்ணிற்கு அடியிலேயே அடக்கி வைத்த விம்மலாக
 நிற்பதை உணர்ந்துள்ளேன். நிலத்தை ஒரு மிகப்பெரும் வாள் கொண்டு ஆழத்தின் 
அடிவரை சொருகி, குறுக்காக வெட்டி, பிளந்து எடுத்துப்பார்த்தால் 
எத்தனையெத்தனை  நிலங்கள் அடுக்கடுக்காக புதைந்து கிடைக்கும்! நாம் வாழும் 
இந்நிலம், இத்தருணம், எத்தனை மனிதர்களின் கனவுகள் மீது கட்டப்பட்டுள்ள 
சிம்மாசனம். கையை குறுக்காக கிழித்து சதையை நெம்பினால்  தோல், தசை, நரம்பு,
 குருதி, எலும்பு என்று அடுக்குகள் தெரிவது போல காலத்தையும் நிலத்தையும் 
கிழித்துக் காணவே என் உள்ளம் துடித்தது. பள்ளியில் வரலாற்றை நான் மிகவும் 
விரும்பிப் படித்தேன், ஆனால் அது போதவில்லை. வரலாறு என்ற சொல் என்னுள் 
உருவாக்கும் முதல் சித்திரம், என் காலடியில் புதைந்துள்ள கோவலனின் 
எலும்புகளும் எரியுண்ட அம்மதுரை நகரின் மாடங்களும் தான்.
பல வருடங்கள் பிந்தி, என் பதின் பருவத்தில் உயிரியல் மூலம் வரலாற்றை 
பற்றிய அடுத்த திறப்பு ஏற்பட்டது – நம் மரபணுக்களும் ஒரு வகையில் 
வரலாற்றுச்சுவடுகள் தான் என்று. மனித வரலாற்றின் தொடக்கத்துடன், ஏன், 
பூமியில் உயிர் உருவான முதல் தருணத்துடன் அச்சரடு என்னை இணைத்தது என்று 
புரிந்த போது குதூகலமாகவும் வியப்பாகவும் இருந்தது. மனிதனையும் சேர்த்து 
எல்லா உயிருள்ளவைகளும் வரலாறு தாங்கி வருபவை, வரலாற்றின் அசைவுகளால் 
உருவாக்கப்படுபவை, அந்த வரலாறு, எழுத்து பிறக்கும் முன்பே நம் மரபணுக்களில்
 எழுதப்பட்டவை என்று விளங்கியது. நம் முகங்களும் மூக்கின் நீளமும் காதின் 
அகலமும் முடியின் சுருளும் தோலின் நிறமும் வரலாற்றின் பதிவேற்றிய குரல். 
நாம் வாழ்ந்து வந்த சூழலையும் நிலத்தையும் நாம் உண்ட உணவையும் புணர்ந்த 
மனிதர்களையும் குறிப்பவை அவை. ஒவ்வொரு மனிதனும் அதுவரை நிகழ்ந்த ஒட்டுமொத்த
 வரலாற்றின் வடிகட்டல். இதை நான் நினைக்கும் கணம் தோறும் சொல்லிழுக்கும் 
வியப்பில் ஆழ்த்திவிடுகிறேன்.
“கொற்றவை”யில் நான் கண்ட வரலாற்றுச்சித்திரம் இவ்விரண்டையும் அடக்கி, 
கடந்து விரியும் மூன்றாம் வகை. ஆழ்மனப்பதிவுகளையும் படிமங்களையும் 
சார்ந்தது. மனிதனின் ஆழ்மனம் ஒரு வரலாற்றுக்களஞ்சியமாக அறிமுகம் செய்கிறது.
 ஆழ்மனப்படிமங்கள் மூலமாக வரலாற்றை காணும்போது அது காலத்தையும் தூரத்தையும்
 ஒரு பொருட்டென்றே கருதாமல், இன்று, இப்போது, நமக்கு மட்டுமான, நாம் 
என்றும் அறிந்து என்றோ மறந்த  ஒரு வரலாறாக நம்மை வந்தடைகிறது. எல்லா 
காட்சிகளும் எங்கோ, எப்போது கண்டவை. நன்கு தெரிந்தவை. அணுக்கமானவை. அவை 
நான் வாழும் நிலப்பரப்பையும், நான் பருகும் நீரையும், நான் காணும் 
மரங்களையும் மலர்களையும் மாந்தரையும் சார்ந்தவை. என்னால் நிலத்தை 
திருப்பிப்போட்டு புதைந்த உலகங்களுக்குச் செல்ல முடியாது. என்னால் என் 
மரபணுவினுள் புகுந்து இடிபாடுகளை எச்சங்களை கொண்டு நான் உருவாகிவந்த கதையை 
மறுகட்டமைப்பு செய்து காண முடியாது. ஆனால் என் நிலத்தோடும், என் உடலோடும் 
உயிரோடும் மரபோடும் பிணைந்துள்ள என் ஆழ்மனம், அதில் நிழல்போல புகைபோல 
எழுந்து கலையும் சித்திரங்கள், அவை சொல்லும் கதை ஒன்றுண்டு, அந்தக் கதையை 
கேள், அந்நாடகம் விரிவதை காண் என்று “கொற்றவை” மறுபடியும் மறுபடியும் 
கூவுகிறது.
இப்படி ஒரு மாற்று வரலாற்றுச்சித்திரம் (புராணச்சித்திரம் என்று 
சொல்லலாமா?) சாத்தியம் என்று நிறுவி,தமிழ்மனத்தின் வரலாற்றை இம்முறைகொண்டு 
பெரும் காப்பியமாக உருவகித்து, வாசகர் மனத்தை அவர்கள் ஆழ்மனம், அவர்கள் 
சுயவரலாறு நோக்கி செலுத்தியதே “கொற்றவை”யின் பெரும்சாதனையாக 
எனக்குப்படுகிறது. வேறு விதத்தில் சொன்னால், கோவலனின் எலும்பு புதைந்த 
கண்ணகி எரித்த மதுரை, நிலத்திலும் மரபிலும் மட்டும் புதைந்திருக்கவில்லை. 
என் ஆழ்மனத்திலும் அந்நகரின் வேர்கள் உள்ளன. “மதுரைக்கு என்ன ஆச்சு?” என்ற 
என் கேள்வி நிலமதுரையை பற்றி அல்ல, சீட்டுக்களால் அடுக்கப்பட்டதுபோல 
கட்டப்பட்ட ஒரு கற்பனையூரை பற்றி. சீட்டுக்கள் காலத்தின் போக்கில் கலைந்து 
கலைந்து விழுகின்றன, மீண்டும் கட்டப்படுகின்றன, அனால் இன்றே அச்சீட்டுகளில்
 என்ன வரையப்பட்டுள்ளது என்று காண அதை விரல்நடுங்க திருப்பிப்பார்க்க 
முடிந்தது.
அடிக்கடி எனக்கு வரும் ஒரு கனவு: நீள்ஜடை இடுப்பு வரை தொங்கும் யாரோ ஒரு
 பெண் ஏதோ அபூர்வமான நிறங்களைக் கொண்டு கோலமிடுகிறாள். அது ஒரு முகத்தின் 
சித்திரம். ஆனால் யார் முகம் என்று எட்டிப் பார்க்கும் முன் கோலம் 
கலைந்துவிடும், நான் முழித்துக்கொள்வேன். இது பலமுறை வந்துள்ளது, ஒரு முறை 
கூட அந்த முகத்தை கண்டதில்லை. ஆதலால், மணிமேகலை ஆபிரிக்க மலைக்குகையில் தன்
 முகம் கொண்ட பாவை சித்திரத்தை காணும் தருணம் வாசிக்கும் போது நான் ஒரு 
கணம் மூச்செடுக்க மறந்தேன்.
காப்பியத்தில் மணிமேகலை தெய்வத்தைக் மாதவி மகள் மணிமேகலை காண்பதை 
கவித்துவமாக, கற்பனைபூர்வமாக மறுஆக்கம் செய்த அவ்விடம் அழகு. ஆனால் அதையும்
 தாண்டி, “கொற்றவை”யின் வரலாற்றுச்சித்திரம் முழுவதற்கும் அந்த ஒரு காட்சி 
பதம். எங்கோ நீர் தாண்டி நிலம் தாண்டி மொழி தாண்டி இனம் தாண்டி தன் 
முகத்தையே தெய்வத்தின் முகமாக மணிமேகலை காணும் போது சிலிர்த்தேன். 
அதற்கடுத்த சில கணங்கள் என் நினைவில் இல்லை.
இப்போது சிந்திக்கையில், அவள் மணிமேகலை தெய்வம் மட்டும் அல்ல, 
தமிழ்த்தெய்வம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மானுடத்தின் ஆதி அவளே. அவள் 
தாங்குவது நம் முகம். அவளை தரிசிப்பது வரலாற்றின் கண்ணாடியில் பார்ப்பது. 
ஒன்றில் ஒன்று மோதி மோதி விரியும் நேரெதிற் கண்ணாடி பிம்பங்களே வரலாறு. 
ஆனால் இது பின்னால் நான் யோசித்து உருவாக்கி புரிந்துகொண்டது. 
வாசிக்கும்போது அந்த முகம் உப்பும் நுரையுமாக  என்னை அடித்துச்சென்ற ஒரு 
பேரலை, அவ்வளவுதான்.
“கொற்றவை” வாசிப்பு தோறும் சி.ஜி.யுங் நினைவுக்கு வந்தார். அவர் வகுத்த 
“ஆர்கிடைப்” கருதுகோளிற்கு ஏற்ப “கொற்றவை”யில் ஆழி, அன்னை, பாதம், நாகம், 
தீ, மலை போன்ற படிமங்களின் வழியே வரலாறு விரிவடைகிறது. நான் அடிப்படையில் 
நரம்பணுவியல் ஆராய்ச்சி செய்பவள். மனித மூளையில் இப்படிப்பட்ட படிமங்களின் 
உருவாக்கம் பற்றி ஆரம்பகட்ட நிலையிலேயே  ஆராய்ச்சி நடந்துள்ளது. இதுவரை 
நமக்குத் தெரிந்த சில அடிப்படைகள் –  (மனிதன் உட்பட) குரங்கினங்களின் 
மூளைகளில் தன் இனத்து முகங்கள் விசேஷமாக சித்தரிக்கப்படுகின்றன. குரங்கு 
மூளைகளில் பாம்புகளின் உருவங்களுக்கும் அப்படி விசேஷ சித்தரிப்பு உள்ளது. 
மற்ற காட்சிகளை விட பாம்பு உருவங்கள் குரங்கு மூளையால் விரிவாக கண்டடையப் 
படுகின்றன என்றும், அவ்வுருவங்களுக்கென குரங்கு மூளையில் தனி, விரைவுப்பாதை
 ஒன்று இயங்குவதாக சமீபத்தில் கண்டடையப்பட்டது. குரங்குகள் வாழும் 
காடுகளில் அவைகளுக்கு பாம்புகளால் பேராபத்து என்பதால் பரிணாம வளர்ச்சியில் 
குரங்கு மூளை பாம்பை விசேஷமாக சித்தரிக்க கற்றுக்கொண்டுள்ளது என்றும், 
பாம்புகளுடன் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தின் அழுத்தத்தால் தான் மனித 
மூளை பெரிதாக, அதிநுட்பமாக உருவாகியது என்றும் கூட ஒரு தத்துவம் 
முன்னிறுத்தப்பட்டுள்ளது (Snake detection theory). ஆக, மனிதன், மனிதன் 
ஆவதற்கு முன்பே அவன் மூளையில் சுமந்தலைந்த படிமங்களும் குறியீடுகளும் அவன் 
வந்த பாதையை சித்தரிக்கலாம். அவன் கதைகளும் குறியீடுகளும் அந்த உயிரியல் 
நிதர்சனத்தின் நீட்சியாக, அதன் திரிப்பாக இருக்கலாம். பாம்பை வளைத்தும், 
பாம்பை கழுத்தில் சுற்றியும், பாம்பு மேல் எரியும் மனித மனம் அதை 
கடந்திருக்கலாம். எப்படி என்றாலும், இம்முறைகளை கறாரான வரலாற்றாய்விற்கான 
ஒரு கருவியாக இன்று நினைத்துப்பார்க்க முடியவில்லை. மூளையின் அமைப்பை 
புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் நரம்பணுவியல் அடிப்படையில் மனித 
வரலாறு ஒன்று உருவாகி வரலாம்.
சுசித்ரா ராமச்சந்திரன்