அன்புமிக்க ஜெ,
கொற்றவை மீண்டும் வாசித்தேன்."கரும்பாறை மீது காலமெல்லாம் காதலுடன் தழுவிச்சென்றாலும் காற்று அதில் இணைவதில்லை!!!"
எத்தனைவலிமையான சொற்கள்.கண்ணகியுடன் கோவலனின் உறவை இதைவிட விளக்க வார்த்தைகளில்லை. கொற்றவையின் மொழி என்னை இழுத்து மூழ்கிடச் செய்கிறது.ஒவ்வொரு அன்னையின் கதையும் வாழ்வும் மண்ணில் வீறுகொண்டு எழும் விதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.சொல்லப்போனால் உலகின் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இத்தகைய கதைகள் உருக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கின்றன.
கொற்றவையின் தனித்தன்மை கொண்ட மொழி எனக்களிக்கும் உவகையை விவரிக்க முடியவில்லை.மொழியின் சரளமும் வலுவுமே நான் வாசிக்க காரணங்கள்.சொற்கள் எனக்களிக்கும் பேருவகையைப் போல் வேறில்லை.
கம்பனின் தமிழில் மயங்கி மீண்டும் மீண்டும் முணுமுணுத்ததுக் கொண்டே நானிருந்த நாட்களுண்டு.பாரதியும்,கம்பனும் வார்த்தைகளின் வலுவை எழுத்தில் வரித்தவர்கள.
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி தடவியதோ ஒருவன் வாளி"
தாமரை விளக்கந்தாங்க
தண்டலை மயில்கள் ஆட"
போன்ற வரிகள் கம்பனை என் மனதில் என்றும் நிறைப்பவை.
ஜெ, கொற்றவையின் மொழியும் அப்படித்தான் என்னுள் செல்கின்றன.உங்களின் ஆகச்சிறந்த உச்சமாக என் மனதில் தோன்றுவது இப்படைப்பே.
மூவகைத்தீயும் முறைகொண்டு ஆளும் மண்ணே பாலை.
கானலை உண்டு நிழல்கள் மண்ணில் கிளை பரப்பி தழைக்கும் காடு அது.
பாலை நிலத்தைப் பற்றிய இவ்வுரை ஒருவிதத்தில் வாழ்வில் இன்னல்களை கணந்தோறும் எதிர்கொண்டு தன்னுள் கானலைக் கருக்கொள்ளும் பெண்ணின் நிலையைத் தான் கூறுகிறது.வாழ்வில் துன்பங்களைக் கடந்து பிறருக்கு எல்லையில்லா உழைப்பை அளிக்கும் அன்னையரின் நிலை தானே அது.
எரி என்னும் பகுதியில் தீயின் வர்ணனை என் உள்ளத்தை எரித்தது.
" தீ தொட்டபின் எதுவும் அழுக்கு இல்லை.தீயுண்ணும் அனைத்தும் தீந்மை.தீயுண்ணவே தூய்மை என் ஆயிற்று."
" பச்சைப் பசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் தாய்முலைப் பாலிலும் தீ உறைகிறது என்றனர்."
எத்தனை நுணுக்கமான விளக்கம்.தீயின் வெம்மையை மனதில் உணராமல் இதைக் கூறிவிட முடியாது.பச்சைப் பசுங்குருத்தின் தூய்மை பசுமை நெருப்பாக உணரப்படுவது அதன் தூய்மையாலே,யாரும் தீண்டா அரியதாலே என்றே நான் புரிந்து கொள்கிறேன்.குளிர்ச்சுனை நீரை என் இளமையில் அருந்தியதை நினைக்கிறேன்.மரங்களின் நிழலில் பாறையின் இருண்ட பள்ளத்தில் ஊறிய நீர் தான் தண்ணீர் என நான் உணர்ந்ததுண்டு.நீரின் தண்மையை குளிர்வைச் சுனையில் அறியலாம்.ஆனால் அதனுள்ளும் தீயின் தன்மையை ஒப்பிடுகிறீர்கள்.தூய்மையின் உச்சமாகவே தீயை உணரவைக்கிறீர்கள். தாய் முலைப் பாலிலும் அதனை உணரவைக்கிறீர்கள்.இங்கும் அழுக்கில்லா,முழுமை எனவே உணர முடிகிறது.
இப்படி கொற்றவை முழுவதும் வரும் ஒப்பீடுகளும்,வார்த்தைகளும் நிகரற்றவை.நவீன புனைவு என்பதன் மிகச்சிறந்த வெளிப்பாடாக இதனை உணர்ந்து வாசிக்கிறேன்.
தென்திசை குமரியும்,நீலி கூறும் நீரர மகளிரும்,ஆதிமந்தியும்,கண்ணகியும்,மாதவியும்,குறமகளும் ....ஒவ்வொரு குறியீடு.ஒவ்வொரு வாழ்வும் உணர்த்தும் நிலைகள் எத்தனை ,எத்தனை.
"விடைவராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்?"
கருவறைத் தனிமையில் இருந்த தாய்த்தெய்வமொன்று தன் நாடும் காடும் குடியும் தொடியும் பாலையும் காண எழுந்தது."
இத்தகைய வார்த்தைகளின் கணம் என்னை உருக்குகிறது.வாழ்வில் நான் உணர்ந்த வெறுமைகளைத் தனிமைகளை இலக்கியத்தில் அறியும் கணங்கள் இவை.
சிறிய வயதிலேயே வாழ்வில் வஞ்சங்களையும்,துரோகங்களையும்,வதைகளையும் கண்டு விலகி வந்த மனநிலை கொண்டவள் நான்.என் மனதை நிறைப்பவை இத்தகைய எழுத்துகளே.எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலை ,கனவுகளைத் தருபவையே உண்மை படைப்புகள்.
மிகச்சிறந்த மனநிலையுடன் கொற்றவையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் முடிக்கவில்லை.
நல்ல வாசிப்பனுபவம்.
நன்றி
எம்
No comments:
Post a Comment